PUBLISHED ON : ஜூலை 19, 2019

வேப்பன்வலசு என்ற ஊரில், துரைப்பாண்டி என்ற செல்வந்தர், அரிசி வியாபாரம் செய்து வந்தார். மிகவும் நேர்மையானவர். அவருக்கு, நான்கு மகன்கள்; ஒவ்வொருவரும் ஒரு விதம்.
'கலப்படம் செய்வது, சமூகத்துக்கு செய்யும் துரோகம்' என்று நம்பியவர். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தில், ஒரு பங்கை சேவை பணிக்கு ஒதுக்குவார். அதனால், ஊர் மக்களிடம் அவருக்கு தனி மதிப்பு இருந்தது.
அவருக்கு வயது முதிர்ந்துவிட்டதால், வியாபாரத்தை மகன்களிடம் ஒப்படைக்க எண்ணினார். ஆனால், எந்த மகனிடம் ஒப்படைப்பது என்று திணறினார். காரணம், மகன்கள், வியாபாரத்தில் ஆர்வம் காட்டவில்லை.
வேறு வழி தெரியாததால், 'கடவுள் வழி காட்ட வேண்டும்' என, புனித யாத்திரை செல்ல முடிவு செய்தார்.
மகன்களை அழைத்து, 'நான் புனித யாத்திரை செல்வதால், வியாபாரத்தை கவனியுங்கள்; ஒவ்வொருவருக்கும், 2 லட்சம் தருகிறேன்; அதை, பொறுப்பாகப் பயன்படுத்துங்கள். அந்த பணத்தை நீங்கள் பயன்படுத்துவதை கணித்து தான், வியாபாரத்தை, யாரிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்வேன்...' என்றார்.
நால்வரும் ஒரே மூச்சில், 'கவலையின்றி, பயணத்தை துவங்குங்கள்...' என்றனர்.
புனித யாத்திரை முடித்து, ஒரு ஆண்டுக்குப் பின் வீடு திரும்பினார் செல்வந்தர்; மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் மகன்கள்.
வியாபாரம் குறித்த தகவல்களைக் கேட்டார் செல்வந்தர்.
கணக்காளர், தலையை தொங்க போட்டவாறு, 'ஐயா... நீங்கள் நினைப்பது போல், உங்கள் மகன்கள் இல்லை; அவ்வப்போது, செலவிற்கு பணம் வாங்கினர்; வியாபாரத்தில் கவனம் செலுத்தவில்லை. உங்கள் கடைசி மகன் மட்டும், தினமும், சிறிது நேரம் உதவினார்...' என்று, வருத்தத்துடன் கூறினார்.
அன்றிரவு மகன்களை, தனித்தனியே அழைத்தார் செல்வந்தர். அவர் கொடுத்த பணத்தை, பயன்படுத்திய விதம் குறித்து கேட்டார்.
மூத்த மகன், 'மனைவிக்கு, தங்க நகைகள் வாங்கி கொடுத்தேன்...' என்றான்.
இரண்டாவது மகன், கேளிக்கைகளிலும், சூதாட்டத்திலும் பணத்தை இழந்து விட்டதாக கூறினான்.
மூன்றாவது மகன், 'அப்பா... வங்கியில் கடன் வாங்கி, வண்டி வாங்கினேன்; ஆனால், கடன் தவணையை திரும்ப செலுத்தாததால், வண்டியை, பறிமுதல் செய்து விட்டனர்...' என்றான்.
கடைசி மகன், 'எனக்கு ஒன்றும் தெரியவில்லை; நீங்கள் கொடுத்த பணத்தை, வங்கி சேமிப்பு கணக்கில் போட்டேன்; வட்டியாக, 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது...' என்றான்.
இதைக் கேட்ட செல்வந்தர், 'கடைசி மகன், மூலதனத்தை காப்பாற்றுவான்' என, முடிவு செய்து, அவனிடம் வியாபாரத்தை ஒப்படைத்தார்.
மற்றவர்கள், அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். தம்பியுடன் ஒத்துழைத்து, வியாபாரம் செய்வதாக வாக்களித்தனர்.
அவர்கள் திருந்தியதைக் கண்டு மகிழ்ந்தார் செல்வந்தர்.
நால்வரும், நாணயமாக உழைத்து, லாபத்தில் ஒரு பகுதியை சேவைக்கு செலவிட்டனர்; ஒரு பள்ளியைக் கட்டி, ஊர் மக்கள் பாராட்டைப் பெற்றனர்.
குட்டீஸ்... அறிவுரைகளை கவனமாக பின்பற்றினால் வாழ்க்கையில் உயரலாம்.
- செந்துாரான் பதிப்பகம்
