/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - உடல் வினோத செயல்பாடு!
/
அதிமேதாவி அங்குராசு - உடல் வினோத செயல்பாடு!
PUBLISHED ON : மே 06, 2023

மனித உடலின் இயக்கம் ஆச்சரியமானது. அதை அறிந்து கொண்டால், ஆரோக்கியமாக வாழலாம். உடலில் ஒவ்வொரு உறுப்புகளின் பணி பற்றி பார்ப்போம்...
எச்சில்: நாவில் சுரக்கும் எச்சில். அதை கண்ட இடங்களில் துப்பினால் அருவருப்பு வரும். எனவே கண்டபடி துப்பக்கூடாது. ஒரு உணவுப் பொருள் எச்சிலில் கரைந்தால் மட்டுமே அதன் சுவையை உணர முடியும்.
மனித உடலில் நாள் ஒன்றுக்கு, 1.5 லிட்டர் வரை எச்சில் சுரக்கும். வாழ்நாளில் ஒருவருக்கு சுரக்கும் எச்சிலால் இரண்டு நீச்சல் குளத்தை நிரப்ப முடியும் என கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
ரத்தம்: உடல் முழுதும், ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது ரத்தத்தில் உள்ள சிவப்பணு. இது, உடலை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம், 60 நொடிகள் தான். அதாவது, ரத்த சிவப்பணுக்கள், நரம்பு வழியாக, உடல் முழுதையும் சுற்றி வர 1 நிமிடம் போதும்.
கண்: முக்கியமான புலனுணர்வு உறுப்பு கண். ஒவ்வொருவருக்கும் கண்ணின் நிறமும் வித்தியாசம் உடையது. கண் கருவிழி கறுப்பு நிறத்தில் இருக்கும். பிறக்கும் போது, அது நீல நிறமாகதான் இருக்கும். பிறந்த பின், வெளியில் உள்ள புற ஊதா ஒளிக்கற்றை தான், உண்மை நிறத்தை கொண்டு வரும்.
தோல்: உடலில் அடிக்கடி தோல் உரியும். வாழ்நாள் முழுதும் உரியும் தோலின் மொத்த எடை, 18 கிலோ என கண்டறியப்பட்டுள்ளது.
மூளை: சுவாசிக்கும் ஆக்சிஜன் சக்தியில், 20 சதவீதம் பயன்படுத்துகிறது மூளை.
சிறுநீரகம்: சிறுநீரகத்தில், 10 லட்சம் வடிகட்டிகள் உள்ளன. அதனால், 1 நிமிடத்தில், 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.
முகுகெலும்பு:எவ்வளவு உயரமாக இருப்பவருக்கும், துாங்கும் போது, 1 செ.மீ., உயரம் குறைந்து விடும். முதுகெலும்பில் உள்ள குருத்தெலும்புகள், துாங்கும் போது சுருங்கி விடுவதே இதற்கு காரணம்.
உடலில் கிட்டத்தட்ட, 5 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு நாளும், 400 மி.லி., வியர்வையை சுரக்கும்!
காது: கேட்பதற்கு பயன்படுகிறது காது. அது மற்றொரு முக்கிய விஷயத்தையும் செய்கிறது. கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கும் உதவுகிறது. மயங்கி சரிந்து விடாமல், மொத்த உடல் அமைப்பையும், சமநிலைப்படுத்துகிறது. காதில் உள்ள, 'காக்லியா' திரவமே இதற்கு உதவுகிறது.
கேட்பதற்கும் இந்த திரவமே உதவுகிறது.
ஒலி அலைகளை காது மடல்கள் உள்வாங்கி, காக்லியாவை அதிர்வடைய வைக்கிறது. அந்த அலைகள் அலைந்து, திரிந்து, மைக்ரோ நொடியில் மூளை சத்தத்தை உணர வைக்கிறது.
தெளிவாக கேட்க, 15 டெசிபல் ஒலி அளவே போதுமானது. அதை மீறும் போது, காதுகளுக்கு பிரச்னை வரும்.
முதலில் மயக்கம், தலை சுற்றல், வாந்தி, தலை வலி எனத் துவங்கி, இறுதியில் கேட்கும் திறன் குறைந்துவிடும். காது மடல்கள் அற்புதமான வடிவத்தில் உள்ளன. இவை இல்லாவிட்டால், சத்தம் நேரடியாக தலைக்குள் மோதி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.