
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், டி.எஸ்., சாரதா வித்யாலயம் பள்ளியில், 1973ல், 1ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். என் மாமா மகன் கேசவ நாராயணனும் அதே வகுப்பில் படித்தான்.
இனிய பாடல்கள் பாடி, பாடங்களை தெளிவாக விளக்குவார், வகுப்பு ஆசிரியை பாமா. அவருக்கு குழந்தையில்லை. அதனால், எங்களை பார்த்ததும், மகிழ்ச்சியில் பூரித்து அன்பை பொழிவார்.
அன்று பாடம் நடத்திய போது, என் மாமா மகனுக்கு துாக்கம் வந்து விட்டது. அதை கவனித்தவர், அன்புடன் மடியில் கிடத்தியபடி பாடம் நடத்தினார். இது, அவருடனான நெருக்கத்தை அதிகரித்தது. தயக்கமின்றி சந்தேகங்களை நிவர்த்தி செய்து, பாடங்களை சிறப்பாக கற்க வழி செய்தது.
இப்போது என் வயது, 53. இன்றும் என் மாமா மகனை கண்டவுடன், 'அப்பவே நீ ஆசிரியை மடியில் படுத்து துாங்கியவனாச்சே...' என விளையாட்டாக சொல்வேன். அந்த அளவு நெகிழ்வாக அந்த நிகழ்வு பதிந்துள்ளது. அன்னை போல், அன்பை பொழிந்த அந்த ஆசிரியை மனதில் நிறைந்துள்ளார்.
- ஆர்.பாலாஜி, கோவை.
தொடர்புக்கு: 80563 56325

