PUBLISHED ON : ஜூலை 26, 2019

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 4ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்!
ஒருநாள், இறைவணக்க நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது, பள்ளி சுவரில், குரங்குகள் வந்து அமர்ந்தன. ஒரு பெரிய குரங்கு, பள்ளி வளாகத்துக்குள் இறங்கி, மாணவியர் பக்கம் வந்தது; நாங்கள் பயந்து கத்தினோம்; ஆசிரியர்கள் அமைதிப்படுத்தினர்.
எங்கள் தலைமை ஆசிரியர், அந்த குரங்கை குச்சியால் விரட்ட முயன்றார்; அது அசையவில்லை. மீண்டும் முயன்றபோது, குச்சியை பிடுங்கி மிரட்டியது. அலறியபடி அனைவரும் விழுந்தடித்து ஓடினோம்.
அந்த நெரிசலில் தடுக்கி குப்புற விழுந்தேன்; பின்னால் ஓடி வந்த சிலர், என் மேல் விழுந்தனர். விழுந்து கிடந்தவர்கள் மீதேறி, மாணவ, மாணவியர் ஓடினர்.
மூச்சு விட முடியாமல் திணறித் தவித்தேன். அந்த நேரம், என் தோழி ராதா, மிகவும் சாதுாரியமாக காப்பாற்றினாள். பின், தண்ணீர் கொடுத்த ஆசிரியர்கள், 'பயப்படாதே, குரங்கு போய்விட்டது...' என, ஆறுதல் கூறி தேற்றினர்.
இன்றும், குரங்குகளை பார்த்தால், அந்த சம்பவத்தை நினைத்து, நடுக்கம் ஏற்படுகிறது!
- தி.சுபா, கோவை.
