
ஹலோ... ஜெனி ஆன்டி... நான் உங்களோட பகுதியை மிகவும் விரும்பி படிக்கிறேன். மிகவும் மனம் நொந்த நிலையில்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டு சப்ஜெக்டில் பெயில் ஆன மாணவன் நான். திரும்பவும் எழுதி பாஸ் பண்ணிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும், நன்றாகத்தான் படித்தேன். பெயில் ஆவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அதற்காக, என் பெற்றோர் என்னை ரொம்பவும் திட்டித் தீர்த்துவிட்டனர். பள்ளிக்கூடத்திலும் என்னால் அவர்களது, 'சென்ட் பெர்சன்ட் ரிசல்ட்' பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறி என்னை திட்டித் தீர்த்தனர். இதனால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன். வீட்டை விட்டு இரண்டு நாள் ஓடிப்போய் விட்டேன்.
என் மனது உலைகளம் போல் உள்ளது. மீண்டும், 'அப்ளை' பண்ணி படிக்கிற, 'மூடே' இல்லை. வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டோம். இனி ப்ரெண்ட்ஸ், உற்றார், உறவினர் முன் எப்படி விழிப்பது என்றே தெரியல... என் காயத்தை உங்களிடம் கொட்டி விட்டேன். நீங்களாவது நாலுவார்த்தை ஆறுதலா சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன் ஆன்டி.
ஹாய் கண்ணா... நீ ஒரு தப்பும் செய்யல... எதுக்காக மற்றவர்களை பார்க்க அவமானப்படணும். மொதல்ல கண்ண துடைச்சிக்கோ... 'பர்ஸ்ட் மார்க்' வாங்கினவங்க எல்லாருமே பிரில்லியன்ட்... அவங்க மட்டும்தான் வாழ்க்கையை ஜெயிக்கப் பிறந்தவங்க... மற்றவங்க எல்லாரும் முட்டாள்கள்னு நினைச்சிக்காதே... நாம ரொம்ப, 'வேஸ்ட்னு... நினைக்கிற, 'காம்ப்ளக்ஸ்சை ' முதலில் உன் மனச விட்டு எடுத்துப்போடு.
மனச, 'ரிலாக்ஸ்' பண்ணிக்க... இப்ப ஒண்ணும் நடந்துடல... இந்தத் தோல்வி உன் வாழ்க்கையில் இனி மிகவும் ஜாக்கிரதை உள்ளவனாக உன்னை மாற்றப்போகுது. எனக்குத் தெரிந்து, 'ஸ்கூல் பர்ஸ்ட்' வாங்கின என் வகுப்புத் தோழன், இன்று சாதாராண வேலையில்தான் இருக்கிறான். மக்கு ப்ளாத்திரியாக இருந்த நண்பன் பிஸினஸ் செய்து, 'ஓஹோ'ன்னு இருக்கான்.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம சச்சின் டெண்டுல்கர் அண்ணாச்சி பத்தாம் வகுப்பை கூட தாண்டல. ஆனா, அவங்க, மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் சச்சினின் வாழ்க்கை பற்றி பாடமா வருது. இதுக்கென்ன சொல்ற...
மெகா பாலிவுட் ஸ்டார்களான சல்மான்கான், அமீர்கான் எல்லாம் +2 படித்தவர்கள்தான். ஒரு மனிதனின் எதிர்காலம் அவனது புகழ், திறமை எல்லாம் படிப்பை வைத்து கிடைப்பதில்லை. இது அவரவரது தனிப்பட்ட திறமை, அதிர்ஷ்டம், ஆண்டவனின் அருள் இவற்றை கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது.
நீ பெயில் ஆனதால் அழுகிறாய்... ஆனால், வாழ்க்கை முழுவதும், 'பர்ஸ்ட்' வந்தும் வேலை கிடைக்காமல் குமுறும் ஒரு அண்ணாவின் கடிதத்தை அடுத்த வாரம் படிக்கப் போற... அதன் பிறகு நீ தோல்வியை கண்டு கலங்கமாட்ட... போய் உன் ப்ரெண்ட்சை பாரு... நல்லா சாப்பிடு, 'டிவி' பாரு... அப்புறம் அடுத்த மாத தேர்வுக்கு ரெடியாகு. சரியா?
பெற்றோர்களே.... தோல்வியடைந்த குழந்தைகளை திட்டாதீங்க... ஏற்கனவே நொந்துபோயிருக்கும் அவங்களை மேலும், நோகடிக்காமல் ஆறுதல்படுத்தி தூக்கி நிறுத்துங்க...
சிலர் படிப்பில் ரொம்ப சுமாரா இருப்பாங்க.... ஆனால், ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் ஒரு தனித்திறமை இருக்கும். அது மியூசிக்கா இருக்கலாம், நடனம், ஸ்போர்ட்ஸ், செஸ், நீச்சல், கராத்தே இப்படி அவர்களுக்குள் என்ன திறமை ஒளிந்திருக்கு என்று பார்த்து, அந்த பீல்ட்டில் பயிற்சி கொடுங்க. நிச்சயமாகவே ஒரு சச்சின், கணிதமேதை ராமானுஜம், விஞ்ஞானி ஐன்ஸ்டின் போன்று, உங்கள் பிள்ளைகள், 'ஷைன்' பண்ணலாம். யார் கண்டது? இது பெற்றோராகிய உங்கள் கையில்தான் உள்ளது!
- ஆறுதலுடன், ஜெனிபர் பிரேம்.

