PUBLISHED ON : ஜூலை 26, 2019

திருப்பூர், நஞ்சப்பா உயர்நிலைப் பள்ளியில், 1952ல், 10ம் வகுப்பு படித்தேன்; தேர்வு நடந்து கொண்டிருந்தது. கண்காணிப்பு பணியிலிருந்த ஆசிரியர் ரத்தின கணேசநம்பி, என் பின்னால் வந்து, நான் எழுதியதை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று என் முதுகை தட்டி, 'பிற்காலத்தில் நல்ல எழுத்தாளராக வருவாய்...' என்று கூறி, சிரித்தபடியே நகர்ந்தார்.
அவரது தீர்க்க தரிசனம், நுாற்றுக்கு நுாறு பலித்தது.
பள்ளிப்பருவத்திலே, சில மாணவர்களுடன் சேர்ந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். எழுத்தார்வம் வளர்ந்தது.
'தமிழ்நாடு' என்ற நாளிதழில் என் முதல் கட்டுரை, அக்., 1, 1960ல் வெளியானது.பின், 'பூங்கொடி' என்ற இலக்கிய மாத இதழை நடத்தினேன். தொடர்ந்து, பல்வேறு இதழ்களில், என் படைப்புகள் வெளிவந்தன.
சென்னையில் குடியேறிய பின், சொந்தமாக பதிப்பகம் துவங்கி, 20 நுால்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளேன்.
'சண்முக கவசம்' என்ற மாத இதழையும் வெளியிட்டு வருகிறேன்.
இப்போது என் வயது, 82; என் எழுத்துப்பணிக்காக, தமிழக அரசின், அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது உட்பட, பல பரிசுகளை பெற்றுள்ளேன்.
இத்தனை வளர்ச்சிக்கும் காரணம், தேர்வு அறையில், அந்த ஆசிரியர், என் நெஞ்சம் என்னும் பாத்தியில் ஊன்றிய விதை தான் என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
- கு.சண்முகசுந்தரம், சென்னை.
தொடர்புக்கு: 94452 96507
