PUBLISHED ON : ஜூலை 31, 2015

தேவகியும், மணியும் உடன் பிறந்தவர்கள். தேவகி அக்காள்; மணி தம்பி. இவர்கள் பெற்றோரை இழந்தவர்கள்.
தேவகி தன் குட்டித் தம்பியுடன் வேலை தேடிப் புறப்பட்டாள், காடு மேடுகளைக் கடந்து வெகுதூரம் சென்றனர். நீண்ட நேரமாக நடந்து கொண்டிருந்ததால், குட்டித் தம்பிக்குத் தாகம் ஏற்பட்டது.
'அக்கா, தாகமாக இருக்கிறது!'' என்றான்.
'பொறு தம்பி, சீக்கிரமே கிணறு இருக்கும் இடத்தைச் சென்றடைவோம்,'' என்றாள்.
நடந்தனர். நடந்து கொண்டே இருந்தனர். நடு உச்சியில் சூரியன். கடுமையான வெயில்! இருவருக்கும் நாக்கு வறண்டது. பசுக்கள் தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்ட குளம்பு வடிவத் தண்ணீர்த் தொட்டி அவர்கள் கண்ணில் பட்டது. தொட்டி நிறையத் தண்ணீர்!
'இந்தத் தண்ணீரை நான் குடிக்கலாமா அக்கா?'' என்று ஆவலுடன், கேட்டான் தம்பி.
'வேண்டாம் தம்பி! குடித்தால் நீ கன்றுக் குட்டி ஆகி விடுவாய்!'' என்று எச்சரித்தாள் அக்கா தேவகி.
கட்டுப்பட்டான் மணி. மேலும், சிறிது தூரம் நடந்திருப்பர். வெயில் சுட்டெரித்தது.
நாக்கு ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் தாகம். குதிரை தண்ணீர் குடிக்கும் தொட்டி ஒன்று எதிரே தென்பட்டது. அது நிறையத் தண்ணீர்!
'இந்தத் தொட்டித் தண்ணீரை நான் குடிக்கலாமா?'' கேட்டான் மணி.
'கூடாது, குட்டித் தம்பி! குடித்தால் குதிரைக் குட்டி ஆகி விடுவாய்!'' என்று தடுத்தாள்.
பெருமூச்சு விட்டான் சிறுவன்.
இருவரும் மேலும் நடந்தனர். வேகாத வெயிலோடு, வெப்பக் காற்றும் வீசத் தொடங்கியது. இறந்து விடுவோமோ என்று அச்ச உணர்வு தோன்றியது இருவருக்கும். அப்போது ஆடு நீர் குடிக்கும் சிறிய தொட்டியின் அருகே அவர்கள் வந்திருந்தனர். அத்தொட்டி நிறைய நீர் இருந்தது.
'தாகத்தால் செத்து விடுவேன் போலிருக்கிறது! இந்தத் தொட்டித் தண்ணீர் கொஞ்சம் குடிக்கவா, அக்கா?'' என்று கேட்டுக் கொண்டே தொட்டியை நெருங்கினான் தம்பி.
'குடிக்காதே! குடிக்காதே! குடித்தால் ஆட்டுக் குட்டி ஆகிவிடுவாய்!'' என்று பதறினாள் சகோதரி.
ஆனால், அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அந்த ஆட்டுத் தொட்டியிலிருந்த தண்ணீரைக் குடித்து விட்டான்.
மறு நொடியே, ஒரு சிறிய வெள்ளை நிற ஆட்டுக் குட்டியாக மாறிவிட்டான்.
தேவகியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. அந்த இடத்திலேயே உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதாள். ஆட்டுக் குட்டியோ, அவளைச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த நேரம், தற்செயலாக, ஒரு வியாபாரி குதிரையில் அந்தப் பக்கமாக வந்தான்.
'எதற்காக இப்படி அழுது கொண்டிருக்கிறாய், அழகிய பெண்ணே?'' என்று கேட்டான்.
தனக்கு ஏற்பட்ட துயரத்தைத் தேம்பல்களுக்கிடையே வியாபாரியிடம் கூறினாள் அவள்.
சிறிது நேரம் அமைதியாய் யோசித்த வியாபாரி, ''நீ சம்மதித்தால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன். பொன் மற்றும் வெள்ளி ஆடைகளால் உன்னைத் தினமும் அலங்கரிக்கிறேன். இந்தக் குட்டி ஆடும் நம்முடன் வசிக்கட்டும்!'' என்றான்.
தேவகி சிந்தனையில் மூழ்கினாள். வியாபாரியின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்தாள். திருமணம் நடந்தேறியது.
நıட்கள் மகிழ்ச்சியாகக் கடந்தன.
அக்காள் சாப்பிட்ட தட்டிலேயே தானும் சாப்பிட்டது ஆட்டுக் குட்டி. அவள் குடித்த சூப்பையே தானும் குடித்தது.
ஒருநாள் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தான் வியாபாரி. திடீரென்று ஒரு சூனியக்காரி தோன்றினாள். எங்கிருந்து வந்தாள்? எப்படி வந்தாள்? யாருக்கும் தெரியாது.
தேவகி வீட்டு ஜன்னல் அருகே நின்றாள்.
தேவகியிடம் தந்திரமாக பேச்சுக் கொடுத்தாள். தான் ஆற்றில் குளிக்கப் போவதாகவும், தன்னுடன் வர வேண்டும் என்று அழைத்தாள். மிகவும் கனிவான குரலில் மீண்டும், மீண்டும் கெஞ்சினாள்.
பாவம்! தேவகியால் தட்ட முடியவில்லை. சூனியக்காரி என்று தெரியாமல், அவளுடன் ஆற்றுக்குச் சென்றாள்.
கரையை அடைந்ததும், தேவகி மீது பாய்ந்தாள் சூனியக்காரி. அவள் தலை மேல் ஒரு கல்லைக் கட்டினாள். அப்படியே அவளைத் தூக்கி ஆற்றுத் தண்ணீருக்குள் போட்டாள்.
சூனியக்காரி, தேவகி மாதிரி உருக் கொண்டாள்.
தேவகியின் உடைகளை அணிந்தவாறு வியாபாரியின் வீட்டுக்குள் நுழைந்தாள். வந்திருப்பவள் தேவகி அல்ல... என்று யாராலும் சந்தேகிக்கக் கூட முடியவில்லை. ஏன்! அவள் கணவனால் கூட யூகிக்க முடியவில்லை.
ஆட்டுக்குட்டிக்கு மட்டுமே தன் அக்காவிற்கு இழைக்கப்பட்ட கொடுமை தெரிந்திருந்தது. மிகுந்த கவலையால் அதன் முகம் வாடிப் போயிருந்தது. எந்த உணவையும் தொட்டுக் கூட பார்க்கவில்லை. காலை, மாலை எல்லா நேரமும் ஆற்றங்கரையிலேயே நின்று கொண்டு, 'அக்கா, அக்கா, நீந்தி வா, நீந்தி வா,'' என்று அழைத்தபடி அழுதது.
இந்த விஷயம் சூனியக்காரிக்குத் தெரிந்து விட்டது. ஆட்டுக் குட்டி பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக் கணவனுக்கு அதன் மேல் வெறுப்பு ஏற்படுத்த முயன்றாள். அதைக் கொன்று விடுமாறு யோசனை சொன்னாள்.
ஆட்டுக்குட்டியை மிகவும் நேசித்தான் வியாபாரி. அதன் மேல் இரக்கப்பட்டான். ஆனால், விடவில்லை சூனியக்காரி. வஞ்சக வார்த்தைகள் பேசினாள்; வசீகரம் காட்டினாள். கடைசியில்.
'சரி! கொன்று விடு!'' என்று சொல்லி விட்டான் வியாபாரி.
தயாரானாள் சூனியக்காரி. அடுப்பை மூட்டித் தீயை வளர்த்தாள். பெரிய பானையை அதன் மேல் ஏற்றினாள். பெரிய கத்தியைத் தீட்டினாள்.
இதைக் கவனித்து விட்டது ஆட்டுக்குட்டி. தான் கொல்லப்பட போவதைத் தெரிந்து கொண்டது.
வியாபாரியைப் பார்த்துச் சொன்னது;
'நான் சாகும் முன், ஆற்றுக்குச் சென்று கடைசியாக ஒரு வாய்த் தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன் அனுமதியுங்கள்!'' என்றது.
'போ!'' என்றான் வியாபாரி.
ஓடியது ஆட்டுக்குட்டி! ஆற்றங்கரைமேல் நின்றது.
'அக்கா, அக்கா, நீந்தி வா, நீந்தி வா, நீதான் என்னிடம்!
நெருப்பு எரியுது!
பானை கொதிக்குது!
கத்தி மின்னுது!
சாகப் போகிறேன், நான்!''
என்று பரிதாபமாகக் கதறியது.
அப்போது தேவகியின் குரல் தண்ணீருக்குள்ளிருந்து ஒலித்தது.
''தம்பி! தம்பி!
கனமான கல் ஒன்று என் தலையின் மேலே!
செடி, கொடிகளில் கால்கள் பின்னிக் கிடக்குது!
மஞ்சள் களிமண் என் மார்பை அழுத்துது!'' என்று கூறினாள்
அதேசமயம், ஆட்டுக் குட்டியை அறுத்துச் சமைக்க அதை வீட்டில் தேடிக் கொண்டிருந்தாள் சூனியக்காரி, கிடைக்கவில்லை.
'போ! குட்டியைத் தேடு! கொண்டு வா! உடனே!'' என்று வேலைக்காரனுக்கு உத்தரவிட்டாள்.
அவனும் குட்டியைத் தேடிப் புறப்பட்டான். ஆற்றங்கரையில் நின்று கொண்டு, ஆற்றை ஆவலுடன் பார்த்தபடி ஆட்டுக் குட்டி நிற்பதைக் கவனித்தான். அதை நெருங்கினான்.
'அக்கா, அக்கா!
நீந்தி வா, நீந்தி வா! நீதான் என்னிடம்!
நெருப்பு எரியுது!
பானை கொதிக்குது!
கத்தி மின்னுது!
சாகப் போகிறேன் நான்!''
என்று சொல்லிப் பரிதாபமாக அது அழுவது அவன் காதில் விழுந்தது. திகைத்து நின்றான். அப்போது ஆற்றுக்குள் இருந்து,
''தம்பி! தம்பி!
கனமான கல் ஒன்று என் தலையில் மேலே!
செடி, கொடிகளில் கால்கள் பின்னிக் கிடக்குது!
மஞ்சள் களிமண் என் மார்பை அழுத்துது!'' என்று தேவகி பதில் சொல்வதையும் அவன் கேட்டான்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்கு ஓடினான். வியாபாரியிடம் தான் கண்டதையும், கேட்டதையும் சொன்னான். வேறு சிலரை அழைத்துக் கொண்டு, ஆற்றுக்கு விரைந்தான் வியாபாரி.
வலுவான வலையில் உதவியால் கரைக்குக் கொண்டு வரப்பட்டாள் தேவகி. அவளுடைய தலையில் கட்டப்பட்டிருந்த கல் அகற்றப் பட்டது. தூய்மையான ஊற்று நீரால் உடலைச் சுத்தம் செய்து அழகிய புத்தாடை அணிவித்தனர். புத்துயிர் பெற்ற தேவகி முன்பு எப்போதும் இருந்ததை விட அழகாகக் காட்சி அளித்தாள்.
சந்தோஷம் தாங்க முடியவில்லை, ஆட்டுக் குட்டிக்கு துள்ளிக் குதித்தது. மூன்று குட்டிக் கரணம் போட்டது! அதிசயம் பாருங்கள்! அது மீண்டும் மனித உருவம் பெற்றது.
ஊர் மக்கள் சூனியக்காரியை ஒரு குதிரையின் வாலில் கட்டி, காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
***
