தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூவுலகின் தோழி ரேச்சல் கார்சன்

பூவுலகின் தோழி ரேச்சல் கார்சன்

பூவுலகின் தோழி ரேச்சல் கார்சன்


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுற்றுச்சூழலைக் காக்க விழிப்புணர்வை ஏற்படுத்திய முன்னோடி விஞ்ஞானி ரேச்சல் கார்சன். அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணத்தில், ஸ்பிரிங்டேல் என்ற சிற்றூரில், மே, 27, 1907ல் பிறந்தார்.

தந்தை ராபர்ட் கார்சன், கம்பெனி எழுத்தராக இருந்தார். அம்மா மரியா கார்சன்; ஆசிரியை பயிற்சி முடித்தவர். இயற்கை ஆர்வலராகவும் விளங்கினார். குழந்தை ரேச்சலுக்கும் அதே மனப்பான்மையை ஊட்டி வளர்த்தார்.

கூடு இழந்த ராபின் பறவைகளுக்கு, ரேச்சலின் வீடு சரணாலயமாக இருந்தது.

சிறுவயதிலேயே எழுத்தாளராகும் ஆர்வம் கொண்டிருந்தார் ரேச்சல். 10 வயதில் எழுதிய கதை, 'செயிண்ட் நிக்கோலஸ்' என்ற இதழில் பிரசுரமானது.

பென்சில்வேனியா மகளிர் கல்லுாரியில் உயிரியல் படிப்பில் சேர்ந்தார். படிப்பு முடித்தது. வாங்கியிருந்த கல்விக்கடனை செலுத்தாததால், பட்டம் வழங்கப்படவில்லை. குடும்ப சொத்தை அடமானம் வைத்து கடனை செலுத்தி பட்டம் பெற்றார்.

பின், முதுகலை விலங்கியல் படிப்பில் சேர்ந்தார். அப்போது அமெரிக்காவில், பெண்கள் உயர்கல்வி கற்பது எளிதாகயில்லை. பல்கலைக்கழகத்தில் மாணவியருக்கு விடுதி வசதி எல்லாம் கிடையாது. பேராசிரியை மேரி என்பவருடன் தங்கி படிப்பை தொடர்ந்தார். உயரிய மதிப்பெண்ணுடன், முதுகலை பட்டம் பெற்றார்.

அமெரிக்க மீன்வளத்துறையில் பகுதி நேர வேலையில் சேர்ந்தார். வானொலி நிகழ்ச்சி மூலம் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வேலை அது. பணியிலிருந்த போதே, 'அட்லாண்டிக்' என்ற இதழில், 'கடல் அடியில்' என்ற கட்டுரையை எழுதினார். பெண் என தெரிந்தால், முக்கியத்துவம் கிடைக்காது என அஞ்சி, ஆர்.எல்.கார்சன் என்ற புனைப்பெயரில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

அவற்றை தொகுத்து, 'கடல் காற்றின் கீழே' என்ற நூலை, 1941ல் வெளியிட்டார். 'காட்டுயிர்களின் வாழிடம் தான் நமக்கு வீடு என்பதை உணராமல், அவற்றை அழித்துக்கொண்டே இருக்கிறோம்' என, நூலில் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாம் உலகப்போரின் போது, அவரது ஆய்வு, பூச்சிகொல்லி விஷம் பக்கம் திரும்பியது. குறிப்பாக, 'டைக்குளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்' என்ற பூச்சிகொல்லி விஷத்தால் ஏற்படும் அபாய விளைவுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் இடையே, 'நம்மைச் சுற்றியுள்ள கடல்' என்ற நூலை வெளியிட்டார். அது பெரும் வெற்றி பெற்றது. வெளிவந்த நான்கு மாதங்களில், 1 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

எழுத்திலும், ஆய்விலும் முழு கவனம் செலுத்தினார். கடல்சார் அறிவியல் குறித்து, 'கடலின் விளிம்பில்' என்ற நுாலை வெளியிட்டார். இதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மண்ணியல், தொல்லுயிரியல், உயிரியல், மானுட வரலாறு என பல துறைகளின் விவரங்களோடு கடல் குறித்து மூன்று நூல்களையும் எழுதியிருந்தார். எழுதியவர் பெண் என்பதை அமெரிக்கர்களால் நம்பமுடியவில்லை.

அமெரிக்க மக்களின் வாழ்வில், பாடும் பறவையான ராபினுக்கு முக்கிய இடமுண்டு. அதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து விளக்கினார்.

'ராபின்களின் முக்கிய உணவு மண்புழு; பூச்சிக்கொல்லி தெளிப்பால், மண்புழுக்கள் அழிகின்றன; அதனால் உணவு கிடைக்காத, ராபின் பறவைகளும் அழிகின்றன' என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கினார்.

அணு ஆயுதச் சோதனையால், கதிரியக்கப் பொருளான, 'ஸ்ட்ரோண்டியம் - -90' என்ற நச்சு, வளிமண்டலத்தில் கலந்தது. அது, உணவு வழியாக தாய்ப்பாலில் சேகரமாகி, எலும்பு புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயை உருவாக்கியது. இந்த விவரங்களை ஆராய்ந்து, அசைக்க முடியாத ஆதாரங்களுடன், 'மவுன வசந்தம்' என்ற நூலை, 1962ல் வெளியிட்டார்.

இந்த நுால், தமிழ் உட்பட, 20 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் கடைசி வரி, 'பூச்சிகளை நோக்கி வீசப்படும் ஆயுதம், பூமியையே அழிக்கும் சாதனம்' என்று உள்ளது.

அனைத்து உயிர்களையும் காக்கும் வகையில், சிந்திக்கத் துாண்டியவர் ரேச்சல் கார்சன். பூவுலகின் தோழியாக வாழ்ந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 1964ல் மரணமடைந்தார்.

- தேவிகாபுரம் சிவா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us