
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ஓக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலை பள்ளியில், 1952ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன்.
கவி சுப்பிரமணிய பாரதியாரின் தம்பி சி.விஸ்வநாத ஐயர் தலைமை ஆசிரியராக இருந்தார். ஓய்வு பெறும் வயதை நெருங்கியதால், உடல் மெலிந்து காணப்பட்டார்.
அன்று முற்பகல் வகுப்பு இடைவேளையின் போது, வெளியே வந்தோம். கழிப்பறை வசதி இல்லாததால், அருகில் திறந்தவெளிக்கு சென்றோம். உடன் கால் ஊனமுற்ற மாணவர் ஒருவரும் வந்தார். அவர் மெதுவாக நடந்ததால் திரும்ப நேரமாகி விட்டது.
இடைவேளை நேரம் முடிந்து விட்டதால், வாசலில் நின்றபடி, 'டபுல் அப்... டபுல் அப்...' என விரைவு படுத்தினார், தலைமை ஆசிரியர்.
அதைக் கேட்டு வேகமாக ஓட முயன்றோம். அப்போது, 'மெதுவாப்பா...' என குரல் கேட்டது. ஊனமுற்ற மாணவரின் கையைப் பிடித்து தாங்கியபடி உதவிக்கொண்டிருந்தார், தலைமை ஆசிரியர். அது நெகிழ்வு தந்தது.
என் வயது, 87; தெற்கு ரயில்வேயில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணி காலத்தில் ஊழியர்களிடம் கண்டிப்பு காட்டிய போதும், அந்த தலைமை ஆசிரியர் வழியில், மாற்றுத்திறனாளி ஊழியர்களிடம் பரிவுடன் நடந்து, முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.
- எம்.மலையாண்டி, மதுரை.
தொடர்புக்கு: 99426 86069

