PUBLISHED ON : ஏப் 15, 2011

அவன் தூங்கி விழித்த போது, பொழுது நன்றாகவே புலர்ந்திருந்தது. தொட்டுவிடும் தூரத்தில் தண்ணீர். எங்கும் ஒரே நிசப்தம். 'ஓ! அந்த தேவதை சொன்ன இடம் இது இல்லை. கடல் நீரை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கும் கொடிய முதலைகள் கூட்டம். மிக சீற்றமாக வாலை சுழற்றி அடித்துக் கொண்டு சுற்றி சுற்றி விடும் என்றாளே... ஆனால், இப்போது நீரில் ஒரு அசைவு கூட இல்லையே... ஒருவேளை நான் தான் இரவு நேரத்தில் வழிதவறி வேறு ஒரு இடத்திற்கு வந்து விட்டேனா!' என்று குழம்பித்தவித்தான்.
திரும்பப் போய்விடலாம் என்று, தீர்மானித்தவன் தன் குதிரையை தட்டி எழுப்ப முனைந்த போது, திடீரென்று முதலைகள் கூட்டம் மிக ஆக்ரோஷமாக வாலை தூக்கி அடித்துக் கொண்டு மிக உயரமாக ஹைஜம்ப் அடித்து பற்களால் ஒன்றை ஒன்று கடித்து ரகளை அடிக்க, எங்கே இந்த கோர ஜென்மங்கள் தன் மேல் குதித்து தன்னையும் தன் குதிரையையும் கடித்து தின்று விடுமோ என்று குலைநடுங்கிப்போய், ''ஐய்யோ'' என்று கத்தினான்.
அப்போது ஒருமணி ஓசை!
''குள்ளனே! பயந்து ஓடாதே;''
குரல் கேட்டு திரும்பினான். கையில் ஒரு பெரிய வெள்ளி மணியுடன் அந்த தேவதை.
''குள்ளனே!நீ என்னிடம் ஒப்புக்கொண்டபடி இவைகளுக்குரிய கப்பத்தை செலுத்திவிடுகிறியா?'' என்றது.
அவன் தயங்கினான்.
''என்ன தயக்கம்?''
''நான் இரண்டாம் முறையாக கேட்கிறேன். பதில் சொல்.''என்றது.
ஆவேசமாக வெறி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த அந்த முதலைகள் கூட்டம் ஒரேடியாக வாயிலிருந்த நீரை இவன் மேலும், குதிரையின் மேலும் வீசி அடிக்க, இவன் உடல் நனைந்து போய் பேசமுடியாமல் இருக்க... இவனுக்கு இணையாக இவன் குதிரையும் குளிர் தாங்க முடியவில்லை என்பதைப் போல் மிக பரிதாபமாக குரல் எழுப்பியது.
''ஏய்! குள்ளனே! மீண்டும் ஒருமுறை கேட்கிறேன். கப்பம் கட்டப் போகிறியா இல்லையா?'' என்று அதட்ட, வாயே திறக்க முடியாத நிலையில் என்ன பதில் சொல்லுவான்.
''இனியும் உன்னுடன் பேசிபொழுதைக் கழிக்க எனக்கு நேரமில்லை... இதோ நான் புறப்படுகிறேன்...'' என்று சொல்லி புறப்பட, என்ன ஆனாலும் சரி... என் இளவரசியை நான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதை முழுமையாக ஆக்கிரமிக்க சட்டென்று திரும்பி, ''தேவதையே! நான் கப்பம் கட்டத் தயார்.'' என்றான்.
உடனே, தேவதை முதலை கூட்டத்தைப்பார்த்து,''உம். உடனே திரும்பி விடுங்கள். இனி இந்த இடம் உங்களுக்கு சொந்தம் இல்லை. மரியாதையாக திரும்பி விடுங்கள்,'' என்று அதட்டினாள். உடனே, முதலைகளின் கூட்டம் கலைந்துவிட்டது. முதலைகள் மறைந்த உடன் குள்ளனுக்கும் தெம்பு வந்துவிட்டது.
''தேவதையே இப்போது சொல் நான் என்ன கப்பம் செலுத்த வேண்டும்...''
''உன் வலது கண்தான் என்று சொல்லி, உடனே தன் கைகளாலேயே குள்ளனின் வலது கண்ணை தோண்டி எடுத்து தன் சட்டைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டது.
குள்ளனால் வலியை தாங்க முடியவில்லை. ''என் இளவரசிக்காக நான் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்,'' என்ற எண்ணத்தில் வலியைப் பொறுத்துக் கொண்டான்.
''தட் இஸ் குட்!'' என்று அவன் அருகில் வந்து அவனைத் தட்டிக் கொடுத்த தேவதை... பயத்தால், கலங்கிக் கொண்டிருந்த குதிரையை தட்டிக்கொடுத்து, ''இனி எந்தவித பயமும் இல்லை... இந்த கடலை கடந்து உன் எஜமானரை 'மிஸ்டிக் லேக்' அருகில் அழைத்துப்போ... குள்ளனே! இந்த கடலை தாண்டியதும் குதிரையை அதன் போக்கிலேயே விட்டுவிடு, அதற்கு எங்கு போக வேண்டும் என்பது நன்றாக தெரியும்.''
''அக்குதிரையை கடற்கரை தண்ணீர் அருகில் அழைத்து அதன் காதில் ஏதோ சொல்லிற்று, அந்த தேவதை.
இரத்தம் கசியும் வலது கண்ணை கையால் மூடிக்கொண்டு, அக்குதிரை மேல் ஏறி அமர்ந்தான் குள்ளன். அந்த கடலைத்தாண்டிய குதிரை, தன்னிச்சையாக எவ்வித தயக்கமும் இன்றி பல காடுகள்...பூத்துக்குலுங்கும் பழ தோட்டங்கள்... நெஞ்சை அள்ளும் மணம் வீசும் பூந்தோட்டகள் என்று மனம் நிறைந்த இடங்களையும் தாண்டி கடைசியாக, உச்சிவேளையில் அந்த 'மிஸ்டின் லேக்' ன் கரையை அடைந்தது.
நிசப்தம் கிவ்விய அவ்விடத்தில் சலனம் ஏதுமின்றி அமைதி காத்து நின்றது அந்த ஏரி. குள்ளனும் அதன் கரையில் உட்கார்ந்து அந்த அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.
அந்த தேவதை கூறியபடி அந்த ஏரியின் தண்ணீர் இரத்தம் சிவப்பாக மாறிய பின்னரே, அவன் அந்த ஏரியில் இறங்க வேண்டும் என்று சொல்லியிருப்பது நினைவில் மின்ன விடிய, விடிய அங்கே உட்கார்ந்திருந்தும் ஏரியின் நிறம் மாறவில்லை... ஏரியில் எவ்வித சலனமும் இல்லை. மறுநாளும் அப்படியே!
அன்று மதியம் உச்சி வேளையில், திடீரென ஏரி மீது கரிய மேகம் மூட ஆரம்பிக்க... என்னவென்று திகைத்த குள்ளன் ஆகாயத்தை நிமிர்ந்து பார்க்க... அப்பாடி.... கிழக்கிலிருந்து மேற்காக ஒரு மிகப்பெரிய கடல் பறவை அந்த ஏரியை மூடுமளவிற்கு தன் மிகப்பெரிய இறக்கைளை விரித்து பறந்து வந்து கொண்டிருந்தது. அது மிக மெதுவாக கீழே இறங்கும் போது, அதன் வாயில் ஒரு மிகப்பெரிய மரத்தை கவ்விக்கொண்டிருந்தது. அந்த பெரிய மரம் முழுவதும் செக்கச்செவேல் என்ற பழங்கள். மரத்துடன் கீழே இறங்கிய அந்த பறவை அந்த பழங்களை ஒவ்வொன்றாக அம்மரத்திலிருந்து கொத்தி எடுத்து தின்று விட்டு...கொட்டையை அந்த ஏரியில் எறிந்தது... அந்த கொட்டை விழுந்த இடத்திலுள்ள ஏரித்தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும்
அந்த பறவை மிகவும் வயதானதாகத் தோன்றியது. இந்த வயதில் இதனால் எப்படி இத்தனை பெரிய மரத்தை தூக்கி வர முடிந்தது என்று, ஆச்சரியப்பட்டான் குள்ளன். வெகு நேரத்திற்குப் பிறகு மேலும் இரண்டு கடல் பறவைகள் மேற்கு திசையில் இருந்து பறந்து வந்து பெரிய பறவையின் அருகில் அமர்ந்து மேலும், நிறைய பழங்களைத் தின்று கொட்டைகளை அந்த ஏரியில் எறிய, ஏரியின் நிறம் ரத்த சிவப்பாக மாறிற்று. பழங்கள் முழுவதையும் தின்று தீர்த்தபின், பெரிய பறவையின் சிறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்து எறிந்துவிட்டு தங்கள் அலகால் அதனை வருடிக்கொடுத்தன. உடனே மிக மெதுவாக எழுந்த அந்த கிழப்பறவை மெதுவாக எம்பி அந்த ஏரியில் குதிக்க அடுத்த நிமிடமே புது இறக்கைகளுடன் மிக மகிழ்ச்சியாக கூவிக்கொண்டே மேலே எழும்ப, மற்ற இரண்டு பறவைகளுடன் கிழக்கு நோக்கி பறந்தோடி விட்டன.
அவைகள் போன பின், குள்ளன் தன் குதிரையுடன் அந்த சிவப்பு நிற ஏரியில் இறங்க எண்ணி அதன் கரையை அடைந்தபோது தண்ணீரில் காலை வைக்கும் முன் 'கிறீச்' என்று மிகப்பெரிய சப்தத்துடன் அந்த மூன்று பறவைகளும் கீழே இறங்கி குள்ளனின் தலையை சுற்றிவிட்டு கன்னா பின்னாவென்று சப்தங்களை எழுப்ப, பின்னர் வெகு உயரத்திற்கு பறந்து போய், அங்கிருந்து தலைகுப்புற மிக வேகமாக ஏரிக்குள் மூன்று பெரிய மலைகளைப் போல் விழ, அந்த ஏரியின் சிவப்பு நிறத் தண்ணீர் நாலாபுறமும் சிதறி அந்த மலையையே ஈரமாக்கியது!
அந்த தேவதை, 'நீ இந்த கடல் பறவைகளுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை செலுத்தாவிடில், உன் உடம்பிலும், உன் குதிரையின் உடம்பிலும் ஒரு சிறு துண்டு எலும்பு கூட மீதமிருக்காது' என்று சொன்னது நினைவில் தட்ட, பயத்தால் நடுங்கிப் போனவன், என்ன செய்வது என்று அறியாது திகைத்துப்போய் அப்படியே உறைந்து போனான்
திடீரென மணியின் ஓசை, ''கோழைகளின் அகராதியில் ஜெயதேவிக்கு இடமெயில்லை...''குரல் கேட்டு, எழுந்து நின்றான் குள்ளன்.
''இங்கே நீ ஒரு கோழையாகிப்போய் நடுங்கிக் கொண்டிருக்கிறாய்... அங்கே, அந்த இளவரசி உன் லிசா வசிய மருந்து சக்தியால் கட்டுண்டு தனிமையில் வெதும்பிக் கொண்டிருக்கிறாள். இது தேவையா சொல்.'' என்றது தேவதை.
லிசாவின் பெயரைக் கேட்டதும், அவனுள் ஒரு வீரியம் ஆட்கொள்ள... ''தேவதையே! நான் கப்பம் கட்ட தயார். என்ன வேண்டும் சொல். நான் ஜெயித்தாலும் இறந்தாலும் என் வாக்கை மீற மாட்டேன்.''
''எனக்கு உன் இடது கண் வேண்டும், என்று சொல்லி வெடுக்கென்று குள்ளனின் இடது கண்களை தன் கையால் பற்றி எடுத்து தன் சட்டைப் பையில் பத்திரபடுத்திக் கொண்டது தேவதை.வலியை தாங்கிக்கொண்டான் குள்ளன்.
''இது உனக்கு கடைசி சோதனை. நான் சொன்னபடி செய். நீ குதிரையின் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொள், நான் குதிரையை தண்ணீரில் இறங்கி விடுகிறேன். நீ குதிரையுடன் இந்த ஏரியில் நடந்தே செல்லவேண்டும். நீ அக்கரையை அடைந்ததும் உன் கண்பார்வையை திரும்ப பெற்று விடுவாய். பேசும் திறனுடன் நீ யார், எப்படி மாறினாய் என்று எல்லா விபரங்களும் மிகத் தெளிவாக உனக்குத் தெரியும். என் ஆசி உனக்கு எப்போதும் உண்டு. பயப்படாமல், செயலில் இறங்கு,'' என்று சொல்லி, குதிரையை தண்ணீரில் இறக்கி விட்டது தேவதை.
குதிரையை பிடித்துக்கொண்டே மிக மெதுவாக அடியெடுத்து வைத்து தண்ணீரில் நடந்தான் குள்ளன். கால்கள் அந்த ''மீஷன் லேக்''ன் கரையை தொட்டதும் அவனுக்கு கண்பார்வை கிடைத்துவிட்டது.குதூகலமாக கூச்சலிட்டான். கரைக்கு சற்றுதூரத்திலுள்ள மரத்தடியில் குத்து எரிவாளும், அதன் அருகில் ஒரு பெரிய 'ஷீல்டும்' இருப்பதைக் கண்டு அந்த இடத்தை நோக்கி செல்ல, சூரிய ஒளியில் பளபளக்க அந்த வெள்ளி ஷீல்ட்ல் ஒரு அழகிய மிக கம்பீரமான இளவரசரின் பிம்பம் பளிச்சிட... குள்ளனுக்கு முழுமையாக தன் கடந்த காலம் தெரிய வந்தது.
' இளவரசி லிசா தன் முறைப்பெண் அத்தை மகள். இளவரசியை இந்த கதிக்கு ஆளாக்கியது அந்த குனியக்காரிதான். இந்த போலி அரசருடன் சேர்ந்து தன்னை ஊமை குள்ளனாக்கிய விஷயமும் புரிந்தது. தன் நொண்டிக்குதிரை 26 மாறி வெள்ளி நகைகள் அலங்காரத்துடன், 'இளவரசே என்னை உனக்கு நினைவில்லையா... நான் தான் உன் செல்ல டைகர் ஹட்ஸ் உன்னைத் தவிர நான் யாரையுமே, என்னுடைய முதுகில் ஏற்றிக் கொண்டதே இல்லையே...'' என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு, அவனுடன் மிக செல்லமாக உரசிக்கொண்டது. கண்களில் நீர் பூக்க அப்படியே அதனை அணைத்து முத்தமிட்டான்.
''கிளம்புடா டைகர், நீ நூறுகால் பாய்ச்சலில் ஓட வேண்டும். இளவரசியை மீட்டு... எங்கள் இருவரையும் உன் முதுகில் சுமந்து நம் பழைய அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்டா...'' என்று உத்தரவிட்டு, அந்த ஷீல்ட் ஐயும் குத்து எரிவாளையும் கையில் எடுத்துக்கொண்டு ஒரே ஜம்ப் அடித்து டைகரின் மேல் உட்கார... அப்பப்பா... டைகரின் புயல்போன்ற ஒட்டத்தை என்னவென்பது. இளவரசின் கையிலிருந்த குத்து அரிவாள் பட்ட இடமெல்லாம் புல் பூண்டு அற்ற பூமியெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் பூத்துக்குலுங்கியது.
லிசா அடைப்பட்டிருக்கும் அந்த பாலைவனம் முழுவதும் மிகப்பெரிய பூஞ்சோலையாக மாறி விட, முழுநிலை திரும்ப லிசா தடுமாறினாள். புயல் வேகத்தில் ஒடிவந்த டைகர், 'மேடம்! இதோ நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்' என்பதைப்போல் குதிரை மகிழ்ச்சியுடன் வந்து கொண்டிருந்தது. குதிரையிலிருந்து குதித்த இளவரன், ''டார்லிங் லிசா'' என்று அவளை அணைத்துக்கொள்ள லிசா முழுப்பெண்ணாக மாறினாள்.
கிழவி குடிசையெல்லாம் அப்படியே மறைந்துவிட்டன. கிளிகள் கொஞ்சும் பூஞ்சோலையாக மாறியது.வெகுநேரமாக, லிசாவும் இளவரசரும் கொஞ்சிக் குலாவுவதைக் கண்ட டைகருக்கு ஒரே எரிச்சல். ''மிஸ்டர் குள்ளன்! போதும் உங்கள் கொஞ்சலும் குலாவுதலும் நாம் உடனே அரண்மனைக்குத் திரும்பவேண்டும். அரியணையில் அமர்ந்திருக்கும் இந்த போலிப்பயலை இழுத்துப் போட்டு மிதித்து சட்னி ஆக்க வேண்டும். அப்புறம், உங்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும். இத்தனை வேலைகள் இருக்கும்போது... கொஞ்சிக் குலாவ இதுவா நேரம்.'' என்று செல்லமாக ஜோக் அடித்தது,
''மிஸ்டர் நாவை அடக்குங்கள். நான் இந்நாட்டு மன்னன் என்னைப் பார்த்து மரியாதை குறைவாக பேசுகிறாய், இரு... இரு... அந்த தேவதையிடமே சொல்லி உனக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன்,'' என்று சொல்ல, இவர்களின் சண்டையை ரசித்த இளவரசி லிசா, ''என் அருமை டைகர்! நான் எப்போதும் உன் கட்சி. நாம் இருவரும் இந்த இளவரசரை படுத்தப்போகும் பாட்டை பார்! என்று சொல்ல, அங்கே நிலவிய அந்த மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்?
***
