தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கவிராயர்

கவிராயர்

கவிராயர்


PUBLISHED ON : நவ 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''என்ன யோசிக்கிறீர்?'' என்று கேட்டான் மருதுபாண்டியன்.

அதற்குச் சர்க்கரைப் புலவர், ''ஒன்றும் யோசிக்கவில்லை. தாங்கள் அந்தக் குழந்தையிடம் கொண்ட அன்புக்கு, நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் விளையாட்டுப்பிள்ளை. அவன் எங்காவது சென்று விளையாடிக் கொண்டிருப்பான். நானே அவனைப் பிறகு ஒருநாள் அழைத்து வருகிறேன்!'' என்று கூறினார்.

அதைக் கேட்ட மன்னன், ''உங்கள் பிள்ளையின் விளையாட்டைப் பார்ப்பதில் கூட எனக்குத் தனி இன்பம் இருக்கும். அவனது விளையாட்டைத்தான் பார்க்கிறேன். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் நாகங்களைக் குட்டி போட வைத்து விட்டானே! அவனை உடனே நான் பார்க்க வேண்டும். தங்கள் உள்ளத்தில் அதற்குத் தடை உண்டோ?'' என்று கேட்டான்.

சர்க்கரைப் புலவர் உடனே, ''தடை எவ்வாறு இருக்க முடியும்? தங்கள் அன்புப் பார்வைக்குக் குழந்தை இலக்காவது பெரிய பாக்கியம் அல்லவா? அவன் இப்படிப்பட்ட இடத் துக்குத் தாயை விட்டு தனியே சென்றவன் இல்லை. சிவிகையைக் கண்டாலும் பயப்படுவான்!'' என்று கூறினார்.

அதைக் கேட்ட மருதுபாண்டின், ''தாங்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறதே! தாங்கள் சிவிகை ஏறும் கவிமன்னர். தங்களோடு குழந்தையும் சமஸ்தானத்திற்கு வந்திருப்பான். சிவிகையும் ஏறியிருப்பான். அவன் எவ்வாறு பயப்பட முடியும்?'' என்று கேட்டான்.

புலவர் உடனே, ''நான் அதைச் சொல்லவில்லை. தாங்கள் அனுப்பும் சிவிகைக்காரர்களைப் பார்த்துப் பயந்துவிடுவான் என்றேன். இந்த இடத்துக்கேற்ற மிடுக்குடையவர்கள் சிவிகைக்காரர்கள். இவர்களைப் போன்றோரை அவன் இதுவரை பார்த்ததில்லை. அதனால், அவன் 'வரமாட்டேன்' என்று சொல்லி அழுதாலும் அழலாம். தங்கள் அழைப்பின் அருமையை அவன் அவ்வளவாக அறியமாட்டான். அதனால் நானே அவனுக்கு எவ்வாறு சொல்லவேண்டுமோ, அவ்வாறு சொல்லிப் பிறகு ஒருநாள் அழைத்து வருகிறேன்!'' என்று கூறினார்.

மருதுபாண்டியன் மீண்டும், ''அந்த ஒருநாள் இந்த நாளாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அவன் இங்கே வருவதில் தங்களுக்கு விருப்பம் இல்லை போல் தெரிகிறது!'' என்று கூறினான்.

அதைக் கேட்ட சர்க்கரைப் புலவருக்கு, தமது உள்ளக்கருத்தை எடுத்துச் சொல்லத் துணிவில்லை. அதனால் அவர் சிறிது நேரம் என்ன சொல்வது என்று விழித்துக் கொண்டிருந்தார். அவர் அவ்வாறு இருப்பதைக் கேட்ட மருதுபாண்டியன், புலவருடைய மவுனம் சம்மதத்தைத் தெரிவிக்கிறது என்று நினைத்தான். உடனே சிவிகையோடு அரண்மனை ஆள் ஒருவரையும், குழந்தையை அழைத்து வரச் சொல்லி அனுப்பிவைத்தான்.

அதைத் தடுக்க புலவருக்குத் துணிவில்லை. அதனால், 'இறைவனே! நீ தான் குழந்தைக்குக் கண்ணேறு வராமல் காக்க வேண்டும்' என்று தம் மனதுக்குள் வேண்டிக் கொண்டார். அவ்வாறு வேண்டிக் கொண்டாலும் தம் உள்ளத்தில் குழந்தைக்கு என்ன நேருமோ, என்ன நடக்குமோ? என்ற அச்சம் கொண்டிருந்தார்.

குழந்தையை அழைக்கச் சென்ற பல்லக்குத் திரும்பி வரும் வரையில் மருது பாண்டியனும், சர்க்கரைப் புலவரும் உரையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். சிறுகம்பையூர் சென்ற சிவிகை சிறிது நேரத்தில் குழந்தையை அழைத்து வந்து சேர்ந்தது.

குழந்தையின் தாய், மன்னன் மருதுபாண்டியனிடமிருந்து அழைப்பு வந்துள்ளதை மனதில் கொண்டு, அவனை நன்கு தலைவாரி நல்ல ஆடைகளை அணிவித்து தாமதிக்காமல் அனுப்பி வைத்திருந்தாள். குழந்தை பல்லக்கிலிருந்து இறங்கினான். மருது பாண்டியன் அவனைக் கண்டதும், குழந்தை உண்மையிலேயே குழந்தைப் பருவம் உடையவனாக இருத்தலைக்கண்டு வியப்படைந்தான்.

எதிர்கொண்டு விரைந்து சென்று குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான். மருதுபாண்டியன் அதன் பிறகு குழந்தையை ஓர் ஆசனத்தில் அமரச் செய்தான்.

குழந்தையைப் பார்த்து, ''இந்த ஏட்டில் குட்டி நாகபந்தம் எழுதியது யார்?'' என்று கேட்டான்.

அதற்குக் குழந்தை கொஞ்சமும் தயங்காமலும், அஞ்சாமலும், ''நான்தான்!'' என்று மிடுக்குடனும் பதில் கூறிவிட்டு, அருகில் இருந்த தன் தந்தையைத் திரும்பிப் பார்த்தான். சர்க்கரைப்புலவருக்கு முன்பு இருந்த அச்சம் அப்போது இல்லை. அதற்குப் பதிலாக அவரிடத்தில் பெருமையுணர்ச்சி காணப்பட்டது.

மருது பாண்டியன் குழந்தையைப் பார்த்து, ''அந்தப் பாடலை ஒருமுறை சொல்!'' என்று கேட்டான்.

குழந்தையும் தான் எழுதிய குட்டி நாகபந்தப் பாடலைத் தயங்காமல் சொல்லி முடித்தான். அதனால், பாண்டியனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கும், சர்க்கரைப் புலவருக்கு உண்டான பெருமைக்கும் அளவே இல்லை.

அந்நிலையில் மருதுபாண்டிய மன்னன், ''புலவரே!'' என்று சர்க்கரைப் புலவரை அழைத்தான். சர்க்கரைப் புலவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்.

மருதுபாண்டியன் அப்புலவரை நோக்கி, ''இந்தக் குழந்தை இனி அரண்மனைக் குழந்தை. இவன் இனி என் அருகில் இருக்க வேண்டும்!'' என்று கூறினான். அதைக் கேட்ட சர்க்கரைப் புலவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி உண்டாயிற்று; மறுபக்கம் வருத்தம் உண்டாயிற்று.

மருதுபாண்டியன் புலவரது மன நிலையைக் குறிப்பால் அறிந்து, ''புலவரே! அரண்மனையிலேயே இருப்பதென்றால், தாய் தந்தையரைப் பார்க்காமல் இருப்பது என்று பொருள் அன்று. வேண்டும் போதெல்லாம் குழந்தை சிறுகம்பையூர் வந்து உங்களைப் பார்த்துவிட்டு வருவான். ஆனால், அங்கு தங்கமாட்டான்!'' என்று கூறித் தெளிவு படுத்தினான்.

அதைக் கேட்ட பின்னரும் சர்க்கரைப் புலவர் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவருக்குப் பதிலாகச் சொல்வதற்கு எதுவும் புலப்படவில்லை.

அப்போது மருதுபாண்டியன், ''நீங்கள் குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறபோது, நான் இவனைப் பல்லக்கில் அனுப்பி வைக்கிறேன். தாங்களும், தங்கள் மனைவியாரும் இங்கு வந்து தங்கிப் பார்த்துவிட்டு போகலாம். தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!'' என்று கூறினான்.

அதைக் கேட்ட சர்க்கரைப்புலவர், ''மன்னரின் பேரன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? குழந்தைக்கு கிடைத்த பாக்யத்தை நான் எவ்வாறு புகழ்வேன்! ஆனால்...'' என்று கூறி முடிக்காமல் இழுத்தார்.

அதைக் கேட்ட மருதுபாண்டியன், ''ஆனால் என்று இழுக்கிறீர்களே! ஏதோ தடை சொல்வீர் கள் போலிருக்கிறதே! இவனைக் காப்பாற்றுவதில் நான் அக்கறை கொள்ள மாட்டேன் என்று நினைக்கிறீர்களா? என் வார்த்தையில் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டான்.

அதைக் கேட்ட சர்க்கரைப் புலவர் உடனே, ''நான் அப்படியெல்லாம் நினைப்பேனா? அவ்வாறு நினைப்பதற்கு இடமே இல்லை. எங்கள் வீட்டில் இருப்பதை விட இங்கு ஆயிரம் மடங்கு அதிக வசதிகள் இருப்பது எனக்குத் தெரியுமே. எனக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. குழந்தை கவிபாடும் திறமை பெற்றிருக்கிறான் என்பது உண்மை. ஆனால், இலக்கண இலக்கியங்களில் அதிகமாக புலமையாழம் இருக்க வேண்டும். குழந்தை பாடம் கேட்டல் இன்னும் முடியவில்லை. பாடம் முடிந்த பிறகு நானே அழைத்து வந்து உங்களிடம் ஒப்புவித்து விடுகிறேன்!'' என்று கூறினார்.

அதற்கு மருதுபாண்டியன், ''குழந்தை தங்களிடம் பாடங்களைக் கேட்க வேண்டியது அவசியமே. அந்தப் பாடங்களைத் தாங்கள் இங்கு வந்து சொல்லிக் கொடுங்கள். உங்களையும் நான் அடிக்கடி பார்த்து மகிழ வசதியாக இருக்கும். இங்கு எத்தனையோ புலவர்கள் வருவர். அவர்களைக் கொண்டும் சில நூல்களைக் குழந்தைக்குக் கற்பிக்க வசதியாக இருக்கும்!'' என்று இடம் கொடுக்காமல் பேசினான்.

அந்நிலையில் சர்க்கரைப் புலவர், குழந்தையினிடத்தில் பாண்டியனுக்கு உண்டான அன்பு மிகவும் வலிமைபெற்று விட்டது என்பதை அறிந்தார். அதன் பிறகு பாண்டியனிடம் வாதாடிப் பயன் அடையமுடியாது என்பதையும் உணர்ந்தார். அதனால், மருதுபாண்டிய னின் விருப்பத்துக்கு இணங்கினார்.

அன்று முதல் குழந்தை மருதுபாண்டியனின் வளர்ப்புப் பிள்ளையாகவும், அரண்மனைப் புலவனாகவும் அமைந்துவிட்டான். குழந்தைப் பருவத்தையுடைய குழந்தை அரண்மனைப் புலவராக அமர்ந்த செய்தி, எங்கும் ஓர் அதிசயமாகப் பரவியது.

குழந்தையினுடைய கவிப்புலமையைக் கண்டுகளித்த மருதுபாண்டியன், 'கவிராயர்' என்னும் சிறப்புப் பட்டத்தையும், குழந்தைக்கு அளித்துச் சிறப்பு செய்தான். அதுமுதல் எல்லாரும், 'குழந்தைக்கவிராயர்' என்றும், 'பாலகவீசுரர்' என்றும் குழந்தையை அழைத்து மகிழ்ந்தனர்.

- முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us