PUBLISHED ON : மே 04, 2018

ராஜராஜ சோழன் என்றதுமே, நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். சோழர் ஆட்சியை சிறப்பிக்கும் சின்னம் இது. புதிய அமைப்பில், முதன் முதலில் கோவில் கட்டியவர் ராஜராஜ சோழன். ஐந்து ஆண்டுகளில் கட்டி முடித்தார்.
சுந்தர சோழன், இரண்டாம் பராந்தகனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்தவர் ராஜராஜ சோழன்; இளம் வயதிலேயே ஆட்சிக்கு உரிய அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார்.
கி.பி., 985, ஜூன் 25ல் அரசு பொறுப்பு ஏற்றார். பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றி, ஆட்சியில் வெற்றி கண்டார். இவர் ஆட்சி காலமே, சோழர் வரலாற்றில், பொற்காலம் என்பர்.
அண்டைநாடுகள்!
ராஜராஜன் ஆட்சி பொறுப்பேற்ற போது, சோழ அரசு வடக்கில், தொண்டை நாடு வரையிலும், தெற்கே பாண்டி நாட்டின் வட எல்லை வரையும் பரவியிருந்தது. வடக்கே கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லுார் வரை பரவியிருந்தது.
தெற்கே பாண்டிய நாடு தனித்து இருந்தது. மேற்கே, கங்கநாடு, குடகு, நுளம்பாடி, தடிகைபாடி மற்றும் மேல் கடற்கரை நாடு ஆகியவை தனித்தனிச் சிற்றரசுகளாக இருந்தன. வடமேற்கே, இரட்டப்பாடியில் மேலைச் சாளுக்கியர் ஆண்டு வந்தார். இலங்கையை, ஐந்தாம் மகிந்தன் ஆண்டு வந்தான்.
பேரரசு அமைத்தல்
ராஜராஜன் பட்டம் ஏற்றதும், ஆட்சி எல்லையை விரிவுபடுத்த எண்ணினார். படைத்திறனை பெருக்கி, ராஜ்ய விஸ்தரிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.
முதலில், சேர நாட்டின் மீது படையெடுத்தார். அங்கு, காந்தளூரில் பெரும் கப்பற்படைத்தளம் அமைந்திருந்தது. துாதுவனை அங்கு அனுப்பினார் மன்னர் ராஜராஜன்.
துாதுவனை இழிவுபடுத்தி, சிறையில் அடைத்தான் சேரமன்னன். இதை அறிந்த ராஜராஜன், காந்தளூர் மீது போர் தொடுத்து, சேரனின் மரக்கலங்களை அழித்து, வெற்றிகொண்டு, தன் நாட்டுடன் இணைத்தார்.
அடுத்து, குடகு நாட்டில், உதகை, அரண் மிக்க இடமாக இருந்தது. துாதுவனை, அங்கு அனுப்பினார் ராஜராஜன்; நீண்ட நாட்களாக திரும்பி வரவில்லை துாதுவன்.
இதையடுத்து, அந்த நாட்டின் மீது படையெடுத்தார்; 18 காடுகளை தாண்டி உதகை சென்றார். அரண் மிகுந்த உதகையை அழித்து, தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டார்.
கங்கபாடி என்ற நாடு, மைசூரில் பெரும் பகுதியாக இருந்தது. இதன் தலைநகரம் தலைக்காடு. இந்நாட்டை வெற்றி கொண்டு, கீழப்பாடி என்ற பகுதியை சோழ அரசுடன் சேர்த்தார். நெல்லுார் வரை பரவியிருந்த கீழைச்சாளுக்கியர் ஆட்சியை வீழ்த்தினார். கிருஷ்ணா நதி முதல் வட பெண்ணையாறு வரை இருந்தது, சீட்புலி நாடு, பாசி நாடு என்பவை. அங்கு ஆட்சி செய்த பீமனை வென்று, அவற்றையும் சோழநாட்டுடன் சேர்த்தார்.
இவ்வாறு, கீழைச் சாளுக்கிய நாடு, மேலைச் சாளுக்கிய நாடு, ஈழ மண்டலம், பழந்தீவு பன்னீராயிரம் ஆகிய நாடுகளையும் வென்று, பேரரசை மேலும் விரிவாக்கினார்.
நிலசீர்திருத்தம்!
நாட்டில், நிலத்தை தரம் பிரித்து, அளந்து, வரி விதித்து, வரி வசூலிக்க அதிகாரிகளை நியமித்தார். எல்லா வகை வரி வசூலையும் கவனிக்க, உயர்மட்ட அலுவலர் குழுவை நியமித்தார்.
நாட்டின் எல்லையை காவல் புரிய, படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தென்னிந்தியாவில், பேரரசை ஏற்படுத்தியவர் ராஜராஜன் என்றால் மிகையாகாது.
சிறந்த சிவபக்தர்; பிற சமயங்களுக்கும் பொன்னும், பொருளும் கொடுத்து ஆதரித்தார். குறிப்பாக, புத்த சமயத்திற்கு பெருமளவில் உதவி செய்தார். தஞ்சை பெரிய கோவில் விமானத்தில், புத்த சமய உருவங்கள் அமையும்படி செய்தார். நாகப்பட்டினத்தில் புத்தவிகாரம் கட்டுவதற்கு பொருளுதவி செய்தார்.
தன் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களும், மக்களும் விரும்பிய சமயத்தைப் பின்பற்ற உரிமை அளித்தார். அதற்கேற்ப, சமயக்கொள்கையை வகுத்தார். மக்கள் நலன் அறிந்து, சிறந்த நிர்வாகம் நடத்தினார்.
சமயப் பற்றோடு, சிறந்த அரசியல் அறிவும் பெற்றிருந்த ராஜராஜ சோழன் பெயரும், புகழும் பல்லாண்டு நிலை நிற்கும்!
