
கடந்த, 1983ல், நெய்வேலி, என்.எல்.சி., நடுநிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
எங்கள் குழுவில், மொத்தம், ஆறு பேர். அதில், ஒரு நாளைக்கு, ஒருவர் வீதம், ஆறு பேரும் தின்பண்டம் வாங்கி தர வேண்டும் என முடிவு செய்தோம்.
அவ்வாறே, இனிமையாக நாட்கள் கடந்தன. ஆனால், வெள்ளிக் கிழமை மட்டும், கோமதி என்ற பெண் வர மாட்டாள். 'கோவிலுக்கு போனேன்; வீட்டில், வேலை இருந்தது; உடல்நிலை சரியில்லை...' என காரணம் கூறுவாள்.
சில வாரம் கடந்தது. முதல் பருவத்தேர்வு வெள்ளிக் கிழமை அன்று வரவே, பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம்! 'இன்றைக்கு உன்முறை; நீ தான் ஏதாவது வாங்கி தரணும்...' என்று சொல்ல, 'ஓ...'வென அழ ஆரம்பித்து விட்டாள். 'என்னிடம் காசு இல்லை; மன்னித்துக் கொள்ளுங்கள்...' என்றாள்.
'அப்புறம் ஏன்டி, எங்க கிட்ட வாங்கி சாப்பிட்ட...' என ஒரு தோழி திட்டினாள்.
'இல்லடி... நான், ஒரு நாள் கூட சாப்பிடவில்லை; இரண்டாவது படிக்கும் என் தங்கச்சிக்கு தாண்டி கொடுத்தேன்...' என கண் கலங்கினாள். அனைவரும் சேர்ந்து அழுதோம்.
அப்போது, 'இனி வெள்ளிக் கிழமை விரதம்...' என நான் சொல்ல, அனைவரும் சிரித்து விட்டோம்.
தற்போது, என் வயது, 45; வெள்ளிக் கிழமை விரதம் இருந்தால், அந்த பள்ளிப் பருவம் தான் நினைவுக்கு வருகிறது. பழமையை நினைக்க வைத்த சிறுவர்மலர் இதழுக்கு மனதார வாழ்த்துகள்!
- எஸ்.கல்பனா, விழுப்புரம்.
தொடர்புக்கு: 96292 16553