
கும்பகோணம், டவுன் உயர்நிலைப் பள்ளியில், 1953ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, நன்றாக கணக்கு போடுவேன். என்னை, 'கணிதமேதை...' என அன்புடன் அழைப்பார், கணித ஆசிரியர் கே.எஸ்.விஸ்வநாதன்.
பொது தேர்வில், கணக்கு பரீட்சை எழுதியபோது, ஒன்றின் விடையில் சற்று சந்தேகம் ஏற்பட்டது. இரண்டாவது முறை கவனத்துடன் சரி பார்த்தேன். அப்போதும் விடையில் குழப்பம் வரவே, அதை முடிக்காமல், அப்படியே விட்டு, அடுத்த கேள்வியில் கவனம் செலுத்தினேன்.
கடைசியாக, 'கிராப்' வரைப்படம் போடுவதில் ஆழ்ந்திருந்தேன். தேர்வு நேர எச்சரிக்கை மணி ஒலியை சரியாக கவனிக்கவில்லை. நேரம் முடிந்ததை அறிவிக்கும் மணி ஒலித்தது. விடைத்தாளை வாங்க வந்தார், கண்காணிப்பாளர். அதிர்ச்சி அடைந்தேன். முழுமையாக எழுதாத விடைத்தாளை கொடுத்து, வருத்தத்துடன் வெளியேறினேன்.
எதிரே வந்த கணித ஆசிரியர், 'எப்படி எழுதினாய்...' என விசாரித்தார். நடந்ததைக் கூறினேன். மிகுந்த ஏமாற்றத்துடன், 'நீ கண்டுபிடித்தது சரியான விடை... 10 மதிப்பெண்ணை கோட்டை விட்டு விட்டாயே...' என, என்னை திரும்பி பார்க்காமலே சென்று விட்டார்.
எனக்கு, 88 வயதாகிறது; கணக்கு பாடத்தில், 'சென்டம்' எதிர்பார்த்திருந்தவரை, கவனக்குறைவால் ஏமாற்றிய வருத்தம், இன்றும் விலகவில்லை.
- எஸ்.நரசிம்மன், சென்னை.
தொடர்புக்கு: 94453 66035

