PUBLISHED ON : ஜன 04, 2020

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, முனிசிபல் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1950ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக சீதாராமன் இருந்தார். படிப்பில், முதல் மாணவனாக வந்து கொண்டிருந்தேன்.
அந்த ஆண்டு புதிதாக மாரியப்பன், என் வகுப்பில் சேர்ந்திருந்தான். அரையாண்டு தேர்வு, கணக்குப் பாடத்தில் முதலாவதாக வந்தான். மற்ற பாடங்களில் எனக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தான்.
விடைத்தாள் வழங்கிய அன்று மாலை, பள்ளி விட்டதும் என்னருகில் வந்தவன், 'முழு ஆண்டுத் தேர்வில், நீ முதல் மாணவனாக வரும்வகையில் சில கேள்விகளுக்கு விடை எழுதாமல் விடுகிறேன்; என் மீது கோபித்து பேசாமல் இருந்திடாதே...' என்று, நா தழுதழுக்க கூறினான்.
அவன் பேச்சில் நெகிழ்ந்து, 'இரண்டு பேரும் முதலிடத்தில் வர முயற்சித்து படிப்போம். உன் மீது எந்த கோபமும் இல்லை...' என, கூறினேன். பள்ளி இறுதி தேர்வில், போட்டி போட்டு படித்து, முதல் மாணவர்களாக வந்தோம். நட்பை சிறப்பாக பேணினோம்.
இப்போது, 80 வயதாகிறது; என் பேரன், பேத்திகளிடம், அந்த சம்பவத்தை கூறி, நன்றாக படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன்.
- தேவபிரசாத், சென்னை.
தொடர்புக்கு: 88701 73798
