PUBLISHED ON : ஜன 08, 2022

மதுரை, தியாகராஜர் உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் அண்ணனும் அதே வகுப்பில் படித்தார்.
குடும்ப வறுமையால் இருவருக்கும் ஒரே புத்தகம் தான் வாங்கிக் கொடுத்திருந்தனர் பெற்றோர். அதை மாறி மாறி படித்தோம்.
ஆண்டு இறுதித் தேர்வுக்கு, இரண்டு மாதங்களே இருந்தன. ஒரு நாள், வகுப்பு நண்பன் சுருளி, புத்தகங்களை இறுக்கி பிடித்தபடி, பள்ளி மைதானத்தில் ஓடிக் கொண்டிருந்தான். அவன் கையில் இருந்த ஒன்று தவறி விழுந்தது; அதை எடுத்து பார்த்தேன். ஆங்கில பாட புத்தக வழிகாட்டி நுால்.
சுற்றும் முற்றும் பார்த்தபடி, மறைத்து எடுத்து சென்று படித்தேன். தேர்வுக்கு ஒரு வாரம் முன், உரியவனிடம் புத்தகத்தை நீட்டினேன்; ஆச்சரியத்தோடு, 'அட... காணாம போன புத்தகம்... திரும்ப வந்திருக்கிறதா...' என சிரித்தான். உண்மையை கூறி மன்னிப்பு கேட்டேன்.
மிகவும் நிதானமாக, 'புத்தகம் உன்னிடம் இருப்பது முன்பே தெரியும். உன் நிலை அறிந்து, புதிய புத்தகம் வாங்கி விட்டேன்; இதை நீயே வைத்துக்கொள்; இன்னும் நன்றாக படி...' என்று கூறினான். அந்த பெருந்தன்மையை எண்ணியபடி தலைகுனிந்தேன்.
இப்போது எனக்கு, 72 வயது; தமிழ்நாடு மின் வாரியத்தில் சிறப்பு நிலை முகவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த நிகழ்வு நினைவுக்கு வரும் போதெல்லாம் அந்த நண்பனை வணங்குகிறேன்.
- மு.சுந்தரம், மதுரை.
தொடர்புக்கு: 98651 38337
