PUBLISHED ON : மே 06, 2023

ஜூஸ் என்ற சாறு தயாரிக்க, பழங்கள் மட்டும் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், சில காய்கறி மற்றும் கிழங்கிலும் சாறு தயாரித்து அருந்தலாம். உடலுக்கு சத்துகள் நேரடியாக கிடைக்கும்.
அது பற்றி காண்போம்...
முள்ளங்கி: உணவில் சமைத்து பயன்படுத்தப்படுகிறது முள்ளங்கி. இதில், சாறு தயாரித்தும் அருந்தலாம். தேவையான கார, உப்புச்சத்துக்கள் எளிதாக கிடைக்கும்.
முள்ளங்கியை சிறு துண்டுகளாக்கி நீர் விட்டு அரைத்து வடிக்கட்டி சாறாக பயன்படுத்தலாம். இதன் சுவை நாவிற்கு பழகும் வரை, சிறிது எலுமிச்சை சாறும் உடன் சேர்த்துக் கொள்ளலாம்.
முள்ளங்கியை அரைத்த உடன் பருகினால் தொண்டை கரகரக்கும். அரைத்து வடிகட்டி, சிறிது நேரத்திற்கு பின் பருகலாம்.
முள்ளங்கி சாறு அருந்தினால்...
● வயிறு சுத்தமாகும்
● ரத்தத்தில் கழிவு நீங்கும்
● எலும்புகள் உறுதிப்படும்
● விருந்தில் உண்டும் கனமான உணவுகளை செரிக்க வைக்கும்
● பிஞ்சு முள்ளங்கியை அப்படியே சாப்பிடலாம்.
நிறைய நுண் தாதுக்கள் நிரம்பியுள்ளதால் வாரத்தில், ஒன்று அல்லது இரண்டு நாள் சாறாக பருகலாம். பருக துவங்கியதும் லேசாக உடல் சோர்வடைவது போல் தெரியும். அதற்கு காரணம் வயிற்று பகுதியில் திரண்டிருக்கும் கொழுப்பை இது கரைக்கும். இதனால் ஏற்படும் மாற்றம்தான் சோர்வு போல் காட்டும். பின் படிப்படியாக உடலை வலுவாக்கும்.
புடலங்காய்: இதை துருவி, பிழிந்தால் கிடைக்கும் சாறை பருகலாம். நல்ல செரிமான திறனை தரும். தாது உப்பு சத்துக்களை அளிக்கும். இதை குடித்தால் பார்வை பளிச்சென தெரியும். சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும்.
ரத்தத்தில், காரம், உப்பு அதிகரித்தால் சமனாக்கும். தோலுக்கு பளபளப்பு தரும். மாதவிடாய் தினத்திற்கு முன் பெண்கள் பருகினால் உதிரபோக்கு அளவுடன் இருக்கும். குளிர்காலத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வெள்ளரிக்காய்: புடலங்காயின் அனைத்து சத்துக்களும் உடையது வெள்ளரிக்காய். மூளை பலத்தை அதிகரிக்கும். கோடையில் ஏற்படும் நாவறட்சியை போக்கும். இதை சாறாக்கிய உடன் பருகிவிட வேண்டும்.
வாழைத்தண்டு: இளம் வாழைத்தண்டை நீளமாக சீவி, நீர் விட்டு அரைத்து வடிகட்டினால் சாறு தயார். இதற்கு பூவன், ஏலக்கி, கற்பூர வாழை ரகங்களே சிறந்தவை. இந்த சாறு உடலில் கழிவை அகற்றும். நல்ல வலிமையுடன் இருக்க உதவும். பித்தத்தை போக்கும். சிறுநீரக கல்லை கரைக்கும்.
அருகம்புல்: சுத்தமாக்கிய கைப்பிடி அருகம்புல்லை, பொடியாக வெட்டி, நீர் விட்டு அரைத்தால், சாறு தயார். நாவிரும்பும் சுவை இருக்காது. இதனால், குடிக்க சிரமமாக இருக்கும். கூடவே, சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம். பசியை அதிகரிக்கும். புத்துணர்ச்சி ஊட்டும். ரத்தத்தில் சிவப்பு அணு எண்ணிக்கையை உயர்த்தும்.
இது போன்ற காய், கிழங்கு சாறு வகைகளை காலை நேரத்தில் பருகுவது தான் நல்லது. சத்துகளை பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்!
- எம்.நிர்மலா