தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முட்டாள் சீடர்கள்!

முட்டாள் சீடர்கள்!

முட்டாள் சீடர்கள்!


PUBLISHED ON : பிப் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துறவி ஒருவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் துறவியின் தேவைகளை கவனித்து வந்தனர்.

கால்களை பிடித்து விடுவது, சாப்பிடுவதற்குத் தேவையானவற்றை கொண்டு வருவது போன்றவை அவர்களின் வேலையாக இருந்தது.

அவர்கள் இருவருமே முரடர்களாகவும், முட்டாள்களாகவும் இருந்தனர். மிகவும் முதியவரான துறவி அடிக்கடி படுத்து விடுவார்.

இரண்டு சீடர்களும் போட்டி, போட்டு அவரின் கால்களைப் பிடித்து விடுவர். இருவருமே, நான்தான் முதலில் துறவிக்கு தொண்டு செய்வேன். எனக்குத்தான் முதல் உரிமை, என்று அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.

தன் மீது சீடர்கள் வைத்திருக்கும் அன்பை எண்ணி பூரித்துப் போனார் துறவி.

நாளுக்கு நாள் அவர்களது சண்டை அதிகமாகிக் கொண்டே வந்தது. இதைத் தீர்க்க என்ன செய்வது என்று சிந்தித்தார் துறவி.

இரு சீடர்களையும் அழைத்து, ''இனி! உங்களுக்குள் எந்தச் சண்டையும் வரக் கூடாது. ஒருவன் வலது காலையும், இன்னொருவன் இடது காலையும் பிடித்து விடுங்கள்,'' என்றார்.

சீடர்கள் இருவரும் இதனை ஏற்றுக் கொண்டனர்.

சில நாட்கள் சென்றன-

ஒரு சீடன் ஏதோ வேளையாக வெளியூர் சென்று இருந்தான்.

இன்னொரு சீடன் துறவியின் இடது காலை வழக்கம் போல் பிடித்துக் கொண்டு இருந்தான்.

'வலது காலையும் அதே போலப் பிடித்து விட்டால் நன்றாக இருக்கும்' என்று நினைத்தார் துறவி.

சீடனைப் பார்த்து, ''என் இன்னொரு காலையும் பிடித்துவிடு,'' என்றார்.

''எனக்கு உரிய காலைத்தான் நான் பிடிப்பேன். அந்த மடையனுக்கு உரிய காலை நான் பிடிக்க மாட்டேன்,'' என்று பதில் சொன்னான்.

துறவி அவனை மீண்டும், மீண்டும் வற்புறுத்தினார்.

அவ்வளவுதான். அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.

''அவனுக்கு உரிய காலை என்னையா பிடிக்கச் சொன்னீர்கள்? அந்தக் காலை என்ன செய்கிறேன் பார்,'' என்று கோபத்துடன் கத்தினான். அந்தக் காலை ஓங்கி மிதித்தான்.

''ஐயோ அம்மா!'' என்று வலியால் துடித்தார் துறவி. அவரது கால் நன்றாக வீங்கி விட்டது.

ஊருக்குப் போயிருந்த அந்தச் சீடன் வந்து சேர்ந்தான்.

நடந்தை அறிந்த அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.

''எனக்கு உரிய காலையா உதைத்து வீங்க வைத்தாய்? உன் காலை என்ன செய்கிறேன் பார்?'' என்று கத்தினான்.

பக்கத்தில் கிடந்த பாறாங்கல்லைத் தூக்கினான். துறவியின் இன்னொரு காலில் போடத் தயாரானான்.

இதைக் கண்ட துறவி, ''என் காலை உடைத்து விடாதே,'' என்று கெஞ்சினார்.

ஆனால், அவன் கேட்கவில்லை. துறவியின் இடது காலின் மீது பாறாங்கல்லைப் போட்டான். அவர் கால் உடைந்து நசுங்கியது.

இதைக் கண்ட மற்றவன், ''என் காலையா உடைத்து விட்டாய்? உன் காலை என்ன செய்கிறேன் பார்,'' என்று கத்தினான்.

அதே பாறாங்கல்லை தூக்கித் துறவியின் வலது காலின் மீது போட்டான். இவர்களின் சண்டையால் துறவி தன் இரண்டு கால்களையும் இழந்தார்.

தன் சீடர்களின் முட்டாள்தனத்தால் தனக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினார் துறவி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us