PUBLISHED ON : செப் 10, 2022

சென்னை, சவுகார்பேட்டை, எம்.பி.யு.உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 9ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியராக இருந்தார், ஆர்.சடகோபன். செல்லமாக அவரை, ஆர்.எஸ்.ஜி., என அழைப்பர். வலது கன்னத்தில், பெரிய மச்சம் இருக்கும். நடிகர் சிவாஜி கணேசன் நடித்த, தெய்வமகன் திரைப்படம் வெளியாகியிருந்த காலம் அது.
கன்னத்தில் பெரிய தழும்புடன் காட்சியளிப்பார் சிவாஜி. அந்த கதாபாத்திரத்துடன், தமிழாசிரியரை ஒப்பிட்டு, 'தெய்வ மகன்' என கேலி செய்வர். அதை கேட்டால் உணர்ச்சி வசப்பட்டு திட்டி கண்டிப்பார். அந்த கல்வியாண்டில் பள்ளியில் சிறு கலவரம் ஏற்பட்டது. கும்பலுடன் இருந்ததால் கலவரக்காரர் பட்டியலில் என்னையும் சேர்த்து விட்டார் தமிழாசிரியர்.
இதனால், தேர்வு முடிவை நிறுத்தி வைத்திருந்தார், தலைமை ஆசிரியர். அது குறித்து விசாரித்த என் தந்தை, 'தாய் இல்லாத குறை தெரியாமல் மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்த்து வருகிறேன். அவன் உண்டு, படிப்பு உண்டு என இருக்க கூடியவன். பிற மாணவர் செயலுக்கு, என் மகன் தண்டனை அனுபவிக்க வேண்டுமா...' என கேட்டார்.
என் பதிவேடுகளில் சிறந்த மதிப்பெண், முழு வருகையைக் கண்டு மனம் குளிர்ந்த தலைமை ஆசிரியர், 'இவன் கலவரத்தில் ஈடுபட்டானா...' என விசாரித்தார். தயங்கியபடியே, 'கும்பலில் இருந்ததால் சேர்த்துவிட்டேன்...' என வருத்தம் தெரிவித்தார் தமிழாசிரியர். பின், என் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கவனம் ஊன்றி படித்து உயர் கல்வியில் தேறி, பதிப்பக மேலாளராக பணி செய்து வந்தேன்.
அங்கு, 2004ல் அந்த தமிழாசிரியரை சந்தித்தேன். அறிமுகம் செய்தபடி பழையதை நினைவு படுத்தினேன். நெகிழ்ந்து நலம் விசாரித்தார். மிகவும் மகிழ்ந்தேன். இப்போது, என் வயது, 65; பள்ளியில் அன்று நடந்த சம்பவத்தை மறக்க இயலவில்லை.
- ரா.பிரேம்குமார், சென்னை.
