தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அரிகோ! (8)

அரிகோ! (8)

அரிகோ! (8)


PUBLISHED ON : ஜூலை 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரிகோவிற்கு பொது மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்க, அதிகரிக்க சில மருத்துவ சங்கங்கள் மற்றும் திருச்சபைகளின் இடையே எதிர்ப்பும் அதிகரித்து வந்தது. அவரது மருத்துவ சேவையை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

பிரேசில் நாட்டுச் சட்டப் பிரிவுகளை மீண்டும் துழாவத் தொடங்கினர். அந்நாட்டு குற்றவியல் சட்டம் 284-வது பிரிவின்படி 'ஆவி' வந்தவர்கள் வைத்தியம் செய்வது மிகப்பெரிய குற்றம்.

இப்படியொரு சட்டம் உருவாக்கப்பட்டதற்குக் காரணம், அந்நாட்டில் ஆவி மீதான நம்பிக்கை மிக அதிகம். கிறிஸ்துவ மத சபைகள் இதற்கு எதிரான பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்திய போதிலும், அதனைப் போக்கவே முடியவில்லை.

இதனைத் தடுப்பதற்காகவே இப்படியொரு சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அதனை மீறுகின்ற வகையில் மூலை முடுக்குகள், கிராமங்கள், குக்கிராமங்கள் என்று அத்தனை பகுதிகளிலும் ஆவி மருத்துவம் என்பது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சட்டத்தால் தடுக்கவே முடியவில்லை.

இந்நிலையில் 'ஆவி' வந்து வைத்தியம் செய்வோர் அங்கு நூற்றுக்கணக்கில் இருந்த போதும், அவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக் கையும் எடுக்காமல், அரிகோவை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இது ஏன்?

அரிகோவின் 'ஆவி வைத்தியம்' பிரமிப்பூட்டும் விதமாக இருந்ததோடு, உலகம் முழுவதும் அவருக்கொரு அசாத்திய நற்பெயரைப் பெற்றுத் தந்திருந்தது. குறிப்பாக, முறையாகக் கற்றுப் பட்டம் பெற்ற மருத்துவ நிபுணர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை முக்கிய இலக்காகக் கொண்டு அவர் சிகிச்சை அளித்துக் காப்பாற்றியதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

நீதிமன்றத்திற்குச் சென்றது வழக்கு. நாட்டில் அதிபர் ஜுசேலினோ குபிட்ஷேக் தலையிட்டும் அரிகோவிற்கான தண்டனையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சூனியம், செய்வினை போன்றவற்றைச் செய்ததாகக் கூறி, 1963ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி பதினாறு மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பொதுமக்களிடையே இந்தத் தீர்ப்புக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

மருத்துவ சேவை ஒன்றையே தன்னலம் கருதாமல், பைசா கூட வாங்காமல் செய்துவரும் அரிகோவை சிறைக்கு அனுப்ப அனுமதிக்கப் போவதில்லை என்றுகூறி பெருங்கூட்டம் ஒன்று அவர் வீட்டைச் சுற்றி அரணாக நின்றது.

இதனிடையே அவரைக் கைது செய்ய வந்த காவலர்களும், அதனைச் செய்ய முடியாமல் தயக்கம் காண்பித்தனர்.

இவற்றையெல்லாம் பொறுமையாகப் பார்த்த அரிகோ, சட்டத்திற்குப் புறம்பாக நடக்க விரும்பாமல் அவரே வலிய முன்வந்து காவல்துறை வாகனத்தில் ஏறியபடி, சிறைச்சாலைக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்.

சிறைக் காவலரோ அரிகோவை மிகவும் பாழடைந்த நிலையில் காணப்பட்ட பழைய சிறைச்சாலைக்குள் சிறை வைக்க விரும்பாமல், உள்ளே அனுமதிக்க மறுத்தார். வேண்டுமென்றால் அருகிலுள்ள பெரிய லாட்ஜ் ஒன்றில் கைதியாக இருக்குமாறு அரிகோவிடம் கேட்டுக் கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

ஆனாலும், இதனை ஏற்க மறுத்து சிறைக்குள் சென்றார் அரிகோ.

வெளியே மக்கள் கூட்டம் அரிகோவை விடுவிக்குமாறு தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டே இருந்தது. சிறைக் காவலர்களுக்கும் அரிகோவை உள்ளே வைத்திருப்பதில் முழுக்க, முழுக்க விருப்பமே இல்லாத நிலை காணப்பட்டது.

இதனிடையே இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த அச்சிறைக் கைதிகள், 'சாப்பாடு சரியில்லை,'' என்று வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவித்து, மிகப் பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர். நிறைய பேர் அங்கிருந்து தப்பி வெளியேறினர்.

ஆனால், அரிகோவோ, உணவு நன்றாகவே இருப்பதாகக் கூறி அவர்களைச் சமாதானப்படுத்தி, கலவரத்தைச் சட்டென்று முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார்.

கலவரத்தின் போது சிறையில் உள்ள சேதமடைந்த பொருட்களைப் புதுப்பிக்க முயன்றார். பலகைகளை வரவழைத்து அவரே செய்ய ஆரம்பித்ததும், பிற கைதிகளும் அவருடன் இணைந்து பொருட்களைச் செப்பனிட்டனர்.

தமது சிறைக் கொட்டடிக்கு புதிய பெயின்டை வரவழைத்து வர்ணம் பூசினார். அனைத்துக் கைதிகளும் இதனைப் பின்பற்றினர்.

இவ்வாறு சிறைக் கைதிகளை ஒழுக்கக் கோட்பாட்டிற்கு படிப்படியாக கொண்டு வந்தார். இதனிடையே அங்குள்ள கைதிகளின் நோய்களைக் குணப்படுத்தவும் தனது வைத்திய முறைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

இதனால் அவரது அறைக்கு வெளியே எப்போதும் கைதிகளின் கும்பல் அதிகமானது.

இந்த விஷயம் எப்படியோ சிறைக்கு வெளியிலும் பரவியதால், நோயாளிகள் பலரும் சிறைக்கு வெளியே கூடத் தொடங்கிவிட்டனர். அரிகோவிடம் சிகிச்சை பெறுவதில் அவர்கள் போட்டி போடத் தொடங்கினர்.

இதனால் சிறைக்கு வெளியிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து ஒரு பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியது. பத்திரிகைகாரர்கள் வந்து குவியத் தொடங்கினர். முன் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் இந்த விவரங்கள் செய்தியாக வெளியாகின. இது நிர்வாகத் திற்குப் பெரும் இடைஞ்சலாக அமைந்தது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போகுமோ என்ற அச்சம் பரவியது.

எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு ஆவன செய்ய வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் அரிகோவின் வழக்கு விசாரிக்கப்பட்டது. 1965ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி அரிகோ நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனை ரூஸ்வெல்ட். இதன் உளவியல் துறை இயக்குநராகப் பணியாற்றிய டாக்டர் ராபர்ட் லாயிட்லா அரிகோவைப் பற்றி ஒரு விரிவான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்தார். அரிகோ அறுவை சிகிச்சை செய்கிறபோது எடுக்கப்பட்ட வண்ண திரைப்படங்களைப் பல முறை நுணுக்கமாகப் பார்த்து அறிக்கையைத் தயார் செய்திருந்தார்.

அந்த அறிக்கையில் சில அபூர்வ தகவல்களைத் தெரிவித்திருந்தார். அறுவை சிகிச்சை செய்கிற போது அரிகோவின் முகம் ஏதோ ஒரு மாயக்கட்டில் இருப்பதுபோல முற்றிலும் சாந்தமாக மாறிவிடுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அறுவை சிகிச்சையின் போது, அதிலும் குறிப்பாக கண்களில் அறுவை சிகிச்சை செய்கிறபோது அவரது விரல்கள் இலகுவாகவும், அசாதாரணமாகவும் செயல்படுகின்றன என்றும், அவர் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தாலும் அவை சாதாரணமாகச் செயல்படுகின்றன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கத்தியைப் பயன்படுத்தும்போது அதில் தயக்கம் துளிக்கூட இல்லாமல் ஒரு தீர்க்கமான தைரியத்தோடு இருப்பது புலப்படுவதாவும், அப்போது காணப்படும் வேகம் அனுபவம் வாய்ந்த டாக்டர்களால் கூட முடியாத ஒன்று என்றும் அதில் கூறியிருந்தார்.

முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமலேயே மிகச் சாதாரணமாக அறுவை சிகிச்சை செய்வது வியப்பைத் தருவதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நோயாளிகளுக்கு மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படாமல் முழு உணர்வுடன் காணப்பட்டாலும், யாரிடமும் அறுவை சிகிச்சையைப் பற்றிய பயம் சிறிதும் காணப்படவில்லை என்றும், பதற்றமோ, உடல் விறைப்போ இல்லாமல் ஆடாமல் அசையாமல் அடித்து வைத்த கற்சிலை போல நின்றவாறு சிகிச்சைக்கு ஒப்புதல் தருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அறுவை சிகிச்சையின் போது துளி இரத்தம் சிந்துவதைத் தவிர வேறு ரத்தமே வருவதில்லை என்றும், காயத்துக்குத் தையல் எதுவும் போடாமல் தானாகவே ஒன்று சேர்ந்து உடனடியாக ஆறிப் போவதாகவும் வியப்புடன் அறிக்கையில் கூறியிருந்தார்.

தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us