தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குரங்குகளின் நோன்பு!

குரங்குகளின் நோன்பு!

குரங்குகளின் நோன்பு!


PUBLISHED ON : நவ 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநிமலை காட்டில், பாலுாட்டி வகை விலங்கான குரங்குகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒன்று கூடி, நீண்ட நேரம் விவாதம் நடத்தின. பின், 'வாரம் ஒரு நாள், உண்ணா நோன்பு இருக்கலாம்; அது, உடல் ஆரோக்கியத்தை காக்கும்' என்று முடிவு செய்தன.

உடனே, 'உண்ணா நோன்பு முடிந்ததும், பசி போக்க வசதியாக, தேவையான பழங்களை முன்கூட்டியே சேகரித்து வைத்து கொள்ளலாம்...' என்று அறிவுரை கூறியது, தலைவர் குரங்கு.

அருகே இருந்த தோட்டங்களில், அவசரமாக புகுந்த குரங்குகள், பழங்களை சேகரித்து, தலைவர் குரங்கின் முன், படையலாக வைத்தன.

உமிழ்நீர் ஒழுக அவற்றை பார்த்தபடியே, 'சரி... நோன்பை ஆரம்பிக்கலாம்...' என, பச்சைக்கொடி காட்டியது தலைவர்.

கூட்டத்தில் மிகவும் வயதான குரங்கு, 'தலைவரே... விரதம் துவங்கும் முன், அவரவருக்கு உரிய பழங்களை பிரித்துக் கொள்வோம். அப்போது தான், விரதம் முடிந்தவுடன் பசி தீர்க்க வசதியாக இருக்கும்; நமக்குள் சண்டை போடுவதையும் தவிர்க்கலாம்...' என்ற யோசனையை கூறியது.

இதை ஏற்ற தலைவர், பழங்களை பகிர்ந்தளித்தது.

அந்த சமயத்தில் இடைமறித்த சுட்டிக்குரங்கு ஒன்று, 'இப்போதே பழத்தின் தோலை உரித்து வைத்துக் கொள்வது நல்லது. விரதம் முடியும் போது, பழத்தை உரித்துக் கொண்டிருந்தால், பசியால் வாடி தவித்து தடுமாற வேண்டி வரும்... அவசியம் இல்லாமல் ஏன் அவதிப்பட வேண்டும்...' என்றது.

இந்த யோசனையும் ஏற்கப்பட்டது. குரங்குகள் எல்லாம், பழங்களின் தோலை உரித்து, பத்திரமாக வைத்துக்கொண்டன.

ஒரு குட்டிக்குரங்கு கண் சிமிட்டியபடியே, 'தலைவரே... தோல் நீங்கியுள்ளதால், பழங்களின் மீது துாசி படிய வாய்ப்புள்ளது. துாசி படிந்தால் பழங்கள் அழுகிப் போகும். அழுகிவிட்டால், விரதத்தை முடிக்கும் போது, சாப்பிட உதவாதே...

'இதை தவிர்க்க ஒரு யோசனை சொல்கிறேன். நமக்கு தான், உணவை வாய்க்குள் பதுக்கிக் கொள்ளும் வசதி இருக்கிறதே... அதை பயன்படுத்தி, பழங்களை, வாய்க்குள் சேமித்துக் கொள்ளலாமே... விரதம் முடிந்ததும் எந்த சிரமமும் இல்லாமல் விழுங்கிவிடலாம் அல்லவா...' என்றது.

ஏக்கத்துடன் பழங்களை பார்த்துக் கொண்டிருந்த தலைவருக்கு, இந்த யோசனை சரியாக பட்டது. உடனே ஆமோதித்தது.

பழங்களை வாயில் போட்டதும், சுவை பெருகி உமிழ்நீர் ஊற்றெடுத்தது; வாய்க்குள் ஒதுக்கியிருந்த பழங்கள் எல்லாம், தொண்டை குழிக்குள் இறங்கின.

இப்படியாக, 'நமக்கு இந்த நோன்பெல்லாம் ஒத்துரவராதுப்பா...' என்ற படியே, பழங்களில் புகுந்து விளையாடின குரங்குகள். நோன்பு திட்டம் கைவிடப்பட்டது.

கண்மணிகளே... கொண்ட கொள்கையில் உறுதி உள்ளவரா நீங்கள். அதை முறையாக திட்டமிட்டு செயல்படுத்தி உயருங்கள். தடை வரும் என எண்ணினால், குரங்குகளின் விரதம் போல் தான் முடியும்.

ராணி கிருஷ்ணமூர்த்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us