PUBLISHED ON : மே 04, 2018

பொன்மார் காட்டில், அழகிய புளிய மரம் ஒன்று இருந்தது. அதில், இரண்டு காகங்கள், கூடு கட்ட துவங்கின. முதலில், பாதுகாப்பான ஒரு கிளையை தேர்வு செய்தன. பின், அங்குமிங்கும் பறந்து, மெல்லிய குச்சிகளை எடுத்து வந்தது. ஒன்றோடு ஒன்று பிணைத்து, கூடு கட்ட ஆரம்பித்தன.
காகங்கள் கூடு கட்டுவதை, வேப்ப மரத்திலிருந்து, கவனித்த குயில், 'இன்னும் சில நாட்களில், முட்டையிட வேண்டும். ஆனா... கூடு கட்ட தெரியாதே... எங்கே போய் முட்டையிடுவேன்' என ஏங்கியது. பின் சற்று பொறுமையாக யோசித்தது. 'காகங்கள் கட்டும் கூடு பெரிதாகத்தானே இருக்கிறது... அதில், முட்டையிட அனுமதி கேட்கலாமா' என்று புளிய மரத்திற்கு பறந்து வந்தது.
''காக்கை அக்கா... சில நாட்களில், அழகான கூடு கட்டிவிடுவீர்கள்... அதில் முட்டையிடுவீர்கள்... ஆனா, எனக்கு கூடு கட்டத் தெரியாது; நான் உங்க கூட்டுல முட்டையிடலாமா...'' என்று கேட்டது.
பெண் காகம், அந்தக் குயிலை சில நாட்களாக கவனித்து வந்தது. அதிகாலையும், மாலையிலும் அதன் இனிய பாடலைக் கேட்டு ரசித்து வந்தது.
குயில் கேட்டதும், பெண் காகத்தின் மனதில், 'நான் இந்த குயிலிடம் பாட்டு கற்று, என் குஞ்சுகளுக்கும் சொல்லி கொடுக்கலாமே... பின், எங்கள் பாட்டை கேட்டு, காடே மயங்கிப் போகும்' என்று நினைத்தது.
''குயிலே... என் கூட்டில் முட்டையிட அனுமதிக்கிறேன்; ஆனால், அதற்கு கைமாறாக, பாட்டு பாட கற்றுத் தர வேண்டும்; செய்வாயா...'' என்றது.
மகிழ்ச்சியுடன் சம்மதித்தது குயில்.
தினமும் அதிகாலையில் பாட்டு வகுப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும், இனிய குரலில், பயிற்சி கொடுத்தது குயில்.
கடும் பயிற்சி செய்தது பெண் காகம். ஆனால், இனிமையாக பாட இயலவில்லை. குயிலைப் போல பாட நினைத்து வாயைத் திறந்தால், 'கா...கா' என்ற கொடூர குரல் தான் வந்தது.
குயிலின் யோசனைப்படி, கழுத்தளவு தண்ணீரில் நின்று பயிற்சி செய்தது காகம். ஊஹூம்... அப்போதும், குரலில் மாற்றம் தெரியவில்லை. இப்படியே ஒரு மாதம் கடந்தது.
திடீரென்று, 'இந்த குயில் ஏமாற்ற நினைக்கிறதோ... எனக்கு பாட்டு கற்றுத் தந்தால், நானும் அழகாக பாட துவங்கி விடுவேன். பின், காட்டில் தன் மதிப்பு குறைந்துவிடும் என்று ஏமாற்றுகிறதோ' என்று நினைத்து, கோபம் கொண்டது பெண் காகம்.
மறுநாள்-
வழக்கம்போல், பாட்டு கற்று கொடுக்க வந்தது குயில்.
''குயிலே... கற்று கொடுத்தது போதும்; ஒரு மாதம் கற்றும், பாட்டு வரவேயில்லை. நீ முறையாக கற்று கொடுக்காமல், ஏமாற்றுகிறாய்... அதனால், என் கூட்டில் முட்டையிட அனுமதிக்க மாட்டேன்,'' என்று கோபத்துடன், விரட்டிவிட்டது காகம்.
ஏமாற்றத்துடன் பறந்தது குயில்.
சில நாட்களில், காக்கை கூடு தயாராகி விட்டது. அதில், பெண் காகம், முட்டைகளை இட்டது; அவற்றை ஆண் காகமும், பெண் காகமும் மாறி மாறி அடைகாத்தன. சில நாட்களில் முட்டைகள் பொரிந்தன; குஞ்சுகள் இனிய வாய் திறந்து சிரித்தன.
ஆண் காகம் அங்குமிங்கும் பறந்து, இரை தேடி வர, பெண் காகம் குஞ்சுகளுக்கு ஊட்டி வந்தது.
ஒரு வாரத்திற்குப்பின், குஞ்சுகளை கொஞ்ச வந்த ஆண் காகத்திற்கு, ஆச்சரியம் காத்திருந்தது. காக்கை குஞ்சுகளின் நடுவே, ஒரு குயில் குஞ்சும் இருந்தது.
''அன்று குயிலை விரட்டி விட்டாய்... ஆனால், குயில் உன்னை ஏமாற்றி நம் கூட்டில் முட்டையிட்டு போய் விட்டது பார்த்தாயா...'' என்றது ஆண் காகம்.
''ஏமாறவில்லை... எல்லாம் எனக்கு தெரியும். அந்த குயில் முறையாகத்தான் பாட்டு சொல்லி தந்தது. ஆனால், நம் இனத்தின் குரல் மாறாது என்பதை புரிந்துகொண்டேன்.
''பாவம்... இவ்வளவு இனிய குரல் இருந்தும், குயிலுக்கு நம்மை போல் கூடு கட்டத் தெரியவில்லையே... ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு திறமை இருக்கும்... அதை பொறாமையோடு பார்க்க கூடாது என்பதை புரிந்துகொண்டேன்.
''சில தினங்களுக்கு முன், அந்த குயில் புளிய மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. அதன் நிலமை புரிந்து, நான்தான் இங்கு முட்டையிட அனுமதித்தேன். பாவம்... நம் குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து, குயில் குஞ்சை மட்டும் பட்டினியாக தவிக்க விட முடியுமா...
''இந்த குயில் குஞ்சு வளர்ந்து, இனிமையாக பாடும் போது, என் பிள்ளைதான் பாடுகிறது என்று பெருமையாக சொல்ல முடியும் அல்லவா,'' என்றது பெண் காகம்.
இதை கேட்டு, மனம் நெகிழ்ந்த ஆண் காகம், ''உனக்கு குயிலை போல, பாடத் தெரியவில்லை என்றால் என்ன... உன் கருணை நிறைந்த மனம், ஆயிரம் மடங்கு உயர்ந்தது...'' என்றது.
அவை குயில் குஞ்சுக்கும் உணவு ஊட்டி மகிழ்ந்தன. இந்த பந்தம் காலங்காலமாக தொடர்கிறது.
குட்டீஸ்... உங்களால் முடிந்த உதவியை, மற்றவர்களுக்கு செய்யுங்கள். அவரவருக்கு தனித் திறமை உண்டு; அதை மதியுங்கள்!
