PUBLISHED ON : ஜூலை 04, 2020

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள மோலன்லாண்டன் நகராட்சிக்கு உட்பட்ட கிராமம், கின்டர்டிஜிக். இது, லுாக் மற்றும் நுார்து ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. ஆற்றோட்டத்துக்கும் தாழ்வாக அமைந்துள்ளது கிராமம்.
இதனால் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதை தவிர்க்க, வடிகால்வாய்கள் வெட்டியும் பலன் இல்லை. இந்த நிலையில், 1740ல், நீர் இறைக்கும், 19 காற்றாலைகள் இங்கு நிறுவப்பட்டன. இவை, ஆற்றில் நீரோட்டம் அதிகமாகும் போது, அருகே உள்ள நீர்தேக்கத்துக்கு தண்ணீரை ஏற்றும்.
இவற்றில், பல காற்றாலைகள் இன்றும் முறையாக வேலை செய்கின்றன. இந்த பகுதியில் மின் உற்பத்திக்காக, ஏராளமான காற்றாலைகள் இப்போது நிறுவப்பட்டுள்ளன.
மிக எளிய வழியில் சூழலை பாதுகாத்துவரும் இந்த கிராமத்தை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக, 1997ல் அறிவித்துள்ளது, யுனஸ்கோ அமைப்பு. பழைய காற்றாலைகள், சுற்றி சுழன்று நீர் இறைப்பதை இன்றும் பார்க்கலாம். நெதர்லாந்து நாட்டின் முக்கிய சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று!
- பட்டு
