PUBLISHED ON : ஆக 13, 2022

துாத்துக்குடி, கால்டுவெல் உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக இருந்தார், கே.டேவிட். கண்டிப்பானவர்; தவறு செய்தால் காதில் கிள்ளி தண்டனை தருவார். காதில் ஓட்டை விழுந்தது போல் இருக்கும்.
ஆங்கில இலக்கண பாடம் அற்புதமாக நடத்துவார். வகுப்பு நேரம் முடிந்த பின்னும் மாலை, 5:30 மணி வரை கற்பிப்பார். மற்ற பிரிவு மாணவர்கள், ஜாலியாக வீடு திரும்பும்போது, நாங்கள் மட்டும் சிறையில் இருப்பது போல் உணர்வோம்.
தவறு செய்ததைக் கண்டுபிடித்தால், 25 காசுகள் வரை அபராதம் விதிப்பார். அப்படி சேரும் பணத்தில், ஆண்டு இறுதியில் சுற்றுலா அழைத்து செல்வார். முதன்முறையாக ரயிலில் அவருடன்தான் பயணம் செய்தேன்.
அவரது செயல், கண்டிப்பின் முக்கியத்துவம், அருமை எல்லாம் அப்போது தெரியவில்லை. காலங்கடந்து புரிந்தது. அவர் மீது பெரும் மரியாதை ஏற்பட்டது.
ஒரு குரு பூர்ணிமா நாளில் அவரது இல்லம் தேடி சென்றேன். ஒரு வாரம் முன் அமரராகியிருந்தார். மிகுந்த வருத்தத்துடன் அஞ்சலி செலுத்தினேன். அவருடன் பயணம் செய்த அந்த ரயிலில் எண்ணங்களை சுமந்தபடி வீடு திரும்பினேன்.
இப்போது, என் வயது, 72; அந்த ஆசிரியரின் நற்செயல்கள் மனதில் அழியாத கோலங்களாக உள்ளன!
- சொ.முத்துசாமி, திருநெல்வேலி.
