
பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் மிகவும் ஆனந்தமாக வசித்து வந்தனர்.
ஒருமுறை, கண்ணன் இந்திரப்பிரஸ்தம் வந்திருந்தார். அர்ஜுனனும், கண்ணபிரானும் மிகுந்த நட்பு கொண்டிருந்தனர்.
ஒருநாள்-
இரு நண்பர்களும் தங்கள் பந்து ஜனங்களுடன் யமுனையில் நீராடி விளையாடி வரச் சென்றனர்.
திடீரென ரதம் நின்றது. இரு நண்பர்களும் வியப்புடன் பார்த்தனர். பாதையின் நடுவே ஒரு அந்தணன் நின்றான். உருக்கிய பொன்போன்ற நிறம். நெடிய உருவம். சிவந்த தாமரை போன்ற கண்கள். மரவுரியும், ஜடா முடியும் தரித்திருந்தான்.
கண்ணனையும், அர்ஜுனனையும் நோக்கி, ''வீரர்களே! என்னை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா? நான்தான் அக்கினி பகவான். சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை இந்த பிரதேசம் என் கையிலிருந்தது. ''நான் இவ்வனத்திலுள்ள கொடிய பாம்புகளை அழித்து விட்டேன். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்புகளும் அதிகரித்து விட்டன. நாகங்களின் தலைவன் தட்சன் என் ஆட்சியை அழிக்கவும் துணிந்துவிட்டான்!''
''தட்சன் மிகுந்த பலவான் என்று கேள்விப்பட்டேன்,'' என்றார் கண்ணபிரான்.
''ஆம். வலிமைஉள்ளவன்தான். மேலும், இந்திரன் அவனுடைய நண்பன். அவனுடைய உதவியினால் தட்சனை அடக்கும் முயற்சி பலன் தரவில்லை. நான் இக்காட்டை எரித்து விட முயன்றால், இந்திரன் மேகங்களைக் கொண்டு என் வெப்பத்தைத் தணித்து விடுகிறான். ஆகையால், நீங்கள்தான் என் பசி தீர உதவ வேண்டும்,'' என்றான் அந்தணன் வேடத்திலிருந்த அக்கினி பகவான்.
அர்ஜுனனின் முகத்தில் கவலைக்குறி படர்ந்தது. அவன் அந்தணனை நோக்கி, ''அக்கினி தேவா, நானோ மனிதன். என் வலிமை ஓர் அளவிற்கு உட்பட்டது. என்னிடம் சிறந்த ஆயுதங்களும், அஸ்திரங்களுமிருந்தாலும் இந்திரனை எதிர்த்துப் போரிடக் கூடிய கருவிகள் என்னிடம் இல்லை. நான் தங்களுக்கு உதவவே விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தயை செய்து கூறுங்கள்,'' என்றான்.
''புயவலிமைமிக்க வீரர்களே! நான் உங்களுக்குச் சிறந்த ஆயுதங்களைத் தருகிறேன். வருண தேவன் தன்னிடமுள்ள மிகச் சிறந்ததும், இணையற்றதுமான ரதம், வில், அம்பு, அம்பறாத் தூணி ஆகியவைகளைத் தருவதாகக் கூறியுள்ளான்,'' என்றான்.
கண்ணபிரான், அர்ஜுனனிடம் கூறினார்.
''நண்பா, இதை மறுக்காதே. அக்கினி தேவனுக்கு நீ செய்யப் போகும் உதவியினால் ஒப்பற்ற ஆயுதங்கள் கிடைப்பது மட்டுமின்றிப் புகழும் பெறுவாய். மேலும், அக்கினிதேவனுடைய நட்பும் உனக்குக் கிட்டும்!'' என்றான்.
''அக்கினி தேவா, நாங்கள் இருவரும் உனக்கு உதவிபுரியச் சித்தமாயிருக்கிறோம்,'' என அவர்கள் கூறியதும் அக்கினிதேவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
''நல்லது. நான் வனத்தை எரிக்கிறேன். நீங்கள் இருவரும் மேலேயிருந்து பொழியும் மழையையும், தப்பி ஓட முயற்சி செய்யும் இக்காட்டுப் பிராணிகளையும் தடுத்து நிறுத்தி விடுங்கள். தட்சன் இங்கு இல்லை. இதுதான் தக்க சமயம்,'' என்றான் அக்கினி.
மாநிறமும், கட்டமைந்த உடலும், திரண்ட தோள்களும் படைத்த அர்ஜுனன் ரதத்தை வலம் வந்து வணங்கினான்.
பின்னர், கவசம் தரித்து, காண்டீபம் என்ற அந்த வில்லைக் கரத்தில் எடுத்தான். பளுவான அந்த வில்லைக் கரத்தில் ஏந்தி நாணேற்றியதும் பெருத்த ஒலி எழுப்பியது. காண்டீபத்தின் அந்த ஒலியைக் கேட்டவர்களின் இதயம் நடுங்கியது.
அக்கினிதேவன் கண்ணபிரானுக்கு சக்கராயுதத்தையும், கவுமோதகி என்ற கதையையும் அளித்தான்.
கிருஷ்ணரும், அர்ஜுனனும் இரு ரதங்களில் அமர்ந்து கொண்டனர். காட்டின் நாற்புறமும் அவர்கள் ஆயுத பாணிகளாகச் சுற்றி வலம் வந்தனர்.
இரக்கமற்ற அக்கினிதேவன் உயிர்களை விழுங்கிக் கொண்டிருந்தான். தப்பி ஓடிய பிராணிகள், கிருஷ்ணாச்சுனர்களின் அம்புகளுக்கு இரையாகின. பெருத்த மரங்கள் முறிந்து விழும் ஓசையும், பிராணிகளின் உறுமலும், கூச்சலும் காதைப் பிளந்தன. புகை சூழ்ந்து நின்று கதிரவனின் ஒளியை மறைத்தது.
காண்டவ வனத்திற்கு நேர்ந்த விபத்தைப் பற்றிக் கேள்வியுற்றதும் இந்திரன் ஓடோடி வந்தான். அதற்குள் அதன் பெரும்பகுதி அக்கினிக்கு இரையாகிவிட்டிருந்தது. சிறந்த வீரர்களான கிருஷ்ணரும், அர்ஜுனனும் வில்லேந்தி நின்றனர்.
இந்திரன் பெருமழை பெய்யச் செய்தான். இடி முழங்கப் பெருந்துளிகள் விழலாயின. ஆயினும் தீ அணையவில்லை.
அர்ஜுனனின் பாணங்கள் காண்டவ வனத்திற்குக் கூரையாக அமைந்தன. மழை நீரை உள்ளே புகவிடாமல் தடுத்தன. கண்ணபிரானின் சக்கராயுதமானது ஆயிரக்கணக்கான கொடிய மிருகங்களையும், பாம்புகளையும் கொன்று குவித்தது. அக்கினிதேவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிய கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் பற்பல ஆயுதங்களையும், வரங்களையும் அளித்து மகிழ்ந்தான்.