தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம்! (16)

பொக்கிஷம்! (16)

பொக்கிஷம்! (16)


PUBLISHED ON : ஜூலை 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மந்திராஜா இரு சிறுவர்களுடன் தப்பிச் சென்றது. தளபதி மேலைநாட்டு வீரர்களுடன் மன்னரின் மாளிகைக்கு வந்தான் இனி-

அங்கு மன்னரும் இல்லை; சிறுவர்களும், மந்திராஜாவும் இல்லை; பெரியவரையும் காணோம்; அவன் யோசித்தான். ஒரு காவல் வீரன் ஓடி வந்தான்.

''டேய் மன்னர் எங்கே?''

''தளபதியாரே! மன்னர் அமைச்சரை விடுதலை செய்து, அவரை அழைத்து வர பாதாள சிறை சென்றிருக்கிறார்!'' என்றான் காவல் வீரன்.

''நல்லது. அதுவும் நல்லதுதான். அமைச்சருக்கு அந்த மரியாதை வேண்டியது தான்!'' என்று எக்காள மிட்டவன், நேராக மேலை நாட்டு வீரர்களை அழைத்தவாறு பாதாள சிறை நோக்கி சென்றான்.

அதே சமயம், பெரியவர் அரண்மனை வாயிலுக்கு வந்தார். இப்போது ஒரு சில வீரர்களே ஆங்காங்கே காவலுக்கு நின்றிருந்தனர்.

''ஏ பெரியவரே.... நீ குரங்காட்டிதானே!'' கிண்டலுடன் கேட்டான் ஒரு வீரன்.

''இல்லை மனிதநாட்டி!'' என்றவர், தன் சுண்டு விரல் நகத்தால் அவன் நெற்றியின் நடுவில் அழுத்தினார்.

குபுக் என்று ரத்தம் வழிய ஆரம்பித்தது.

அவன் அதிர்ச்சியுற்று நெற்றியை பிடித்தபடி தன் இடைவாளை உறுவினான்.

அதற்குள் அவர் வாயிலின் வெளி கதவுக்கு வந்தார். கதவு மூடப்பட்டு இருந்தது.

'ஓ! நடக்கக்கூடாதது நடந்து கொண்டிருக் கிறது' என்றவர், எதற்கும் அலட்டிக்கொள்ளா மல் அரண்மனை நந்தவனத்திற்கு வந்தார். தோட்டக்காரன் அவரை யார் என்று தெரியாமல் குழம்பினான்.

அவனை அழைத்து, ''உள்ளே ஒரு வீரன் குருதி கொப்பளிக்க விழுந்து கிடக்கிறான். என்ன என்று போய் பார்!'' என்றார்.

அவன் பதட்டத்துடன் ஓடினான்.

பெரியவர் நந்தவனத்தில் இருந்த வில்வ மரம் வந்தார். அதை சுற்றி காலால் துழாவிக் கொண்டே வரவும் ஒரு இடத்தில் ஒரு கல் தென்பட்டது. மெல்ல அதை எடுத்தார். பின் கீழே குனிந்து அந்த இடத்தை சுத்தம் செய்ய வும், ஒரு இரும்பு தகடு இருப்பது தெரிந்தது. மெல்ல அதை திறந்தார். போர்காலங்களில் ஆபத்து நேர்ந்தால், அரச குடும்பத்தினர் தப்பித்து செல்லும் யாரும் அறியாத அந்தரங்க சுரங்கபாதை அது. மெல்ல கீழே இறங்கினார். பின் இரும்பு தகட்டால் அந்த இடத்தை மூடினார். இப்போது அவர் பயணம் வேகமாக நடந்து கொண்டிருந்தது.

அதே சமயம்- மன்னரின் மெய்க் காப்பாளனை வைத்தே மன்னரை கைது செய்து அமைச்சர் இருந்த அதே பாதாள சிறையில் அடைந்தான் தளபதி. இப்போது மன்னருக்கு காவல் அந்த மெய்க்காப்பாளன்தான். தளபதி யும், குணாளனும் நிம்மதிப்பெருமூச்சு விட்ட படி மன்னரின் அந்தரங்க கொலுமண்டபம் வந்தடைந்தனர்.

மன்னரின் இருக்கையில் தளபதி அமர்ந்து எக்காளமிட்டான். குணாளனும் மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான்.

''ஏன் குணாளா அந்த மேலை நாட்டு வீரர்களுக்கு என்ன வேலை கொடுக்கலாம்?''

''பிரபு அவர்களை நான் உங்களின் அந்தரங்க மெய்க்காப்பாளர்களாக நியமித்து விட்டேன். காரணம், நாம் நம் வீரர்களை நம்ப முடியாது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கூட ஆபத்துதான். நம் பக்கம் அனைத்து வீரர்களும் இருந்தாலும், ஒரு வீரன் மன்னருக்கு விசுவாசமானவனாக இருந்தால் கூட அது நமக்கு ஆபத்து. அதற்குத்தான் இந்த ஏற்பாடு!''

''ஆகா நான் இன்னும் உனக்கு தளபதி பதவி கூட கொடுக்கவில்லை. அதற்குள் இவ்வளவு தூரம் யோசித்து காரியம் செய்திருக்கிறாயே. நீயே என் உண்மையான மெய்காப்பாளன். நீயே இந்த நாட்டின் தளபதியும்!''' என்றவர் வேகமாக கையை தட்டினார்.

''பிரபு!'' என்றபடி ஒரு வீரன் ஓடி வந்தான்.

''ஏன் குணாளா இவன் யார்?'' என்றான் தளபதி.

''பிரபு இவன் தான் நம் நம்பிக்கைக்குரிய ஒற்றனும், வீரனுமான தூயநாதன்!''

''ஹா...ஹா...ஹா'' என்று பலமாக சிரித்தான் தளபதி.

நம்மிடம் தான் எத்தனை உண்மைகள். சத்தியங்கள். ஒருவன் குணாளன். அடுத்த வனோ மெய்யன்பன். இன்னொருவன் நல்லான். இப்போது நிற்பவனோ தூயநாதன். ஆகா! குணாளா உன் செயல்கள் யாவும் மெச்சத்தக்கவை!''

''ஏ வீரனே இந்த அரண்மனையின் நிலவரம் என்ன?''

''பிரபோ உங்களை மன்னரின் கட்டளைப்படி அழைக்க வந்தவர்களை நம் வீரர்கள் மடக்கி சிறைபிடித்து விட்டனர். மற்றும் அனைத்து கோட்டை வாயிலும் நம் வீரர்கள் தான் இருக்கின்றனர். மன்னரின் வீரன் என்று சொல்வதற்கு மருந்துக்கு கூட ஆள் இல்லை மாமன்னா!''

மன்னா என்ற வார்த்தையை கேட்டதும் மனம் விட்டு சிரித்தான் தளபதி.

''குணாளா நீ கூட இன்னும் என்னை மன்னா என்று அழைக்கவில்லை. ஆனால், இந்த வீரனுக்கு உள்ள விசுவாசத்தை பார்!'' என்றான்.

''மன்னிக்க வேண்டும் பிரபு. இல்லை இல்லை மாமன்னா,'' என்று தலை குனிந்தான் குணாளன்.

தளபதி மீண்டும் உரக்க சிரித்தான். பின் அந்த வீரனை பார்த்தான்.

''நீ போய் உடனே நான்கு திசை கோட்டை காவலர்களின் தலைவர்களை அழைத்து வா! இது என் உத்தரவு!'' என்றான்.

''அது என் பாக்கியம்!'' என்ற வீரன் வேகமாக சென்றான்.

நான்கு திக்கு கோட்டை காவலர் வீரர்களின் தலைவர்களும் வந்தனர்.

''கோட்டை காவல் தலைவர்களே, ஒரு முக்கிய விஷயம். இப்போது நான்தான் மன்னன். இது தற்சமயம் மக்களுக்கு தெரிய வேண்டாம். அதே சமயம், மன்னர் கொடிய பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த விவரமும் யாருக்கும் தெரியக்கூடாது. காரணம், இந்த விஜயபுரி மன்னன் மீது மக்கள் மிகுந்த பக்தி வைத்துள்ளனர். விவரம் தெரிந்தால் கலவரம் வரும்.

''மக்கள் கலவரத்தை மகாதேவன் வந்தாலும் அடக்க முடியாது. எனவே, வரும் பவுணர்மி அன்று மேலை நாட்டு வீரர்கள் படையெடுக்க வருகிறார்கள். ஆம்! எனக்கு உதவி செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு தேவை இந்த நாட்டின் பொக்கிஷம். எனக்கு தேவை இந்த நாடு. அவர்கள் படையெடுப்பை நான் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வேன். ஆம் இது எல்லாம் ஒரு நாடகம் தான். அதாவது அவர்களை முறியடித்து நாம் விரட்டி விட்டோம் என்று அறிவிப்போம். ஆனால், இழக்கக்கூடாத மன்னரையும், அமைச்சரையும் இந்த போரில் இழந்து விட்டதாக மக்களிடம் பரப்பி, நம்ப வைத்து விடுவேன்.

எப்படியோ இந்த தளபதி நம் தாய் நாட்டை காத்தாரே என்று மக்கள் நம்பும்படி என் செயல் இருக்கும். பிறகு என்ன நாடு நமக்கு. பதவி களும் நிறைய பொற்காசுகளும் உங்களுக்கு. மேலை நாட்டானுக்கு வெறும் பொக்கிஷம் மட்டுமே என்ன புரிகிறதா?'' தளபதி எக்காள மிட்டான்.

''ஏன் மன்னா அந்த பொக்கிஷத்தில் நாமும் பங்கு கேட்கலாம் அல்லவா? குணாளன் இழுத்தான்.

''நிச்சயமாக! முதலில் நமக்கு வேண்டாம் என்பதாக காட்டிக்கொண்டு பொக்கிஷத்தை அவர்கள் எடுத்துச்செல்லும் போது வழிமறித்து பறித்து கொள்வதுதான் நம் திட்டம்!''

''ஆகா மன்னர் ஆனதும் ராஜதந்திரமும் வந்துவிட்டது!'' என்றான் குணாளன் கைகளை குவித்து மரியாதை செலுத்தியபடி.

''நல்லது. நான் சொல்வது நினைவில் இருக் கட்டும். எந்த விருந்தினர் வந்தாலும் மன்னரை காண இயலாது என்று கூறி அனுப்பி விடுங்கள். வரும் பவுணர்மி வரை சரியா?''

அனைவரும் ஒரே சமயத்தில் வேகமாக தலையாட்டினர்.

அப்போது ஒரு மனித தலையின் நிழல் தெரிந்தது. சற்று நேரத்தில் அது வேகமாக ஓடுவது தெரிந்தது.

தளபதி ஆவேசமுற்றான்.

''குணாளா யார் அவன். உடனே அவனை இழுத்து வாருங்கள்!'' என்றான்.

- தொடரும்...

- பூரணி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us