PUBLISHED ON : பிப் 03, 2017

ஒரு காட்டில் இரண்டு ஆடுகள் வசித்து வந்தன. அவை இரண்டும் இணைபிரியா நண்பர்கள். ஆட்டின் கொம்புகள் கூர்மையாகவும், முரட்டுத்தனமாகவும், பலம் பொருந்தியதாகவும் இருந்தன.
இரண்டு ஆடுகளும் காட்டில் நன்றாக மேய்ந்து, கொழு கொழுவென்று இருந்தன.
ஒருநாள்-
ஒரு புதரின் அருகே ஒரு ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அதன் எதிர்ப்புறத்தில் சற்று தள்ளி, மற்றொரு ஆடு மேய்ந்து கொண்டிருந்தது.
அந்த புதருக்குள் வெயிலுக்கு சுகமாக படுத்திருந்த புலி ஒன்று, பயங்கர பசியுடன் ஏதாவது இரை கிடைக்குமா என்று எதிர்பார்த்திருந்தது.
அப்போது ஆட்டை பார்த்ததும் புலிக்கு நாக்கில் எச்சில் ஊறியது. இதுதான் தக்க சமயம் என்று நினைத்து, வேகமாக வந்து ஆட்டின் முதுகு புறத்தை குறிவைத்து தாக்கியது.
இப்படியொரு திடீர் தாக்குதலை எதிர்பாராத ஆடு, பயங்கரமாக அலறியது.
எதிர்ப்புறத்தில் மேய்ந்து கொண்டிருந்த மற்றொரு ஆடு, இந்த அலறலை கேட்டு தன் நண்பனுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்தது. சட்டென்று வேகமாக அங்கே வந்த போது, புலி ஆட்டை வீழ்த்தி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தது.
தன் நண்பனை இந்த ஆபத்தில் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று, வேகமாக ஓடி வந்து, புலியின் முதுகில் தனது கூர்மையான கொம்பால் ஒரு குத்து விட்டது.
புலியின் முதுகில் இருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அத்துடன், புலி பத்தடி தொலைவில் போய் விழுந்தது.
தன்னைவிடவும் பலசாலியான வேறு ஏதோ ஒரு மிருகம் தாக்கிவிட்டதாக நினைத்து பயந்து, அங்கிருந்து ஓடி மறைந்தது புலி.
இதை அங்கு மறைந்திருந்த நரி ஒன்று கவனித்தது. புலியையே நடுங்கி ஓட செய்துவிட்டதே... இந்த ஆடுகள் மிகவும் பலம் வாய்ந்தவையாகத்தான் இருக்கும் என்பது அதற்கு புரிந்தது. இந்த ஆடுகளிடம் சற்று ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தது.
ஏனென்றால், கடந்த சில நாட்களாகவே இந்த ஆடுகளின் மீது நரிக்கு ஒரு கண் உண்டு. எங்காவது தனித்தனியாக சிக்கினால் அதை கடித்து குதறி, அதன் ரத்தத்தை குடிக்க வேண்டும் என்ற ஆசை நரிக்கு இருந்தது.
ஆனால், இப்போது மிகுந்த பலசாலியாக கருதப்படும் புலியே பயந்து ஓடிப் போய்விட்டதால், நரிக்கும், ஆடுகளின் மீது பயம் வந்து விட்டது.
எனவே, இந்த ஆடுகள் நட்புடன் இருந்தால், நம்முடைய ஆசை நிறைவேறாமலேயே போய்விடும் என்று நினைத்தது. இரண்டு ஆடுகளையும் பிரித்துவிட்டால், தம் ஆசையை நிறைவேற்றலாம் என்று நினைத்தது.
ஒருநாள் -
இரண்டு ஆடுகளும் நெருக்கமாக இல்லாமல் தள்ளித் தள்ளி மேய்ந்து கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டின் அருகே பதுங்கி பதுங்கி சென்றது நரி.
அந்த ஆட்டிடம், “உன்னைக் கொல்ல வந்த புலியின் மீது உன் நண்பனுக்கு கோபம் போய்விட்டது போலிருக்கிறதே... இருவரும் ரொம்ப நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். என் கண்ணால் பார்த்தேன். எதற்கும் நீ ஜாக்கிரதையாக இரு,” என்று சொன்னது.
அதே போல, வேறு பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த மற்றொரு ஆட்டிடம் போய், ''அந்த புலிக்கும், உன் நண்பனுக்கும் என்ன தொடர்பு... இருவரும் அடிக்கடி நெருங்கி பழகி வருகின்றனரே...'' என்று சந்தேக விதையை விதைத்து விட்டது.
அதன்பின் இரு ஆடுகளும் சேர்ந்தே இருந்தாலும், ஒன்றின் மீது ஒன்றுக்கு, உள்ளூர சந்தேகம் அதிகரித்து கொண்டே இருந்தது.
சில நாட்கள் சென்றன். இரு ஆடுகளுக்குள்ளும் புகைந்து கொண்டிருந்த சந்தேகம், கோபமாக வெடித்தது. ஒன்றுக்கொன்று வேகமாக மோதி சண்டையிட்டன.
இதை எதிர்பார்த்த நரி, தொலைவில் இருந்து சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
ஆடுகளின் கொம்புகள் மோதுவது இடி முழக்கம் போல ஒலியை எழுப்பியது. காயம்பட்டு, ஆடுகளின் ரத்தம் நிலத்தில் விழுந்து கொண்டே இருந்தது.
நரிக்கு இப்போது எச்சில் ஊறியது. இந்த ரத்தத்தைப் பருகுவதற்காகத்தானே இத்தனை நாட்களாக காத்திருந்தது.
அவை உக்கிரமாக மோதிக் கொண்டிருக்கும் போதே, வடியும் ரத்தத்தை உற்சாகமாக குடித்துக் கொண்டிருந்தது நரி.
ரத்தத்தை பருகும் அவசரத்தில் ஆடுகளின் கொம்புகளுக்கு இடையே சிக்கி கொண்டது நரி. தலையில் பயங்கரமான அடி. ரத்தம் பீய்ச்சி அடித்தது. சற்று நேரத்தில் அதே இடத்தில் செத்து விழுந்தது நரி.
குட்டீஸ்... மற்றவர்களுக்கு கெடுதல் செய்தால் அதே கேடு உங்களுக்கும் வரும். எனவே, பிறருக்கு எப்போதும் நல்லதையே நினைங்க.
