PUBLISHED ON : மார் 04, 2011

அனைவருக்கும் எனது அன்பு
வந்துட்டேன்யா.. வந்துட்டேன்யா...
ஹாய்... ஹாய்... எங்கே எங்கள் அங்குராசு என, தேடி தவித்த அன்புள்ளங்களுக்கு, அடியேனின் நெஞ்சார்ந்த நன்றிகள்!
சிரிச்சா அழணும்!
யாராவது அழகா சிரிச்சுக்கிட்டே இருந்தா, உடனே பசங்க, 'டேய்! இப்படி சிரிக்கிறானே இவன் நிச்சயம் நிறைய அழுவான்' என்பர். சிலர் பயந்து கொண்டு, அதிகமாக சிரிக்க மாட்டாங்க! இன்னும் சிலரோ, தங்களை அடித்தோ, கிள்ளியோ கொள்வர். 'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்' என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
நோய் என்றால் வியாதி மட்டுமல்ல, சோகம், துன்பம் ஆகியவைகள் கூடதான் ஓடிப்போகும். எவ்வளவுக்கு எவ்வளவு சிரிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அழுவோம் என்று சொல்வதை நம்ப வேண்டாம். அப்படி சொல்வதை இப்படி வேறு அர்த்தத்தில் எடுத்து கொள்ளுங்கள். அதாவது, நிறைய சிரித்தால் கண்ணீர் வரும் அது ஆனந்த கண்ணீர்! யாராவது சிரித்து கொண்டிருந்தால் இன்னும் நிறைய சிரித்து சிறப்படைவாய் என்று வாழ்த்துங்கள்.
யாராவது அழுது கொண்டிருந்தால் இனி அழவே மாட்டாய். வாழ்வில் எப்போழுதும் இனி உனக்கு சிரிப்பு தான், சந்தோஷம் தான் என ஆறுதல் கூறுங்கள்!
லாலிபாப் டீச்சர்!
'லாலி பாப்' என்பது நம்மை மாதிரி வால்கள் சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே! எப்படி டீச்சர் வந்தாங்கன்னு பார்க்கறீங்களா? இன்னும் தொடர்ந்து படியுங்களேன்!
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் 'லாலி' என்றால் 'நாக்கு' என்று அர்த்தம். நாக்கால் வருடி சுவைத்து விட்டு லாலியை உதடுகள் மூடியவாறு வெளியே எடுக்கும் போது 'பாப்' என்று சத்தம் வரும். அது தான் லாலி பாப். மேலை நாடுகளில் பள்ளிக் குழந்தைகள் தெருவை கடக்கும் போது அவர்களை அழைத்து வரும் டீச்சர் குறுக்கே கோடுகள் போட்ட வட்டமான அட்டை ஒன்றை உயர்த்தி பிடிப்பர். வாகனங்களுக்கு குட்டீஸ் வருகின்றன என்பதை எச்சரிக்க! அவரை லாலிபாப் டீச்சர் என்று அழைப்பர்.
ஒன்பது வயதிற்குள்!
மூளைக்குள் மொழிகள் கற்றுக்கொள்ள வைக்கும் செல்கள் ஒன்பது வயது வரைதான். ஏராளமாக கொந்தளித்து கொண்டு இருக்கும். பிறகு மெள்ள மெள்ள அந்த செல்கள் மறைய தொடங்குகின்றன என்று கண்டுப்பிடித்து இருக்கின்றனர்.
அதாவது, ஒன்பது வயதுக்குள் 10 மொழிகளை கூட சுலபமாக கற்று கொள்ள முடியும். வயதானால் சற்று சிரமம் தான். ஆனால், அப்பொழுதும் கூட முயற்சி செய்தால் எதுவும் முடியும். ஆர்வம் முக்கியம்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, எந்த மொழியையும் முழுக்க கற்று< அதில் மேதையாக 15 ஆண்டுகள் எல்லாம் கூட பத்தாது!
ஏன்! வாழ்நாளே கூட போதாது!
இதோ ஒரு மொழி!
நம் இந்திய நாட்டோடு வெகு முன்பு இருந்தே தோழமையுடன் இருந்து கொண்டு இருக்கும் நாடு ரஷ்யா. ரஷ்ய மொழியைப்பற்றி விவரமாக விளக்குவது சிரமமான வேலை. சுருக்கமாக ரஷ்ய மொழி எப்போது பிறந்தது என்பதற்கு திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லை.
ஆனால், 17-ம் நூற்றாண்டுக்கு முன்பு ரஷ்யாவில் 'சர்ச்ஸ்லாவோனிக்' என்கிற மொழிதான் எழுதப்பட்டும், பேசப்பட்டும் பிரபலமாக இருந்தது. இன்று சுமார் 20 கோடி மக்கள் ரஷ்ய மொழி பேசுகின்றனர். ரஷ்ய மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஒரே தாய்தான்!
பண்டைய இந்தோ யூரோப்பியன் மொழி! 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 'ஜார் மன்னர் பீட்டர் தி கிரேட்' ஆண்ட போது ரஷ்ய மொழியின் எழுத்துக்கள் மாற்றப்பட்டன. ரஷ்ய மொழியின் எழுத்துக்கள் அடிப்படையில் ஆங்கிலம் அல்ல. கிரேக்க, ரோமன் மொழியில் இருந்து வந்த ஸைரிலிக் எழுத்துக்களில் இருந்து வந்தது. ரஷ்ய மொழி பேசுவதற்கு சிக்கலானது. சென்னை, மதுரை, கோவை தமிழ் மாதிரி விதவிதமாக பேசலாம்! என்ன ரஷ்ய மொழியை கற்க ஆசை வருகிறதா?
வரட்டும், வரட்டும் நல்ல ஆசை! எதிர்காலத்தில் பெரிய ரஷ்ய கவிஞராகவோ எழுத்தாளராகவோ தாங்கள் உருவாக வாழ்த்துக்களுங்கோ!
அன்புடன்
அங்குராசு
***
