PUBLISHED ON : டிச 25, 2021

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, எஸ்.பி.கே.கே.எஸ்.எஸ்.தியாகராஜர் மெமோரியல் மெட்ரிக் பள்ளியில், 2001ல், 1ம் வகுப்பு படித்த போது, நிகழ்ந்த சம்பவம்!
அன்று, பள்ளி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, 'புதிதாக கட்டியுள்ள பாட்டி வீட்டை பார்க்க வா...' என அழைத்தாள், தோழி ஹரிப்ரியா. அறியாத வயதில் ஆவலோடு துள்ளிக் குதித்து ஓடினேன்.
அழகிய பெரிய வீட்டை சுற்றி காட்டிய பின், பக்கத்து தெருவுக்கு ஓடிவிட்டாள்.
மெய் மறந்து பார்த்து நின்ற நான், அருகில் தோழி இல்லாததை கண்டு அதிர்ந்தேன். வீடு செல்ல வழி தெரியாமல் அழுதபடியே, கால் போன போக்கில் நடந்தேன்.
அந்த வழியே மிதிவண்டியில் வந்தவர் விசாரித்தார். என் சீருடையை அடையாளம் கண்டு பள்ளிக்கு பத்திரமாக அழைத்து வந்தார். பதற்றத்துடன் காத்திருந்த வகுப்பாசிரியை பிரமராணி, மகிழ்ச்சியில் ஆரத் தழுவி நிம்மதி பெருமூச்சு விட்டு வீட்டில் சேர்த்தார்.
மறுநாள் வகுப்பில், தொலைந்து போகும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்கள், துன்பங்கள், பெற்றோர் படும் அவதி என பலவற்றையும் அன்பு கனிய எடுத்துரைத்தார் வகுப்பாசிரியை. அன்று அவர் கூறிய அறிவுரைதான், இன்றும் ஒவ்வொரு செயலையும் கூர்மையுடன் முடிக்க துாண்டுகிறது.
என் வயது, 24; எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து, தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அன்று பத்திரமாக அழைத்து வந்தவரையும், அன்பாக அறிவுரைத்த ஆசிரியையும் நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- க.ப்ரியங்கா, மதுரை.
தொடர்புக்கு: 94434 47409
