sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பறக்கும் கம்பளம்! (8)

/

பறக்கும் கம்பளம்! (8)

பறக்கும் கம்பளம்! (8)

பறக்கும் கம்பளம்! (8)


PUBLISHED ON : நவ 23, 2018

Google News

PUBLISHED ON : நவ 23, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்றவாரம்: பறக்கும் கம்பளத்தில் அமர்ந்து மங்களகிரியில் நடக்கும் விழாவிற்கு திக் விஜயம் செய்ய விரும்பினான் இளவரசன் கீர்த்திவர்மன். இனி -



தன்னை பிறர் பார்வையிலிருந்து மறைக்கும், மந்திரக் குல்லாயையும், மறக்காமல் எடுத்துக் கொண்டான். அதை தலையில் அணிந்து கொள்ளவில்லை. கம்பளத்தின் மீது அமர்ந்து, 'மங்களகிரியில் அந்த விழா நடக்கும் மாளிகையின் தோட்டத்தில் போய் நான் இறங்க வேண்டும்...' என்று நினைத்தான்!

அடுத்த நிமிஷம், கம்பளம், விரைப்பாக நீட்டி நிமிர்ந்தது; 'ஜிவ்'வென்று தரையிலிருந்து கிளம்பி, சாளரத்தின் வழியே, ஆகாய வீதியிலே பறக்கும் தட்டைப் போல, மிதந்து சென்றது.

மந்திர தந்திரங்களில், இது நாள் வரை, நம்பிக்கை இல்லாதிருந்த கீர்த்திக்கு, கம்பளம், பறக்கும் காட்சி, ஒரே பிரமிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

'இனி, மந்திர மாயங்களைப் பற்றி ஆராய வேண்டியது தான்' என்று தீர்மானித்தான்!

காற்றில் பறந்து, மிதக்கும் காகிதம், தரையிலே இறங்கிப் பதிவது போல. மங்களிகிரியில் உள்ள அரண்மனைத் தோட்டத்தில் அலுங்காமல், குலுங்காமல் இறங்கியது, கம்பளம்.

தரையில் இறங்கியதும், அதில் தொய்வு ஏற்பட்டது. கம்பளத்தைச் சுருட்டி, குண்டு மல்லிகைப் புதருக்கிடையே, ஒளித்து வைத்துவிட்டு, அரண்மனைக் கூடத்துக்கு விரைந்தான் கீர்த்தி. உருவை மறைக்கும், குல்லாயை அணியவில்லை.!

இளவரசன் கீர்த்தியைக் கண்டதும், வாயில் காப்போர் சிரம் தாழ்த்தி வணங்கினர்; இளவரசரின் வரவை அறிவிக்க பரபரப்புடன் ஒரு காவலாளி உள்ளே ஓடினான்.

''மகாராஜாதி ராஜ... ராஜமாரத்தாண்ட, ராஜகுல திலக, விசித்திரபுரி இளவரசர்... அறிவின் பிறப்பிடம், அழகின் இருப்பிடம், வீரத்தின் உறைவிடம், கீர்த்திவர்மர் வருகிறார், பராக்... பராக்...'' என்று முழங்கினான்.

புன்னகை தவழும் முகத்துடன், கம்பீர நடை நடந்து, கட்டியக்காரனின் விளக்கத்துக்கு இலக்கணமாக அங்கு தோன்றினான் கீர்த்தி. அலை அலையாக பேச்சும், சிரிப்புமாக இருந்த அந்த கூட்டத்தில், 'சட்'டென்று ஒரு அமைதி ஏற்பட்டது.

இளவரசன் கீர்த்திவர்மனுக்கு வழி விட்டு ஒதுங்கினர். அவன் அருகே வரும் போது, சிரம் தாழ்த்தி வணங்கி வரவேற்றனர். மங்களகிரியின் நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள, மாணிக்கவர்மர் அரக்கப் பரக்க ஓடி வந்தார். இளவரசனை வரவேற்று அழைத்துப் போகும் போது. ''வருவதாகச் செய்தியோ, துாதுவனோ கூட வரவில்லையே... தங்களை, இப்படிச் சாதாரணமாக வரவேற்க வேண்டி இருப்பதற்கு வருந்துகிறேன்...'' என்றார்.

'' பரவாயில்லை... ஏதோ நினைத்துக் கொண்டேன்; கிளம்பி விட்டேன்; ம்... சரி இங்கு என்ன கொண்டாட்டம்...'' என்றான் கீர்த்திவர்மன்.

''என் சகோதரியின் பெண்ணுக்கு இன்று பிறந்த நாள்; அதைக் கொண்டாடுவதற்காகவே, இந்த சிறு கூட்டம்; தாங்கள் வருகை புரிந்தது அவள் அதிர்ஷ்டம் தான்...'' என்று கூறியவாறே, கீர்த்தியை ஒரு உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்தார்; கீர்த்தியின் கண்கள், அவன் இதயத்தில் குடியேறியிருந்த அழகியை தேடியலைந்தன.

'அவள் எங்கே ஒளி உமிழும், ஒப்பற்ற அந்த அழகு சுடர் எங்கே' என்று தவித்தவனின் முன்னால், வந்து நின்றார் மாணிக்கவர்மர். அவர் அருகே, அது கொடி என துவண்ட நிலையில், நாணத்தின் சுமை தாங்காது, தாழ்ந்த தலையுடன், கூப்பிய கரங்களுடன் நின்றாள். பரபரப்புடன் நிமிர்ந்தான் கீர்த்தி.

''என் சகோதரியின் ஒரே செல்வ மகள் குந்தளவல்லி என்று பெயர்; இவளது பிறந்த நாளுக்கு, தாங்கள் வருகை தந்தது, எங்கள் பாக்கியம்...''

அந்தப் பெண் பக்கம் திரும்பி, ''குந்தளா... இளவரசர் கீர்த்திவர்மர்; அறிவின் சிகரம்; ஆற்றலின் இருப்பிடம்...'' என்றார்.

குந்தவல்லியோ அந்த அழகை நிமிர்ந்து பார்த்தவள், பார்த்தபடியே இருந்தாள்; அவளுடைய அழகில், அவன் மயங்கியது போலவே, அவளும், அவன் அறிவொளி வீசும் கம்பீரமான தோற்றத்தில் தன்னைப் பறி கொடுத்தாள்.

'கசமுச' என்று பேச்சுக்கள் மெதுவாக தோன்றி வரவரப் பெரிதாகியது; இளவரசனையும், குந்தளாவையும் இணைத்து, அவர்களது பேச்சு இருந்தது என்பதைச் சொல்லவா வேண்டும்.

தன் நிலையடைந்த இருவரும், 'சட்' என்று சூழ்நிலையின் சூட்டை உணர்ந்தனர்.

''என் வருகையால் இங்கிருந்த சகஜ நிலைக்கு, ஊறு விளைந்து விட்டது போலிருக்கிறது...'' என்றான் கீர்த்தி.

''அப்படி ஒன்றும் இல்லை; இளவரசர் விஜயம் செய்யக் கொடுத்து வைக்க வேண்டாமா... ம்... நடனம் ஆரம்பமாகட்டும்...''

''நாட்டியமாட வேறு யார் வர வேண்டும்... உங்களது சகோதரியின் செல்வ மகளே அற்புதமாக நடனமாடுவாள் போலிருக்கிறதே...''

மாணிக்கவர்மரின் விழிகள் வியப்பால் விரிந்தன.

''ஆமாம்... உண்மை தான்; அது உங்களுக்கு எப்படி தெரிந்தது...'' என்றார் திறந்த வாயை மூடாத திகைப்புடன்.

''இவள் நிற்கும் இந்த ஒயில், அவள் பார்வையில் தோன்றி மறையும் பாவங்கள், உடல் அமைப்பு, நீண்ட கைகள் நாட்டியத்தில் வல்லவள் என்பதை அறிவிக்கின்றனவே... அது மட்டுமல்ல; வீணை வாசிப்பதிலும், திறமை மிக்கவளாக இருக்க வேண்டும்...''

''ஆமாம்... நீங்கள் ஆரூடத்திலும் வல்லவர் என்பதை இப்போது தான் அறிந்தேன்...''

''ஆரூடத்தின் சக்தியால், நான் இதை அறியவில்லை; அங்க லட்சணங்களால் அறிந்தேன்; வீணையை மீட்டி, சப்த ஸ்வரங்களை எழுப்பும் வல்லமை பெற்றவை,அந்த அழகிய விரல்கள் என்பதைப் பார்த்தாலே தெரிகிறதே... உங்கள் குந்தவல்லிக்கு அற்புதமான சாரீரமும் உண்டென்று எண்ணுகிறேன், இசைக் கலையை முறையாகப் பயின்றிருக்க வேண்டும்...'' இளவரசரின் அறிவாற்றலைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனர்; ஆனால், இப்போது கண் முன்னாலேயே, ஒரு உருவத்தின் அங்கலட்சணங்களைக் கொண்டே, அதன் திறமைகளைக் கூறும் அபார அறிவைக் கண்டு திகைத்து, திக்பிரமை கொண்டனர்.

''குந்தளவல்லி, உன் அழகிய நாட்டியத்தை ரசிக்கலாமா...'' என்று கேட்டான் கீர்த்தி.

அந்த அழகியின் முகம் செந்தாமரையாகச் சிவந்தது.

குந்தளவல்லிக்கு வியப்பான வியப்பு!

விசித்திரபுரி இளவரசன் கீர்த்திவர்மனைப் பார்த்ததில்லையே தவிர, நிறைய கேள்விப் பட்டிருந்தாள். 'பெண்களை கண்டாலே, ஒதுங்கி போகும் சுபாவம் உள்ளவன்' என்று, எத்தனையோ பேர், என்னென்னவெல்லாமோ கூறியிருந்தனர்.

அதிபுத்திசாலியான இளவரசன், தன்னிடம் நட்புக் கொள்ள, யார் வந்தாலும், அவர்களுடைய புத்திசாலித்தனத்திற்கு சோதனை வைத்து, தலைகுனிய செய்வான் என்று கூறியிருந்தனர்.

'பகவத்கீதையில், தொண்ணுாற்றி எட்டாவது சுலோகத்துக்கு, என்ன பொருள்... கலிங்க நாட்டை, இருநுாறு ஆண்டுகளுக்கு முன், ஆட்சி செய்தவர் யார், நீ இதை படித்திருக்கிறாயா... அதை பற்றி தெரியுமா...' இப்படியெல்லாம் வினாக்களை எழுப்பி, அவர்களை, திக்கு முக்காட செய்து, அவமானப்படுத்தி அனுப்புவான் என்று, கேள்விப்பட்டிருந்தவளுக்கு, இளவரசனின் செயல்கள் வியப்பளித்தன.

அதே சமயம், இளவரசனைப் பற்றி, அவள் உள்ளத்தில் உருவாகி இருந்த, மதிப்பு, 'மளமள...' வென்று உயர்ந்தது.

கீர்த்தியின் விருப்பப்படி, அற்புதமாக நடனமாடினாள் குந்தளவல்லி. 'ஆடுவதில், அபிநயம் பிடிப்பதில், ஏதாவது குறை கண்டுபிடித்து, குத்தலாக கூறுவானோ' என்ற பயத்துடனே நடனமாடினாள். ஆனால், நாட்டியத்தை, இத்தனை ஆர்வத்துடனும், ஆசையோடும் இதுவரை யாருமே ரசித்து மகிழ்ந்ததில்லை என்ற பூரிப்பு ஏற்பட்டது குந்தளவல்லிக்கு.

அத்தனை ரசிக தன்மையோடு, அவள் நடனத்தை ரசித்து, கை தட்டி பாராட்டினான் கீர்த்தி. வீணை மீட்டியபடி, அவள் பாடிய போதும், இதே மாதிரி தான், கீர்த்தியிடமிருந்து பாராட்டுகள் கிடைத்தன.

விருந்தின் போதும், இளவரசன், அவள் அருகில் அமர்ந்து தான் உணவருந்தினான். ஆவலோடு பேசும் போதும், கீர்த்தி தன் அறிவாற்றலை காட்ட, அனாவசியமான விஷயங்களை பேசி, அவளுக்கு சங்கடத்தை உண்டாக்கவில்லை; அவன் பேச்சு முழுவதும், அவளை பற்றியதாகவே இருந்தது.

அவள் எப்படி அற்புதமாக பாடினாள், ஆடினாள், என்பதை பற்றியும், அவள் அழகை பற்றியுமே, கீர்த்தி புகழ்ந்து பேசியது அவளுக்கு வெட்கமாகவும், பூரிப்பாகவும் இருந்தது.

'இத்தனை நல்லவர் பெண்களுடன் இங்கிதம் தெரிந்து பழகக் கூடியவரான, ரசிகரான, அழகரான, அறிவாளியான இவரைப் பற்றியா ஏதேதோ வதந்திகள் பரவியிருக்கின்றன...' என்று எண்ணி வருந்தினாள், குந்தளவல்லி.

இரவு -

பூத்து, மணம் பரப்பும் ஒரு அற்புத மலர்க்கொடி வீட்டின் நடுவே, கீர்த்தியும், குந்தளவல்லியும் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இளவரசனோடு பேசுவதற்கு, பாவம் அவளுக்கு எந்த விஷயமும் கிடைக்கவில்லை. அறிவாளியான, அவனிடம் எதையாவது பேசி, தன் பலவீனத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆகவே, விசித்திரபுரியை, பல விதங்களில் கவலையில், ஆழ்த்தி கொண்டிருக்கும் அக்கினி அரக்கனான, அந்த கொடிய மிருகத்தை பற்றி பேசினாள்.

''அதென்ன அத்தனை பயங்கரமான மிருகமா... அதன் அருகில், யாராலும் போக முடியாதாமே...'' என்று கேட்டாள், குந்தளா.

இதையே, நேற்று கேட்டிருந்தால், 'அக்கினி அரக்கனாவது, மண்ணாவது...' என்று கூறியிருப்பான் கீர்த்தி. ஆனால், இப்போது, மந்திரம், மாயம் இவற்றில் நம்பிக்கை ஏற்பட்டு விட்ட கீர்த்தியல்லவா...

''வீரமில்லாதவர்களுக்கு, எதை கண்டாலும், பயங்கரமாகத் தான் தோன்றும்; அக்கினி அரக்கன் என்ற அந்த மிருகம் கொடியது தான். ஆனால், அதை அழிப்பதற்கு, தந்திரமும், திறமையும் வேண்டும்...'' என்றான், கீர்த்தி.

- தொடரும்...

- வாண்டுமாமா







      Dinamalar
      Follow us