PUBLISHED ON : டிச 25, 2021

சென்னை, சாந்தோம், புனித ரபேல் பெண்கள் பள்ளியில், 1953ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி வளாகம் மிகப்பெரியது; தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டன. வளாகத்தில் வாழை, தென்னை மற்றும் மலர் செடிகள் ரம்மியமாக காட்சி தரும்.
ஒரு நாள், வகுப்பு இடைவேளையின் போது, என் தங்கையுடன் கண்ணாமூச்சி விளையாடினேன். வாழைத்தோட்டத்தில் ஒளிந்தவள், பழுத்திருந்த குலையில், ஒரு வாழைப்பழத்தை பறித்து தின்று விட்டாள்.
அடுத்த வகுப்பின் போது, தலைமை ஆசிரியை அருட் சகோதரி பென்னட், என் தங்கையை விசாரித்து, 'இறை வணக்க கூட்டம் நடக்கும் திடலில், பழம் பறிப்பது போல் கையை துாக்கி பாவனை செய்தபடி, 1 மணி நேரம் நிற்க வேண்டும்...' என நுாதன தண்டனை கொடுத்திருந்தார்.
அழுதபடி நின்றவளை ஏளனமாக பார்த்து சென்றனர் மாணவியர். இந்த காட்சி என் மனதில் பதிந்தது. சொந்தம் இல்லாத எதையும் தொடக்கூடாது என முடிவு செய்தேன்.
இப்போது என் வயது, 81; இன்றுவரை பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டது இல்லை.
இப்பண்பை செயலால் கற்றுத் தந்த அந்த தலைமை ஆசிரியையை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- சுசீலாமேரி ராஜா, கோவை
