PUBLISHED ON : ஏப் 22, 2011

முன்னொரு காலத்தில் கிர்கிஜ் என்ற கிராமத்தில் சுஹண்டா என்ற மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் தனது தோட்டத்தில் விளைந்த முந்திரிக் கொட்டைகளை அரசருக்குப் பரிசாகக் கொடுக்க முடிவு செய்தார்.''எங்கே போகிறாய் சுஹண்டா?'' என்று அவரது நண்பர் கேட்டார்.''எனது தோட்டத்தில் விளைந்த முந்திரிக் கொட்டைகளை அரசருக்குப் பரிசாகக் கொடுக்க எடுத்துச் செல்கிறேன்!'' என்றார்.''உன்னுடைய முந்திரிக் கொட்டைகள் அவருக்குத் தேவையில்லை. அவருக்கு பிடித்தமான முந்திரிப் பழங்களை எடுத்துச் செல்!'' என்றான் நண்பன். அவன் ஒரு பொறாமைக்காரன். எங்கே தன் நண்பனுக்கு பரிசு கிடைத்து விடுமோ என்று பயந்தே இப்படிக் கூறினான்.நண்பர் சொல்வதும் சரிதான் என்று எண்ணி, முந்திரிக் கொட்டைகளை வீட்டில் கொண்டு வைத்துவிட்டு, சில முந்திரிப் பழங்களை எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார் சுஹண்டா. அரசருக்கு முந்திரிப் பழங்கள் பிடிக்காது. தமது காவலர்களை அழைத்து முந்திரிப் பழங்களால் சுஹண்டாவை அடித்து விரட்டுமாறு உத்தரவிட்டார்.அரசர் உத்தரவிட்டது போலவே காவலர்கள் சுஹண்டாவின் முந்திரிப் பழங்களைப் பிடுங்கி அவர் மீது எறிந்தனர். சில பெரிய முந்திரிப் பழங்கள் அவரைத் தாக்கிய போது மகிழ்ச்சியில் உரக்கச் சொன்னார்.''ஓ நன்றி! ஓ மிக மிக நன்றி நண்பா!'' என்று கத்தினார் சுஹண்டா.இதைக் கேட்டு அரசர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார்.''என்ன சொல்கிறாய்? என் ஆட்கள் உன்மீது முந்திரிப் பழங்களை வேகமாக எறிந்து கொண்டிருக்கின்றனர். நீயோ அவர்களுக்கு நன்றி சொல்கிறாயே!''''அரசே! உங்களுக்கு என்னுடைய தோட்டத்தில் முதல் முதலில் விளைந்த முந்திரிக் கொட்டைகளைப் பரிசாகக் தர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் நண்பர் ஒருவர் முந்திரிப் பழங்களை எடுத்துச் செல்லுமாறு யோசனை கூறினார். அவரின் யோசனையைக் கேட்காமல் முந்திரிக் கொட்டைகளைக் கொண்டு வந்திருந்தால், என் தலை என்ன ஆகியிருக்கும் என்பதைச் சற்றே நினைத்துப் பார்த்தேன். அதனால்தான் என் நண்பருக்கு நன்றி சொன்னேன்!'' என்றார்.வெட்கமடைந்த அரசர் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அவருக்கு நிறைய பரிசு பொருட்கள் கொடுத்தனுப்பினார்.***
