PUBLISHED ON : டிச 11, 2021

சூரியனை நோக்கி!
சூரியன் இருக்கும் திசையில் பூவைத் திருப்பிக் கொள்ளும் ஆற்றல், சூரியகாந்தி செடிக்கு உண்டு. அதுபோல ஒளி உள்ள திசை நோக்கி திரும்பும் உலோகத் தடி ஒன்றை உருவாக்கியுள்ளனர், அமெரிக்கா, கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.
சூரிய ஒளி நோக்கி மட்டுமல்லாமல், லேசர் ஒளி பாயும் திசையிலும், இந்த உலோகத்தடி வளைத்து திரும்புகிறது.
நானோ மெட்டீரியல் மற்றும் பாலிமர் பொருட்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும், 'சோலார் பேனல்' எந்த அசைவும் இல்லாமல் நிலையாக இருக்கும்; சூரியஒளி கிடைத்தால் மட்டுமே மின்சாரம் தயாரிக்கும். இதில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த உலோகத்தடி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தவகை உலோகத்தடியில் சோலார் பேனலை இணைத்தால், சூரிய ஒளியில் அதிகம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சூரிய ஒளி பாயும் திசையில் இந்த உலோகத்தடி வளைந்து திரும்புவதால், அதிகமாக ஒளியை பெற முடியும். சூரிய மின் உற்பத்தியில் மைல்கல்லாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.
குறைந்த செலவில், சூரியஒளியை சேமிக்கும் கருவி ஒன்றையும் உருவாக்கி வருகின்றனர் விஞ்ஞானிகள். அது பயன்பாட்டுக்கு வந்தால், உலகில் பணத்தின் தேவை சுருங்கிவிடும்; சூரிய ஒளி, பல விதங்களில் மாற்று சக்தியாக பயன்படும். இயற்கைக்கு ஏற்பட்டுள்ள இடர்களும் மறையும்; பொருளாதார பிரச்சனைகளும் வெகுவாக குறையும்.
ஆற்றல் தரும் சூரியனை போற்றுவோம்!
நாணய ரகசியம்!
இந்திய ரூபாய் நோட்டுகள், மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் அச்சிடப்படுகிறது. நாணயங்கள், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் நகரங்களில் தயாரிக்கப்படுகிறது.
நாணயத்தில் ஆண்டு அச்சிடப் பட்டிருப்பதற்கு கீழ், ஒரு புள்ளி வைக்கப்பட்டு இருந்தால் அது புதுடில்லியில் தயாரிக்கப்பட்டது; டைமண்ட் வடிவம் இருந்தால், அது மும்பையிலும், நட்சத்திர குறி இருந்தால், ஹைதராபாத்திலும் தயாரிக்கப்பட்டது. எந்தக் குறியீடும் இல்லாவிட்டால் கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது.
நாணய தயாரிப்பின் ரகசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.
சமையல் குறிப்பு!
உருளைக்கிழங்குடன் ஒருபிடி புதினா இலை சேர்த்து வேக வைத்தால், மண் வாசனை நீங்கிவிடும்; ருசியும், சத்தும் கூடும். உருளைக்கிழங்குத் தோலில், பொட்டாஷியம், மெக்னீஷியம், நார்ச்சத்து, வைட்டமின் - சி சத்துகள் அடங்கியுள்ளன. எனவே, தோலுடன் சமைத்து உண்ணவும்.
இட்லிமாவு புளிக்காமல் இருக்க, வெற்றிலையை, மாவுப் பாத்திரத்தில் குப்புற இருப்பதுபோல் போடவும். மாவு புளிக்கவோ, பொங்கவோ செய்யாது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
