PUBLISHED ON : மார் 04, 2011

1. கிளாடு பெர்னார்டு!
மனிதன் உணவு உண்டபிறகு, அவ்வுணவு ஜீரணமாகும் போது உடலுக்குள் என்னென்ன மாறுதல்களை அடைகிறது, உணவு செரித்து சத்தாக மாறி எந்தெந்த உறுப்புகளை எவ்வாறு சென்று அடைகிறது என்பன போன்ற விஷயங்களை, மிகத் தெளிவாக அளித்தவர் கிளாடு பெர்னார்டு என்ற பிரெஞ்சு நாட்டு மருத்துவ மேதை.
கல்லீரலின் செயற்பாடு குறித்தும் தமது ஆராய்ச்சி மூலம் மிகவும் பயனுள்ள தகவல்களை அவர் அளித்தார். 1888ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் பிறந்த பெர்னார்டு முதலில் மருத்துவக் கல்வியில் நாட்டங் கொள்ளவில்லை. தாம் ஒரு சிறந்த நாடக ஆசிரியராக எதிர்காலத்தில் புகழ்பெற வேண்டும் என்ற ஆவலுடன் அவர் ஏராளமான நாடகங்களை எழுதிக் குவித்தார்.
பெர்னார்டு அக்காலத்தில் மருத்துவத் துறையில் பேரும் புகழுடன் விளங்கிய நண்பர் ஒருவரிடம், தாம் எழுதிய நாடகங்களையெல்லாம் படித்துக் காண்பித்தார். பொறுமையாக நாடகங்களைப் படித்துப் பார்த்த நண்பர் சற்றும் தயங்காமல் பெர்னார்டை நோக்கி, ''உமக்கும் நாடகத் துறைக்கும் ஒத்துவராது. உடனடியாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து டாக்டராக முயற்சி செய்யும்!'' என்று கூறினார்.
அந்தச் சொற்கள் பெர்னார்டுவின் மனத்தைச் சங்கடப்படுத்தியதால் நன்கு யோசித்துப் பார்த்த பிறகு, அதுதான் சரியான வழி என்று அவருக்கு தோன்றியது. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து டாக்டராகப் பட்டம் பெற்றார்.
மருத்துவத் தொழில் செய்து பொருள் குவித்ததோடு, அவர் உடலியல் தொடர்பாகப் பல ஆராய்ச்சிகளைத் தீவிரமாக நடத்திப் பல உண்மைகளைக் கண்டறிந்து அறிவித்தார். கிளாடு பெர்னார்டு தமது 50வது வயதில் மரணமடைந்தபோது, உடலியல் ஆராய்ச்சித் துறையில் ஒப்புயர்வற்ற மேதை என உலகம் போற்றிப் புகழ்ந்தது. இந்த மேதைக்குள் இருக்கும் ஆற்றலை கண்டுப்பிடித்து அறிந்த இவரது நண்பர் உண்மையிலேயே மேதைதான்.
2. சாலமன் ஆண்ரீ!
ஸ்டாக்ஹோம் நகரில் தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞர் சாலமன் ஆண்ரீ. அந்தக் காலத்தில் வானத்தில் பறந்து சாதனையாற்றும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருந்தனர். ஆகாய விமானம் கண்டு பிடிக்கப்படாத காலம் அது.
சாலமன் ஆண்ரீக்கும் பலூன் மூலம் வானத்தில் பறந்து சாதனையாற்ற வேண்டும் என்ற ஓர் ஆசை. வானத்தில் சாதாரணமாகப் பறப்பது மட்டும் போதாது, வடதுருவப் பகுதிக்குப் பலூன் மூலம் பறக்க வேண்டும் என்ற துணிகரமான முடிவுக்கு அவர் வந்தார்.
அவருடன் அவருடைய நண்பர்களான ஸ்டிரின் பெர்க், பிராஸ்கெல் ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டனர். 1897ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் நாள் ஆண்ரீயும், அவரது நண்பர்களும் டேன் தீவிலிருந்து பயணத்தை தொடங்கினர். அவர்கள் பலூன் மூலம் வானத்தில் பறந்து செல்லும் காட்சியைத் திரளான மக்கள் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிந்தனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு கப்பல் மாலுமிகள் சிலர் ஆண்ரீயும் நண்பர்களும் 145 மைல்களுக்கு அப்பால் பறந்து சென்று கொண்டிருப்பதாக ஒரு தகவலைக் கூறினர். அதற்குப் பிறகு அவர்களைப் பற்றிய தகவலே இல்லை. பலர் குழுக்களாகச் சேர்ந்து அவர்களைத் தேடிச் சென்றனர். ஆனால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
1930ம் ஆண்டு நார்வே நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் ஒருவர், வடதுருவப் பகுதிக்கு சென்றபோது அண்மையில் மூன்று பிணங்கள் கிடப்பதைக் கண்டார். அவர்கள் ஆண்ரீயும், அவர் நண்பர்களும் எனப் பின்னர் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது.
சாதிக்க வேண்டும் என்ற தீரமிக்க ஆவலால் உந்தப்பட்ட அந்த வீர இளைஞர்கள் தங்கள் உயிர்களையே தியாகம் செய்து விட்டனர்.
***
