
சிவகாசி, அம்மன் கோவில்பட்டி, அரசு பள்ளியில், 1989ல், 5ம் வகுப்பு முடித்திருந்தேன். வகுப்பு ஆசிரியராக இருந்த சிங்கராஜ், என் பெற்றோரிடம், 6ம் வகுப்பு ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்க்க அறிவுரைத்து, பரிந்துரை கடிதம் கொடுத்தார்.
அது, சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியை அமராவதிக்கு எழுதப்பட்டிருந்தது. அவரை சந்தித்து கடிதத்தை கொடுத்தேன். தலைமை ஆசிரியை கஸ்துாரிபாயிடம் அறிமுகப்படுத்தி பரிந்துரை கடிதம் பற்றி கூறினார்.
அடுத்த நொடியே, 'நோ ரெக்கமன்டேஷன்... திறமையான பொண்ணு என்றால் நுழைவு தேர்வு எழுத வையுங்க...' என்று கூறிவிட்டார். அதன்படி, 40க்கும் மேற்பட்டோருடன் தேர்வு எழுதினேன்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின், தேர்ச்சியானோர் பட்டியல் வெளியானது. அதில், ஒன்பதாம் இடத்தில் என் பெயர் இருந்தது. செல்லமாக முதுகில் தட்டியபடி, தலைமையாசிரியரிடம் அழைத்து சென்று விபரம் தெரிவித்தார் ஆசிரியை. சிரித்தபடியே, 'திறமைசாலிக்கு சிபாரிசு தேவை இல்லை...' என்று கூறி வாழ்த்தினார்.
தற்போது, என் வயது, 42; அச்சம்பவத்தை நினைத்தவுடன் மனம் நெகிழ்கிறது.
- ரா.ஞானசெல்வி, மதுரை.

