
ராமநாதபுரம் மாவட்டம், சிறுவனுார், நடுநிலைப்பள்ளியில், 1961ல், 6ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். திருக்குறள் ஒப்பித்தல் போட்டி பற்றிய சுற்றறிக்கை வந்தது. அது குறித்து வகுப்பாசிரியரிடம் கேட்டேன்; திருப்தியான பதில் இல்லை.
கண்டிப்பு நிறைந்தவர் தலைமையாசிரியர் ஆர்.ரெங்கசாமி. பயந்து நடுங்கியபடியே அவரிடம் விசாரித்தேன். புன்முறுவலுடன், 'வாய்ப்பு கொடுக்கிறேன்...' என்று உற்சாகப்படுத்தினார்.
அன்று முதல் இரவு, பகலாக படிக்கத் துவங்கினேன்; 30 நாட்களில், 500 குறள்கள் வரை மனப்பாடம் செய்துவிட்டேன்.
ஆண்டு விழா வந்தது. மாணவ, மாணவியர் பலர், 20 குறள்கள் வரை ஒப்பித்து, கைதட்டல் பெற்றனர். தலைமையாசிரியர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இறுதியாக, 'போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் யாரேனும் உண்டா...' எனக் கேட்டார்.
குட்டை உருவம் என்பதால், பெஞ்சில் ஏறி நின்று குதித்து, விருப்பத்தை காட்டினேன். குலுங்கி சிரித்தபடி வரவேற்றவர் முன்னிலையில், 'அகர முதல எழுத்தெல்லாம்...' என துவங்கி, 500 குறள்களையும் சொல்லி நிறுத்தினேன். ஆரவாரம் விண்ணை பிளந்தது. பாராட்டு மழையில் நனைந்தேன்.
இப்போது என் வயது, 70; தலைமை ஆசிரியர் கொடுத்த வாய்ப்பு, புகழை தந்தது. அவரை எண்ணி, இன்றும் நெகிழ்ந்து மகிழ்கிறேன்.
- ஆ.சந்தானம், திருப்பூர்.
தொடர்புக்கு: 95975 54685

