
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது சித்தன்னவாசல் கிராமம். குடைவரை மற்றும் ஓவியங்களால் புகழ் பெற்றது. இதை, தென்னக அஜந்தா என குறிப்பிடுவர். சித்தன்னவாசல் என்ற சொல்லுக்கு, 'துறவியர் இருப்பிடம்' என பொருள். பழங்காலத்தில் சமண சமய மையமாக இருந்தது. இதை கல்வெட்டு மற்றும் சமண சின்னங்கள் காட்டுகின்றன.
இங்கு உள்ள ஓவியங்கள் கி.பி., 8ம் நுாற்றாண்டில் வரையப்பட்டவை என கருதப்படுகிறது. குன்று குகை பாறையில் சுண்ணாம்பு பூசி, உயிரோட்டமிக்க ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
குளத்தில் தாமரை மலர்ந்துள்ளது போல உள்ளது ஒரு ஓவியம். அதில், கொக்கு, மீன், முதலை, யானை இருப்பது போல இயற்கையாக அமைந்துள்ளது. முனிவர் குளத்தில் பூ பறிப்பது போலவும் தத்ரூபமாக ஓவியம் உள்ளது.
மூலிகைகளை பயன்படுத்தி எடுத்த இயற்கை சாயம், வண்ண ஓவியங்கள் தீட்ட பயன்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்லவர் காலத்துக்கு முன், செங்கல், மரம், மண் மற்றும் உலோகங்களால் கோவில்கள் கட்டப்பட்டு இருந்தன. குடைவரைகளை முதன் முதலில் அமைத்தவர் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்.
அஜந்தா ஓவியம் போல், தனிச்சிறப்பு மிக்கது சித்தன்னவாசல். இதன் அருகே உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில், சமணர் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும், வழிபாட்டு மையங்களும் உள்ளன.
கல்வெட்டுகளில் மாறன் என்ற பாண்டிய மன்னன், சீராக கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை அடைந்த பின், போதிய பராமரிப்பின்றி கவனிப்பாரின்றி கிடந்தன ஓவியங்கள். தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன.
சித்தன்னவாசல் பகுதியில் தொல் பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்ட அகழ்வு ஆய்வில் புதை பானைகளில் மனித எலும்பு கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குகை ஓவியங்களும், சமண படுக்கைகளும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கோடையில் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக உள்ளது.
- பாலாஜி கணேஷ்

