PUBLISHED ON : ஜூலை 08, 2016

ஹென்றி மவுயத் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர், 1860 இந்தோ-சீனா பகுதிக்குச் சென்றார். அபூர்வ வகை பறவைகளையும், பூச்சிகளையும் தேடி காடு முழுவதும் அலைந்த வருக்கு, பறவைகள் கிடைக்க வில்லை. ஆனால், அதை விட அபூர்வ காட்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
காட்டின் அடர்ந்த பகுதியில், சீராக அமைக்கப் பட்ட சாலைகளும், கால்வாய்களும் நேர்த்தியாகக் கட்டப்பட்ட கோபுரங் களையும் கண்டு அசந்து விட்டார் ஹென்றி. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அது என்பதை உணர்ந்த ஹென்றி, தான் பார்த்தவற்றை டைரியில் எழுதி வைத்தார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, நாடு திரும்பிய ஹென்றி, விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்.
ஹென்றி எழுதி வைத்த குறிப்புகள், ஆராய்ச்சியாளர் களுக்குப் பெரிதும் உதவின. பிரான்ஸ் அரசு ஆராய்ச்சி குழு ஒன்றை அமைத்து, 'அங்கோர்' என்றழைக்கப்பட்ட அந்தப் பகுதியை ஆராய அனுப்பியது.
இந்தக் குழு, 1885ல் இப்பகுதியை துல்லியமாக ஆராய்ந்து, பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தது.
தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, 'கெமர்' என்ற பிரிவினர் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர்.
அந்த உண்மைகளில் சில...
கடந்த, ௫௦௦ ஆண்டுகளுக்கு முன்பே, 20ம் நூற்றாண்டு வளர்ச்சிக்குச் சமமாக, பலவிதங்களிலும் முன்னேறி இருந்திருக்கின்றனர்.
கெமர் இனத்தினர், ஆசிய நாடுகள் சிலவற்றுடனும், இந்தியாவுடனும் வியாபாரத் தொடர்பில் இருந்துள்ளனர். இந்தியாவிலிருந்து ஆன்மிக விஷயங்களையும் பின்பற்றியுள்ளனர்.
இவர்கள் வாழ்ந்த பகுதி, கம்போடியாவாக இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்பகுதியையே அவர்கள் 'ப்யூனம்' என்று அழைத்துள்ளனர். 'ப்யூனம்' என்றால் 'மலை' என்று பொருள்.
இந்த 'ப்யூனம்' பகுதியை உருவாக்கியவர், கவுண்டன்யா என்பவர். தன்னை நயவஞ்சகமாக கொல்ல வந்த வில்லோ லீவ் என்ற ராணியை வெற்றி கொண்டதோடு, அவரையே திருமணம் செய்து கொண்டார் கவுண்டன்யா.
இவர்களது வாரிசுகள் கம்பூஜாஸ் என்று அழைக்கப் பட்டனர். கம்பூஜாஸ் பிரிவின் முதல் அரசர் இரண்டாம் ஜெயவர்மன். இவரது காலத்தில் கெமர் இனம் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது. 48 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்.
ஜெயவர்மனின் வழித் தோன்றல்கள், 600 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து பக்தி வழிபாடு மட்டுமல்லாமல், உபநிடதங்கள், சமய சம்பிர தாயங்கள், சித்து வேலைகள், ப்ளாக் மேஜிக் எனப்படும் மந்திர வேலைகளையும் கற்றுள்ளனர்.
அரசு நிர்வாகம், மத சம்பந்தமான நிகழ்ச்சிகள், நகர அமைப்பு, ராணுவம் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தலைமையை உருவாக்கி, அவை செம்மையாக நடக்கவும் வழிவகுத்தவர் இரண்டாம் ஜெயவர்மன்.
ஜெயவர்மனுக்குப் பிறகு, இந்திரவர்மன் ஆட்சிக்கு வந்து, 11 ஆண்டுகள் கெமர் ராஜ்ஜியத்தை வழி நடத்தியுள்ளார்.
இவரது காலத்தில்தான் நீரைத் தேக்கி வைத்து, மதகு அமைத்தல், கட்டடங்கள் நிர்மாணிப் பது போன்ற பணிகள் நடந்தேறியுள்ளன. விவசாயத் துக்குப் போதிய தண்ணீர் வசதி செய்து கொடுத்து, நாட்டை வளமாக்கியுள்ளார்.
இவருக்குப் பிறகு வந்த யசோவர்மன் காலத்தில், கட்டட அமைப்பில் புது பரிமாணம் ஏற்பட்டது. மலையைக் குடைந்து சிற்பங்களைச் செதுக்கச் செய்தவர் இவரே! 12 மற்றும் 13ம் நூற்றாண்டில் பொற்காலமாக, சுபிட்சத்துடன் இருந்துள்ளது இவர்கள் ஆட்சி.
யசோவர்மன் காலத்துக்குப் பின் வந்தவர்கள் போதிய திறமை இல்லாதவர்களாக இருந்ததாலும், இயற்கை சீற்றம், எதிரிகளின் படை யெடுப்பு ஆகிய காரணங் களாலும் அங்கோர் பகுதி சீர்குலையத் துவங்கியது. 15ம் நூற்றாண்டில் பாரம்பரிய பெருமை முற்றிலுமாகக் குலைந்து போனது. இப்பகுதியைக் கைப்பற்ற சயாமியர்கள் முயன்றனர். அதில் சில தடங்கல் ஏற்பட்டு, சில காலம் இடைவெளி விட்டு, மீண்டும் அப்பகுதிக்குச் சென்றனர்.
போனவர்கள், அதிர்ச்சி யில், அப்படியே உறைந்து போயினர் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அப்பகுதி பாலைவனம் போல் வெறிச்சோடி கிடந்தது. மனிதர்கள் வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.
குறுகிய இடைவெளிக்குள் அவ்வளவுபேரும் எங்கு சென்றிருக்க முடியும். அக்கம் பக்கத்து நாடுகளில் குடியேறிய தாகவும், தெரியவில்லை.
இங்கிருந்த மக்கள் என்ன ஆனார்கள்? ஒட்டுமொத்தமாக இறந்து போனார்களா? அப்படியானால், எலும்பாவது மிஞ்சியிருக்க வேண்டுமே? காற்றோடு காற்றாக கலந்து போனால்தான் இப்படியொரு வெற்றிடம் ஏற்பட முடியும். அது சாத்தியமா?
கெமர் இனத்தவர் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடித்தே தீருவது என்று தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

