PUBLISHED ON : டிச 11, 2021

விலங்குகளின் ஆண்டுக் கூட்டம், சிங்கராஜா தலைமையில் காட்டில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்று, 'எப்போதும், நீங்களே காட்டுக்கு தலைவராயிருக்குறீங்க... நாட்டில் ஓட்டுப்போட்டு தலைவரை தேர்ந்தெடுப்பது போல், காட்டிலும் நடத்தலாமே...' என ஆலோசனை வழங்கியது நரி.
கோபம் கொண்டாலும் சமாளித்தபடி, 'நல்ல யோசனை...' என்றது சிங்கம்.
உடனே, 'எங்கள் தரப்பில் குள்ளநரியை தேர்தலில் நிறுத்துகிறோம்...' என்றது நரி; வழிமொழிந்தது கழுதைப்புலி.
தொண்டையை கனைத்தபடி, 'எதிர்த்து யானை போட்டியிடும்...' என்றது சிங்கம்; அதை வழிமொழிந்தது புலி.
அசைவ உணவு சாப்பிடும் எல்லா விலங்குகளின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த நரிக்கு, இது ஏமாற்றம் தந்தது. வென்றால், இஷ்டத்துக்கு விலங்குகளை கபளீகரம் செய்யலாம் என்ற ஆசையில் மண் விழுந்தது.
தேர்தல் நடத்தும் பொறுப்பு சிறுத்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
காடே தேர்தல் விழாகோலம் பூண்டிருந்தது.
இதற்கிடையே, சிங்கம், யானை இடையே சண்டையை மூட்டும் விதமாக தகவல் கூறியது நரி. அவை சினம் கொண்டன.
அப்போது, சிங்கத்தின் காதில் ஏதோ கிசுகிசுத்தது யானை. உடனே அமைதி கொண்டன.
புரியாமல் நின்ற நரி, ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.
யானைக்கு அபார வெற்றி வாய்ப்பு இருப்பது உறுதியானது.
உடனே, 'ஓட்டுப் பெட்டியை மாற்றி, வெற்றி பெறலாம்' என திட்டமிட்டது நரி.
ஓட்டு பெட்டியை எடுத்து வரும் சாலையில், பள்ளம் தோண்டி, வண்டியை கவிழ்த்து பெட்டியை மாற்றும் திட்டம் அது.
ஓட்டுப்பதிவு நாள் வந்தது.
சீக்கிரமே ஓட்டுபோட்டு, சதித்திட்டத்தை நிறைவேற்ற சென்றது நரி. வண்டி கவிழும் என காத்திருந்தது. அப்படி எதுவும் நிகழவில்லை.
முறைப்படி ஓட்டுகள் எண்ணப்பட்டன; முடிவை அறிவித்தது சிறுத்தை.
பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், குள்ள நரியை தோற்கடித்தது யானை.
குள்ள நரி, 'டிபாசிட்' இழந்தது.
நரிக்கு இனிப்பு வழங்கியபடி, 'வெற்றியின் ரகசியத்தை தேர்தல் அலுவலரிடம் கேள்...' என்றது யானை.
சிரித்தபடியே, 'நரிகள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு செய்திருந்தேன். அவற்றின் பேச்சை ரகசியமாக பதிவு செய்து சதி திட்டத்தை முறியடித்தேன். வண்டியை மாற்றுபாதையில் செலுத்தி ஓட்டுப்பெட்டியை பத்திரமாக எடுத்து வந்தோம்...' என்றது சிறுத்தை.
தலையை தொங்கவிட்டப்படி சென்றது நரி.
செல்லங்களே... நேர்வழியில், தீமைகளை களைந்து, நன்மைகளை அறுவடை செய்வோம்.
ஜி.முனிராஜ்
