PUBLISHED ON : மே 23, 2020

பவானி ஆற்றில் குளித்து, மறுகரைக்கு செல்ல தயாரானது யானை. மறுகரையில் சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தது பன்றி. குளித்து சுத்தமாக வந்த யானையைப் பார்த்ததும் பொறாமை கொண்டு, சேறுபூசி அசுத்தமாக்க திட்டமிட்டது பன்றி.
ஆற்றின் குறுக்கே போட்டிருந்த பாலம் மிக குறுகலானது; பாலத்தை கடக்கும் யானையின் குறுக்கே புகுந்து, சேற்றை பூச திட்டமிட்டது.
பாலத்தில் யானை வருகைக்காக காத்திருந்தது.
பன்றியைக் கண்டதும் சுதாகரித்த யானை, கரையிலேயே ஓரமாக ஒதுங்கிக் கொண்டது. ஓடிச் சென்று ஏமாந்தது பன்றி. மீண்டும் முயன்றால் வம்பு என பயந்து, மறுகரைக்கு போய் விட்டது.
ஏமாற்றத்தை சமாளிக்கும் விதமாக, எதிரே வந்த நரியிடம், 'பார்த்தாயா இந்த யானையை... சுத்த பயந்தாங்குளி. என்னைக் கண்டு மிரண்டு திரும்பி கரையில் ஒதுங்கிடுச்சு...' என்றது பன்றி.
அதைக் கேட்டு சிரித்த நரி, 'முட்டாளே... சுத்தமாக குளித்துவிட்டு போகிறது யானை. நீயோ, அழுக்குடன் திரிகிறாய்... உன்னை, ஒரே மிதியில் கொன்று கடந்து போயிருக்கலாம் யானை. ஆனால், மிதித்து தன்னை அழுக்காக்க விரும்பாமல் ஒதுங்கிப் போகிறது. பயந்து ஒதுங்குவதாக நினைக்காதே...' என்று அறிவுரைத்தது.
செல்லங்களே! உலகில் நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு; தீயவர்களை கண்டால் ஒதுங்கிப் போவதே நல்லது.
- மல்லிகா குரு
