தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மன்னர் கட்டளை!

மன்னர் கட்டளை!

மன்னர் கட்டளை!


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்டளைபுரம் நாட்டை, சிம்மபுருஷன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மிகவும் கட்டுப்பாடான, நல்லாட்சியை மக்களுக்கு அளித்தார். மிகவும் ஒழுங்குடன் வாழ்ந்தார்.

மன்னரிடம், ஒரு கெட்ட குணம் இருந்தது. தான்னைப்போல, கட்டுப்பாட்டுடன் மக்களும் வாழ வேண்டும் என விரும்பினார். அதற்காக, சில சட்டங்களை இயற்றியிருந்தார்.

அவை மக்களிடம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிருப்தியை, மன்னரிடம் எடுத்துச் சொல்ல பயந்தனர் மக்கள். மனதில் புழுங்கியபடியே, உத்தரவுகளை மதிப்பது போல் பாசாங்கு செய்தனர்.

ஒருமுறை -

'மாதத்தில் இரு முறை, அதாவது, அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், யாரும், எந்த வேலையும் செய்ய கூடாது; கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும். அன்று பகல் முழுவதும் உண்பதும், உறங்குவதும் மட்டுமல்லாமல், இறைவழிபாடும் செய்ய வேண்டும்...' என கட்டளையிட்டார் மன்னர்.

மக்களுக்கு ஓய்வு வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் அந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். அதை மக்கள், சரியாக பின்பற்றுகிறார்களா என அறியவும் விரும்பினார்.

அன்று பவுர்ணமி நாள் -

பூஜைகளை முடித்து, 'கட்டளையை மக்கள் பின்பற்றுகிறார்களா' என அறிய, பிச்சைக்காரனாக வேடமிட்டு ஊரை வலம் வந்தார் மன்னர்.

முதலில், ஒரு மீனவன் குடிசைக்குச் சென்றார். அவன், வலை வீசி பிடித்த மீன்களை சேகரித்துக் கொண்டிருந்தான். அதை கண்டதும், 'நீ ஓய்வு எடுக்கவில்லையா...' என்றார்.

'ஓய்வெடுத்தால், எதை உண்பது...' என்று திருப்பிக் கேட்டான்.

அடுத்து, வேடனின் வசிப்பிடம் சென்றார். அவன் வில், அம்புகளை பழுது நீக்கி, சரி செய்து கொண்டிருந்தான்.

'ஐயா... இன்று மன்னர் ஓய்வெடுக்கச் சொல்லி இருக்கிறாரே... நீங்கள் வேட்டைக்குப் புறப்படுவது போல் தெரிகிறதே...' என்றார் பிச்சைக்காரராக வேடமிட்டிருந்த மன்னர்.

'ஆம் ஐயா... இதோ, நீங்கள் வந்து பிச்சை கேட்கிறீர்; தருவதற்கு என்னிடம் எதுவுமில்லை; பசியால் குழந்தைகள் அழுது அழுது துாங்கி விட்டனர். என் தொழில் முறையாக நடந்தால் தான், இறை வழிபாடு, ஓய்வு எல்லாம் கடைபிடிக்க முடியும்; அன்றாடங்காய்ச்சியான எனக்கு எதுவும் சாத்தியமில்லை. அதனால் தான் வேட்டைக்கு புறப்படுகிறேன்...' என்றான் வேடன்.

'மன்னர் கட்டளையை மீறுவது குற்றமல்லவா...'

'ஆம்... அதை விட பெரிய பாவம், என் குழந்தைகளை பட்டினி போடுவதல்லவா... எனவே, என்றாவது ஒரு நாள், மன்னரிடம், என் மனக்குறையை தெரிவிப்பேன்...' என கூறி சென்றான்.

அடுத்து, ஒரு மூதாட்டி வீட்டிற்குச் சென்றார். அவள், மீன் துண்டுகளை, கருவாடுகளாக்கி கொண்டிருந்தாள்.

'ஏன் பாட்டி, மன்னர் கட்டளையை மதிக்காமல், வேலை செய்து கொண்டிருக்கிறாய்...'

'ம்... மன்னருக்கென்ன... பலநுாறு வேலையாட்களை வைத்திருக்கிறார்; நாங்கள் கட்டும் வரிப்பணத்தில் அரசு நடத்துவது தான் அவரது வேலை... என்னை போன்ற ஏழைகளைப் பற்றி எதுவும் அவருக்கு தெரியாது. நான் ஒரு நாள், ஓய்வாக இருந்தால், அடுப்புக்கும் ஓய்வு தான். தினமும் வேலை செய்தால் தான், அடுப்பும் எரியும்; அரசுக்கு வரியும் கட்ட முடியும். நாட்டிற்கு நல்லது தானே செய்கிறேன்...' என்றாள்.

மன்னருக்கு புத்தி வந்தது.

மக்களை கட்டுப்படுத்த நினைத்தால், பின் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்தார். இதுபோன்ற சட்டங்களை திரும்ப பெற உடனே உத்தரவிட்டார்.

செல்லங்களே... நடைமுறையில் பயன் தருபவற்றை கடைபிடிப்பது தான் புத்திசாலித்தனம். ஒரு செயல் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று சிந்தித்து செயல்படுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us