PUBLISHED ON : நவ 21, 2020

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
படிப்பு, விளையாட்டில் முதல் இடம் பெற்று வந்தேன். சுட்டி தனத்திலும் முதன்மை பெற்றிருந்தேன்.
சாரணர் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தார் ஆசிரியர் பால்ராஜ். ஏழை எளியவர் தேவை அறிந்து, தயங்காமல் உதவுவார். நற்செயல்களுக்கு எடுத்துகாட்டாக திகழ்ந்தார்.
ஒருமுறை, பூண்டி ஏரிக்கு சுற்றுலா சென்றோம். சுற்றிப் பார்த்தபின், பொருட்கள் வாங்க கடைகளில் குழுமினர் மாணவர்கள்.
அந்தநேரம், குளிக்கும் ஆசையில் நண்பனுடன், ஏரி நீர் பிடிப்பு பகுதியில் இறங்கினேன். நீச்சல் தெரியாததால் வகையாக மாட்டினோம். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தோம்.
துாரத்தில் கண்காணித்தபடியிருந்த ஆசிரியர் பால்ராஜ், வேகமாக அணையின் சரிவு பகுதிக்கு வந்தார். அதிவேகமாக பாய்ந்து எங்களை மீட்டார். அந்த நிகழ்வு மனதில் பதிந்தது.
பள்ளி படிப்பு முடித்த பின், 1970ல் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, 'என்னை நினைவுள்ளதா ஐயா...' என்று கேட்டேன். மிக இயல்பாக, 'பிள்ளையை மறப்பாளாடா தாய்...' என்றார். கண்ணீர் பெருக்கெடுத்தது.
என் வயது, 70. பிரபல கல்லுாரியின் சேர்மனாக பதவி வகிக்கிறேன். அந்த ஆசிரியரின் பொறுப்பான செயலின் விளைவால், இந்த நிலையை அடைந்துள்ளதாக நம்புகிறேன்.
- ஜான்சன் ஸ்டீவர்டு இஸ்ரேல், சிவகாசி.
தொடர்புக்கு: 99655 22903
