PUBLISHED ON : மே 31, 2013

நாம் சராசரியாக ஆறு விநாடிகளுக்கு ஒருமுறை கண்களைச் சிமிட்டிக் கொள்கிறோம். கண் சிமிட்டல் என்பது அனிச்சையாக நடைபெறும் செயலாகும். இவை தவிர பிரகாசமான ஒளியைப் பார்க்கும்போது நாம் கண்களைச் சிமிட்டிக் கொள்கிறோம்.
நாம் கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொள்வது நமது கண்களில் விழும் தூசு போன்ற பொருட்களைக் கழுவி வெளியேற்றுவதற்கு உதவும். நம் கண்களில் சுரக்கும் கண்ணீர், தூசுகளைக் கழுவும் திரவமாகச் செயல் படுகிறது.
நாம் கண்களைச் சிமிட்டும்போதும் இரு இமைகளும் மேலும், கீழும் இறங்கி, ஏறி கண்களை மூடிக் கொள்கின்றன. நமது கண்களின் மேல் இமையின் உட்பகுதியில் கண்ணீர் சுரப்பிகள் அமைந்துள்ளன. அச்சுரப்பிகளில் சுரக்கப்படும் கண்ணீர், நாம் இமை களை மூடும்போது கண்களின் மீது பரவி கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. இதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படாதிருக்கிறது.
கண்களில் தூசு மற்றும் அழுக்கு போன்ற பொருட் கள் விழும்போது கண்ணீர்ச் சுரப்பிகள் அதிக அளவில் கண்ணீரைச் சுரந்து, அக்கண்ணீரின் மூலம் தூசு, அழுக்கைக் கழுவி வெளியேற்றுகிறது.
பாம்பு போன்ற உயிரினங்களுக்கு கண் இமைகள் இல்லை. எனினும் அவற்றின் கண்களில் தூசு விழாமல் இருக்க, கண்களின் மீது சற்று தடிமனான சவ்வு அமைந் துள்ளதால் அவற்றின் கண்கள் பாதுகாக்கப் படுகின்றன.
