PUBLISHED ON : ஆக 22, 2020

திருப்பூர் மாவட்டம், கடத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2004ல், 7ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியை உமாராணி, ஏழை மாணவர்களுக்கு மனம் உவந்து உதவுவார். மனிதாபிமானத்துடன் செயல்படுவார்.
உடன் படித்த பசுபதி ஒருநாள் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்தான்.
திருத்துவதற்காக அவனை அடித்து தண்டித்து விட்டார்.
மறுநாள் ஆசிரியையின் இருக்கையில், விஷக்காய் என்ற பூச்சிக்காயை, கோபத்தில் தேய்த்து விட்டான். இதை அறியாமல் இருக்கையில் அமர்ந்தவருக்கு, அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பியதும், அந்த மாணவனை பரிவுடன் அழைத்து, 'நீயும் என் மகன் போல தான்; உன் மீது சிறிதும் கோபம் இல்லை...' என்றார். அவன் கலங்கி அழுது மன்னிப்புக் கேட்டான். மனம் திருந்தினான்.
என் வயது, 27. ஆசிரியையிடம் கற்ற மன்னிக்கும் பாடத்தை, பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
-டி.மணிமேகலை, திருப்பூர்.
தொடர்புக்கு: 79044 65091
