PUBLISHED ON : அக் 18, 2019

கோவை, எம்.மேரீஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2010ல், 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு, 7ம் வகுப்பில், கணக்கு பாடம் எடுத்த ஆசிரியை ஜெபமாலை மேரி, இறந்ததாக தகவல் வந்தது. பள்ளி சார்பில், அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் பேசிய ஆசிரியை அமலோபா, 'வாழ்க்கை டைரியின் முதல் பக்கம், பிறப்பு என்றால், கடைசி பக்கம் இறப்பு. நடுவில் இருக்கும் பக்கங்கள் அனைத்தும், அன்றாடம் ஏற்படும் பிரச்னைகளை குறிக்கும்; அவற்றை எதிர்த்து, நீச்சல் போட பழகினால், கஷ்டங்களை தாண்டி, முன்னேறி செல்லலாம்...' என்றார்.
துன்பம் அனுபவிக்கும் போதெல்லாம், அந்த ஆசிரியையின் பேச்சு நினைவுக்கு வரும். 'இதுவும் கடந்து போகும்' என, மன வலிமையுடன் எதிர்கொண்டு, வாழ்வை வென்று வருகிறேன்.
தற்போது என் வயது, 26; பல எதிர்ப்புகளை கடந்து முன்னேறியுள்ளதை எண்ணிப்பார்க்கும் போது, அந்த வார்த்தைகளின் வலிமையை உணர்கிறேன்.
- ஷண்முகப்பிரியா, கோவை.
