PUBLISHED ON : ஆக 22, 2020

திண்டுக்கல், புனித செசிலியால் நடுநிலைப்பள்ளியில், 2006ல், 6ம் வகுப்பு படித்த போது, மிக ஆர்வமாக கணக்குப் போடுவேன்; ஆனால், கணித ஆசிரியை பிளோமீனாவை கண்டால் பயந்து நடுங்குவேன். பேசத் தயங்குவேன்.
ஒரு நாள் வீட்டுப்பாடத்தை முறைப்படி செய்து முடித்தேன். மறுநாள் காலை, முதல் வகுப்பு கணித பாடம். பையில் வீட்டுப்பாட நோட்டை காணவில்லை. எடுத்து வர மறந்து விட்ட விவரத்தை ஆசிரியையிடம் கூறினேன்.
சந்தேகத்துடன், 'நீ கூறுவது உண்மையானால், வீட்டிற்கு போன் செய்து நோட்டை எடுத்து வர சொல்...' என்றார். அதன்படி செய்தேன். எடுத்து வந்தார் என் அம்மா.
அதைக் கண்டதும், 'உண்மையை கூறினாய்...' என்று நெகிழ்ந்து பாராட்டினார். பின், தனி அக்கறையுடன் கற்பித்தார். உண்மைக்கு உள்ள மதிப்பை புரிந்து கொண்டேன்.
தற்போது என் வயது, 24; இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்று, கல்வியல் கல்லுாரியில் படிக்கிறேன். அந்த ஆசிரியையை மனதில் கொண்டு, உண்மையை வாழ்வில் கடைபிடிக்கிறேன்.
- ஜெ.சண்முகபிரியா, திண்டுக்கல்.
