PUBLISHED ON : டிச 14, 2019

அய்யங்குட்டிபாளையம் அழகிய வனத்தில், மகிழ்ச்சியாக வாழ்ந்தன விலங்குகள். சண்டை சச்சரவுகளை தவிர்த்து, அமைதியாக பொழுதை கழித்தன.
இது, தந்திரக்கார நரிக்கு வருத்தத்தை தந்தது. விலங்குகள் சண்டையிட்டு, குற்றுயிரானால் தான், நரிக்கு எளிதாக உணவு கிடைக்கும். ஓடித் திரிந்து, வேட்டையாடாமல் காயமடையும் விலங்குகளை, எளிதாக பிடித்து உண்ணும் வாய்ப்பு கிடைக்கும்.
நல்ல உணவின்றி தவித்த நரி, தீவிரமாக யோசித்தது. யானைக்கும், சிங்கத்துக்கும் சண்டை மூட்டி விட எண்ணியது. அதற்கான திட்டம் ஒன்றை வகுத்தது.
மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டிருந்த சிங்கத்தின் அருகே, தயங்கி தயங்கிக் சென்றது. நரியின் நிழலைக் கண்டதும், தலை துாக்கிய சிங்கம், 'என்ன வேண்டும்...' என்றது.
பயந்து, நடுங்குவது போல நடித்த நரி, 'அண்ணே... ஒரு முக்கிய தகவல் சொல்லணும்...' என்றது.
'அது என்ன தகவல்...'
'நீ இந்தக் காட்டுக்கே தலைவர்... ஆனா, உன் நெருங்கிய நண்பன், யானை என்ன செய்தது தெரியுமா...' என பீடிகை போட்டது.
நரியை நன்கு அறிந்திருந்த சிங்கத்துக்கு, அந்த பீடிகை மகிழ்ச்சி தரவில்லை. நண்பனைப் பிரிக்க சூழ்ச்சி செய்யும் தந்திரத்தை முறியடிக்கும் விதமாக, 'ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு... நண்பன் யானையைப் பற்றி, எதையோ சொல்ல போகிறாய்... அதற்கு முன், உன்னிடம், மூன்று கேள்விகள் கேட்கிறேன். அவற்றுக்கு, 'ஆம்...' என்று, சொன்னால் மட்டுமே தகவலை என்னிடம் கூறலாம்... இல்லையென்றால், உயிர் இங்கேயே போய்விடும்...' என்றது.
சிறிது நேரம் யோசித்த நரி, 'சரி அண்ணே... கேளுங்கள்...' என்றது.
தொண்டையை செருமியபடி, 'என்னிடம் சொல்ல வரும் தகவல், நீ நேரில் பார்த்ததா...' என்றது சிங்கம்.
தலையை அங்கும் இங்கும் ஆட்டி, 'இல்லை' என்றது நரி.
அடுத்து, 'சொல்ல வந்தது, என் நண்பன் யானையைப் பற்றிய நல்ல செய்தியா...' என்றது சிங்கம்.
இம்முறையும், 'இல்லை' என, தலையை ஆட்டி மறுத்தது.
கடைசியாக, 'நீ சொல்ல வரும் செய்தியால், யாருக்கேனும் பலன் உண்டா...' என, கடுங்கோபத்துடன் கேட்டது சிங்கம்.
பயந்து நடுங்கிய நரி, 'இல்லை' என்றபடி, வாலை சுருட்டி தரையில் படுத்தது.
'நேரிலும் பார்க்காத... நல்லதும் அல்லாத... யாருக்கும் பலன் தராத... ஒரு தகவலைச் சொல்லி... தந்திரமாக பிரிக்கப் பார்க்கிறாயா... உன்னை என்ன செய்கிறேன் பார்...' என்று கர்ஜித்தபடி எழுந்தது சிங்கம்.
'ஐயோ சாமி... என்ன விட்டுடுங்க... இனிமே இப்படி செய்ய மாட்டேன்...' என்று அலறி காட்டுக்குள் ஓடி மறைந்தது நரி.
துாரத்தில், இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யானை, உயிர் நண்பன் சிங்கத்தின் புத்திசாலித்தனத்தை எண்ணிப் பெருமிதத்துடன், விசிலடித்து, ஆடி மகிழ்ந்தது.
மலர்களே... நேரில் பார்க்காத, உண்மையில்லாத மற்றும் யாருக்கும் பயன் தராத தகவல்களை பேசி, வீணாக பொழுது போக்காமல், நன்மை தரும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பூபதி பெரியசாமி
