PUBLISHED ON : ஏப் 07, 2017

இயற்கை அழகு கொஞ்சும், பசுமையான, ரம்மியான இடங்களை, தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டம் தான், திருநெல்வேலி மாவட்டம். இங்குள்ள மணிமுத்தாறை அடுத்து, தரைமட்டத்தில் இருந்து ஏறத்தாழ, 1162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைவாழிடம் தான், மாஞ்சோலை. இது, 'ஏழைகளின் ஊட்டி' என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்விடம், இங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. 'பாம்பே பர்மா டீ எஸ்டேட்' கண்களுக்கு விருந்தளிக்கும். இந்த இடம் ஊட்டிக்கு நிகரானது.
களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய எல்லைக்குள், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது, இந்த மாஞ்சோலை.
மூன்று தேயிலை தோட்டங்களும், குதிரைவெட்டி மற்றும் அப்பர் கோதையாறு அணைகட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது தான் அழகு கொஞ்சும் மாஞ்சோலை.
மணிமுத்தாறில் இருந்து அரசு பேருந்திலோ, தனியார் வாகனங்களிலோ மாஞ்சோலைக்கு செல்லலாம். மலைகளின் மீது வளைந்து வளைந்து செல்லும் சாலைகளின், இருமருங்கிலும் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களும், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளும், சிறு சிறு அருவிகளும், ஓடைகளும், பறவைகளின் இனிய ஒலிகளும் நம்மை வரிசை கட்டி வரவேற்கின்றன.
மலைகளில் நீண்ட நடைபயணம் - டிரெக்கிங் செய்பவர்களும் உண்டு.
நாலுமுக்கு!
மாஞ்சோலை எஸ்டேட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் அமைந்திருப்பது தான் இந்த நாலுமுக்கு.
அடர்ந்த மரங்களின் இடையே செல்லும் சிறிய சாலை. அதில் சில ஊசிமுனை வளைவுகளும் உண்டு.
ஒரு ஓடையின் மீது மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட பாலத்தின் வழியே பயணம் செய்வது நமக்கு கிளர்ச்சியூட்டும் புதிய அனுபவம் தான். அடர்ந்த காடுகளுக்கிடையே அமைந்துள்ளதால், மதிய வேளையில் கூட குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்த நாலுமுக்கில் தங்குவதற்கு வசதி கிடையாது. எனவே, பார்த்துவிட்டு திரும்பி விட வேண்டியது தான்.
இங்கிருந்து, அருகிலுள்ள குதிரை வெட்டி சென்றால், அங்கு அரசினர் விருந்தினர் மாளிகை உள்ளது. தங்குவதற்கு வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளை பார்வையிட, அரசு பேருந்தில் செல்வதென்றால் அனுமதி வாங்க தேவையில்லை. தனியார் வாகனங்களில் செல்வதற்கும், தங்குவதற்கும் திருநெல்வேலியில் உள்ள, என்.ஜி.ஓ., காலனியில் உள்ள, மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.
குதிரைவெட்டி!
நாலுமுக்கிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ளது தான் இந்த குதிரைவெட்டி. இவ்விடத்தின் சிறப்பு என்னவென்றால், இங்குள்ள ஒரு உச்சி முனையில் இருந்து பார்த்தால், மூன்று அணைக்கட்டுகளை பார்க்கலாம்.
மணிமுத்தாறு, காரையார், சேர்வலாறு ஆகிய அணைக்கட்டுக்களை பார்க்கலாம். மேலும், காரையார், மணிமுத்தாறு அணைக்கட்டுக்கு இடையேயுள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் அடர்ந்த மரங்கள் உடைய காடுகளையும் காணலாம்.
இந்த மலைகளுக்கு பின் தான் காக்கச்சி மற்றும் மாஞ்சோலை எஸ்டேட் ஆகியவை உள்ளன.
காக்கச்சி!
இக்கிராமமும் தேயிலை தோட்டங்கள் நிறைந்ததுதான். குதிரைவெட்டியில் உள்ள டவளில் இருந்து களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பசுமையான காடுகளை கண்டு ரசிக்கலாம். மேலும், முத்துக்குழிவாயல் எனப்படும் திருவாங்கூர் அரச குடும்பத்து விருந்தினர் மாளிகையும் இங்கு உள்ளது. இங்கு செல்வதற்கு மணிமுத்தாறு மற்றும் அம்பா சமுத்திரத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
மணிமுத்தாறு அணை மற்றும் மணிமுத்தாறு அருவி:
இந்த அருவி சிங்கம்பட்டி ஜமீன்தார் இல்லத்துக்கு அருகில் உள்ளது.
சிங்கம்பட்டி ஜமீன்!
இது தற்போதைய ஜமீன்தார், ராஜா தீர்த்தபதியின் இல்லம்.
அகஸ்தியர் அருவி!
இது பாபநாசத்தில் உள்ளது. இந்த அருவியின் மேல் பாபவினேஸ்வரா சிவன் கோவில் உள்ளது.
வானதீர்த்தம் அருவி!
இது அகஸ்தியர் அருவியில் இருந்து, 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள காரையாரில் உள்ளது. காரையாரில் இருந்து இந்த அருவிக்கு செல்வதற்கு படகு வசதி செய்யப்பட்டுள்ளன.
இந்த படகுகள் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை இயக்கப்படுகின்றன.
ஒரு எட்டு போயிட்டு தான் வாங்களேன்.
- விக்னேஷ், சென்னை.
