
காலை, 9:00 மணி -
விலாஸ் பள்ளியில் வகுப்புகள் துவங்க மணி ஒலித்தது. கம்பீர தோற்றமுள்ள சரித்திர ஆசிரியர், 6ம் வகுப்பில் முக்கிய பாடம் நடத்த துவங்கினார்.
மாணவ, மாணவியர் உற்சாகமாக கவனித்தனர்.
பாடம் குறிப்பிடும் பகுதியை சுவையாக வர்ணித்து, அந்த இடத்துக்கே அழைத்துச் செல்வது போல் கற்பிக்கும் திறன் கொண்டவர் அந்த ஆசிரியர். அதனால், சரித்திர வகுப்பு என்றாலே, மாணவ, மாணவியர் குதுாகலம் கொள்வர். வகுப்பு நேரத்தில் ஒரு குண்டூசி போட்டால் கூட, காதில் விழும் அமைதி நிலவும்.
சரித்திர ஆசிரியர் பெயர் பெருமாள். அவரை, 'நம்பெருமாள்' என, மரியாதை கலந்த அன்புடன் அனைவரும் அழைப்பர்.
வகுப்பு துவங்கியதும், 'இன்றைய பாடம், மன்னர் ராஜராஜ சோழன் பற்றியது. அவர் கட்டிய பிரகதீஸ்வரர் கோவில் உலக புகழ் பெற்றது; அதில் அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலை மிகப் பிரமாண்டமானது. கோவில் கோபுரமும், அதன் தலையில் பெரிய ஒற்றை கருங்கல்லை பொருத்திய தொழில்நுட்பமும் வியப்பு ஏற்படுத்தும்...
'இதை நேரடியாக பார்த்து கற்க வகை செய்துள்ளேன். எனவே, தஞ்சை மற்றும் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களுக்கு, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறேன்...
'வகுப்பில், 50 மாணவ, மாணவியர் உள்ளனர்; ஒரே பேருந்தில் சென்று விடலாம்; சரித்திர புகழ் மிக்க இடங்களை சுற்றிப் பார்த்து, ஐந்து நாட்களில் திரும்பி விடலாம். தலைமை ஆசிரியரும், இதற்கு அனுமதி தந்து விட்டார். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்...
'எனவே, பெற்றோரிடம் அனுமதி பெற்று வாருங்கள். சுற்றுலா கட்டணமாக சொற்ப பணமே வசூலிக்கப்படும். இது தொடர்பான முழு விபரத்தையும் விரைவில் கூறுகிறேன்...' என அறிவித்தார் ஆசிரியர்.
உற்சாகம் பொங்க, கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மாணவ, மாணவியர்.
அந்த வகுப்பில் படிக்கும் கீதா படுசுட்டி; வகுப்பில், அவள் தான் முதல் மதிப்பெண் பெறும் மாணவி. சரித்திரம் என்றால் அவ்வளவு ஆர்வம். அவளிடம் ஒரு விசித்திர குணம் இருந்தது.
பழங்கால மன்னர்கள் பற்றி பாடம் நடத்தும் போதும், அவர்கள் வாழ்ந்த அரண்மனை பற்றி கூறும் போதும், மன அளவில் அந்த இடங்களுக்கே சென்று விடுவாள் கீதா. அப்போது, அவள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
அப்படித்தான், சுரங்கப்பாதை பற்றி விபரங்களை அறிய விரும்பினாள். நீண்ட நாட்கள் அதற்காக முயற்சி செய்து வந்தாள். மன்னர்கள் காலத்தில் சுரங்கப்பாதை எப்படி கட்டப்பட்டிருக்கும் என, மூளையை கசக்கி யோசித்திருக்கிறாள்.
'நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில், மன்னர், மகாராணி, இளவரசி, இளவரசர் தப்பித்து செல்ல சுரங்கப்பாதை உதவும்...' என ஆசிரியர் கூறிய போதெல்லாம், அது பற்றி கனவு கண்டாள். பார்க்க விருப்பம் கொண்டாள்.
அன்றும், ''மன்னர் ராஜராஜன் சுரங்க பாதை அமைத்திருந்தாரா...'' என்று கேட்டாள் கீதா.
''ஆமாம்... படையெடுப்புகளால் ஏற்பட்ட பயத்தில் அதை அமைத்தார் என்று கூற முடியாது. ஆனால், அரண்மனையில் இருந்து கோவிலுக்கு வந்து, இறைவனை வழிபட தனி சுரங்க பாதை அமைத்திருப்பார் என தோன்றுகிறது... தஞ்சை பெரிய கோவில் செல்லும் போது, அது பற்றி பார்க்கலாம்...'' என்றார்.
இதைக் கேட்டதும், கீதா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மாணவன் குகனுக்கும், சரித்திர ஆர்வம் நிறைய இருந்தது. வகுப்பில், யார் முதல் மதிப்பெண் எடுக்கின்றனர் என்ற போட்டி இருவருக்குள்ளும் எழும். எப்போதும், கீதாவே முதன்மை மதிப்பெண் வாங்கி வந்தாள்.
ஒரு வாரத்திற்குப் பின் -
தஞ்சை சுற்றுலா முழு விபரத்தையும் அறிவித்து, அதற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார் ஆசிரியர் நம்பெருமாள். மிக சொற்ப தொகை என்பதால், அனைவரும் உடனே செலுத்தினர்.
மாணவ, மாணவியர் உற்சாகத்தில், கைகளை தட்டி ஆரவாரம் செய்ய, சரித்திர சுற்றுலா துவங்கியது. முதலில், தஞ்சை பெரிய கோவில் சென்றனர். மன்னன் ராஜராஜசோழனின் பெருமைகள் பற்றி சுவாரசியமாக விவரித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.
அப்போது, கீதாவின் கண்கள் அலை பாய்ந்தன. சுரங்கப்பாதையைத் தேட ஆரம்பித்தாள். அப்போது, சுகந்த காற்று வீசியது.
மாணவ, மாணவியரின் அசைவுகளை தனித்தனியாக ஆசிரியரால் கவனிக்க முடியவில்லை.
சுகந்த காற்றில் மயங்கிய கீதா, மாணவர் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக நடந்தாள். செல்லுமிடம் பற்றி அவளுக்கு எதுவும் தெரியவில்லை.
இதை கவனித்த குகன் உடனே, மற்றவர்களுக்கு தெரியாமல், கீதாவை பின் தொடர்ந்தான்.
சுகந்த காற்று அவனையும் சுண்டி இழுத்தது.
மயக்கத்தில் காற்று வீசிய திசையில் சென்று கொண்டிருந்த கீதா, திடீரென நின்றாள்.
அவளைத் தொடர்ந்து வந்த குகனும், சற்று துாரத்தில் நின்று கவனித்தான். கீதாவிடம் பெரும் சிரிப்பு எழுந்தது. புரியாமல் அதிர்ந்தான் குகன்.
- தொடரும்...
ஜி.சுப்பிரமணியன்

