PUBLISHED ON : ஏப் 15, 2011

இதுவரை: மின்னல்புரி அரசருக்கு வாரிசு இல்லாததால் பட்டத்து யானையிடம் மாலையை கொடுத்து அனுப்பினர். இனி-
கம்பீரமான பட்டத்து ஆண் யானையின் பெயர் மாதவன். அதன் இரு தந்தங்களும், வாயிலிருந்து இரண்டு மூன்றடி நீளத்துக்கு இருந்தது. முகத்தில் முகப்படாம் போட்டிருந்தது. பொன்னாலான முகப்படாம். அதில், பச்சை, சிகப்பு, நீல, வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
துதிக்கையில் மலர் மாலையை தூக்கிப் பிடித்து, தன் கால்களை மாற்றி மாற்றி வைத்து வந்தபோது, அதன் முதுகின் இருபுறமும், பட்டுத் துணியின் மீது தொங்கவிடப்பட்டிருந்த வெண்கல மணிகளும், கழுத்தில், சத்தியக் கயிறோடு கட்டப்பட்டிருந்த மணியும் ஒலித்து, 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருந்தது.
அது தன் சிறிய கண்களால், இருபுறமும் பார்த்துக்கொண்டு, எவரை மாலையிட்டு தேர்ந்தெடுப்பது என்ற யோசனையுடன் வருவது போல நிதானமாக வந்து கொண்டிருந்தது.
அவ்வப்போது அது, ஆங்காங்கு நின்று, சுற்றுபுறத்தில் இருப்பவர்களை ஆராய்வது போலவும் பார்த்தது.
வீதியின் இருபுறமும், பட்டத்து யானை, தங்கள் கழுத்தில் மாலையைப் போட்டு, தங்களை ஒரு அரசகுமாரனாகவோ அல்லது அரசகுமாரியாகவோ தேர்ந்தெடுக்காதா என்ற ஆசையிலும், ஆவலிலும் கூடியிருந்தனர் மக்கள்.
பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து, அது எவர் கழுத்தில் மாலையை சூட்டுகிறதோ, நாட்டின் அரச வாரிசாக அவர்கள் அங்கீகரிக்கப்படுவர். அதனால், பட்டத்து யானை மாலையோடு வரும் வழியில், சிறு வயது ஆண்களும், பெண்களும் மட்டுமே வீதியில் கூடியிருக்க வேண்டும். அவர்கள், குழந்தை பருவத்திலிருந்து, இருபது வயதை எட்டியவர்களாக இருக்கலாம். இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள், பட்டத்து யானை வரும் வழியில் கூடியிருக்கக் கூடாது.
சிறு வயதுக்காரர்கள் எக்காரணம் கொண்டும், பட்டத்து யானையை பராமரித்து வரும் யானைப் பாகன்களோடு உரையாடக் கூடாது.
இதுபோன்ற நிபந்தனைகள், பட்டத்து யானை துதிக்கையில் மாலையை பிடித்துக்கொண்டு அரண்மனையை விட்டு மின்னல்புரி வீதிகளில் நுழையும் முன்பே, நாட்டு மக்களுக்கு பறையடித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனால், ஒவ்வொரு வீட்டிலும் இருந்த இருபது வயதுக்கு அதிகமாகனவர்கள், தங்கள் குழந்தைகளை, தங்கள் வீட்டின் முன் நிற்கச் செய்துவிட்டு, எல்லாரும், தங்கள் வீட்டு மொட்டை மாடியின் மீது ஏறி, பட்டத்து யானை யாரை தேர்ந்தெடுக்கப்போகிறதோ! என்ற ஆவலில், யானை வருவதை பார்த்துக்கெண்டிருந்தனர்.
அப்போது, தாடியும், மீசையுமாக, கோலூன்றி நடந்து வந்தார் ஒருவர். பட்டத்து யானை செய்யப்போகும் அரிய செயலை பார்க்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு.
''பெரியவரே! பட்டத்து யானை பவனி வரும் வழியில், இருபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்று பறையடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இங்கிருந்து எங்காவது தூரப் போய்விடுங்கள்!'' என்று நகர காவலாளிகள் அவரை விரட்டினர்.
ஒரு வீட்டின் மாடியில் நின்றிருந்த அவர் வயதை ஒத்த ஒருவருக்கு, அந்த வயதானவரிடம் இரக்கம் ஏற்பட்டது.
''ஐயா பெரியவரே! நீங்கள் எங்கள் வீட்டு மாடிக்கு வாருங்கள். இங்கிருந்து பார்த்தால், பட்டத்து யானை வருவதையும், அது என்ன செய்யப் போகிறது என்பதையும் கண்டு மகிழலாம்!'' என்றார்.
அந்த தாடியும், மீசையும் முகத்தை மூடி மறைத்திருக்கும் முதியவர், படிக்கட்டில் கைத்தடியை ஊன்றியும், பக்கவாட்டுச் சுவற்றை ஒரு கையால் பிடித்தபடியும், மூச்சு வாங்க ஏறி மொட்டைமாடிக்கு வந்தார்.
அவர் சவுகரியமாக உட்கார்ந்து வீதியில் நடப்பதை பார்க்க வசதியாக ஒரு நாற்காலியை கொண்டு வந்து, கைப்பிடி சுவர் அருகே மர நிழல்விழும் இடத்தில் போட்டு, ''இதில் அமர்ந்துகொண்டு பாருங்கள் ஐயா!'' என்றார் வீட்டுக்காரர்.
அவரும், ''நன்றி!'' என்று சொல்லி அதில் அமர்ந்து வீதியைப் பார்த்தார்.
தனக்கு பரிட்சையமான சில குடும்பத்து இளம் பிள்ளைகளும், பெண்களும் தென்பட்டனர்.
''பூங்குழலி! நீ பட்டத்து யானை வரும் வழியில் நிற்க தகுதி படைத்தவள். அதனால், நீ இங்கே நின்று கொள். நான் அந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து நடப்பதை பார்க்கிறேன்!'' என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த ஒரு மரத்தின் மீதேறி, அதன் இலைகள் அடர்ந்த மரக்கிளைகளின் பின் தன்னை மறைத்துக்கொண்டு உட்கார்ந்தான் பொன்னன்.
பட்டத்து யானை, அருகில் யானைப் பாகன் கையில் அங்குசத்துடன் வர, அமைதியாக வந்து கொண்டிருந்தது. தங்கள் கழுத்தில் தான் யானை மாலை சூட்ட வேண்டுமென்ற ஆசையில், ஒருவரை ஒருவர் இடித்து நின்று கொண்டிருந்தனர். இளம் பெண்கள், தாங்களும் மேக நாட்டின் இளவரசி ஆக வந்திருக்கிற வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதுபோல, ஒருவர் தலைக்கு மேலே ஒருவர் முகத்தை வைத்து கழுத்தை நீட்டிக் கொண்டிருந்தனர்.
இளைஞர்கள், கையில் கரும்பை வைத்துக்கொண்டு, நடந்து வரும் பட்டத்து யானை முன் அதை நீட்டி, அது கரும்பை பெற்றுக்கொள்ளும் போது, துதிக்கையிலுள்ள மாலை தங்கள் கழுத்தில் விழ, கழுத்தை முன்பக்கமாக வளைத்துக் கொண்டனர்.
பெண்கள், வாழைப்பழம், அரிசி, வெல்லம் கலந்த உருண்டைகளை முறத்தில் வைத்து, பட்டத்து யானை தங்கள் அருகில் வர, அதன் பார்வையில் படும்படி தூக்கிப் பிடித்தனர்.
பூங்குழலி, தன் கையில் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து, யானையை நோக்கி கையை நீட்டிக் கொண்டிருந்தாள்.
எல்லாரையும் அலட்சியம் செய்து, தன் துதிக்கையிலிருந்த மாலையை, பூங்குழலியின் கழுத்தில் போட்டது பட்டத்து யானை. வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டது. அவள் தலையில், தன் துதிக்கையை வைத்து ஆசிர்வதித்தது.
இதைப் பார்த்த அந்த வயதானவர், அடக்க முடியாத கோபமுடன், மாடியைவிட்டு இறங்கினார். அவர் நடையில் தள்ளாட்டம் இல்லை; தடுமாற்றம் இல்லை.
(- தொடரும்)
